அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் 45

0

இசைக்கருவிகள் அருங்காட்சியகம், ப்ரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் (2)

 

சுபாஷிணி

​இந்த அருங்காட்சியகத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட இசைக்கருவிகள் இருப்பதாக முந்தைய பதிவில் தெரிவித்திருந்தேன். இந்த வடிவத்தில்தான் ஒரு இசைக்கருவி இருக்கும் என்ற நமது பழகிப் போன கண்களுக்கு சவால்விடும் வகையில் இங்கிருக்கும் இசைக்கருவிகள் இருக்கின்றன என்பது தான் ஆச்சரியம்.

1

பியானோவில் பழங்காலத்து வகையிலிருந்து இக்காலம் வரை என பலவேறுபாடுகளைக் கொண்ட பியானோக்கள்; வயலினில் சிறியது பெரியது நடுத்தர அளவு என வித்தியாசங்கள்; மேள வகை இசைக்கருவிகளில் தோலினால் செய்யப்பட்டவை, மரத்தால் செய்யப்பட்டவை- சிறியவை பெரியவை என வேறுபாடுகள் என ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் விளங்குகின்றன. சாக்ஸஃபோன் கருவிகளில் வெவ்வேறு வகைகள். அதன் பளபளக்கும் வெளிப்பகுதிகள் இசைப்பிரியர்கள் மட்டுமல்ல.. கண்காட்சிக்கு வந்திருக்கும் எல்லோரையும் கவரக்கூடியதாக இருக்கின்றது.

2
இவைதான் இசைக்கருவிகள் என அடையாளம் காணமுடியாத வகையில் தூக்கணாங்குருவிக் கூடுகளை ஒத்த வடிவிலான சில இசைக்கருவிகள் ஆச்சரியமூட்டுகின்றன. குழல் வகை கருவிகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. பறை வடிவ இசைக்கருவிகள் மொத்தமான வடிவத்தில் மெலிதான வடிவத்தில் சிறியவை பெரியவை என பல நாடுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை இங்கு காட்சிக்கு உள்ளன. மனித குல வரலாற்றில் குழல் போன்ற இசைக்கருவிகளும் தாள இசைக்கருவிகளும் மிகப் பழங்காலம் தொட்டே உள்ளன என்பதை நேரில் இங்கு வந்து பார்ப்பதன் வழி நிச்சயம் அறிந்து கொள்ள முடியும்.

3

இந்த அருங்காட்சியகத்தை அடைவது மிகச் சுலபம். பிரஸ்ஸல்ஸ் அரச மாளிகையின் இடப்புறத்தில் இருக்கும் Rue Montagne de la Cour/Hofberg 2 சாலையில் Old England department store கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது. 18ம் நூற்றாண்டின் புதிய அமைப்பை பிரதிபலிக்கும் இக்கட்டிடம் 1899ம் ஆண்டில் கட்டப்பட்டது.

4

இசைக்கருவிகளை பார்ப்பது மட்டுமல்லாது ஒவ்வொரு இசைக்கருவியையும் இசைத்தால் வெளிப்படும் ஓலியையும் கேட்டு மகிழும் வகையில் இங்கே கட்டிட அமைப்பே அமைந்துள்ளது. கண்காட்சிப் பகுதி ஒவ்வொன்றிலும் அங்கு காட்சிக்கு உள்ள இசைக்கருவிகளின் முன்னே நின்று தரையில் இருக்கும் சென்சர் பட்டனை அழுத்தினால் நமது காதில் நாம் பொறுத்திக் கொள்ளும் headset வழியாக நாம் இசையைக் கேட்டு ரசிக்க முடியும். என் கண்களுக்கு வித்தியாசமாக எனக்குத் தெரிந்த இசைக்கருவிகளையெல்லாம் கேட்கும் எண்ணத்தில் நான் இதனை முயற்சி செய்து பார்த்து மாறுபட்ட இசை ஒலிகளைக் கேட்டு வியப்படைந்தேன்.

எத்தனை எத்தனை இசைக்கருவிகள்.. அவை எழுப்பும் ஒலிகள் தான் எத்தனை எத்தனை..!

மனித வாழ்வில் பல்வேறு சிந்தனைகளால் இழுத்தடிக்கப்படும் மனம் அமைதியுற இசைக்கருவி வாசித்தல் உதவும். சிலருக்கு இயற்கையாகவே இசைக்கருவிகளில் ஏதேனும் ஒன்றினை வாசிக்க விருப்பம் இருக்கின்றது. பலருக்கு பெற்றோர் அல்லது சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால் ஏற்படும் ஆர்வம் தூண்டுதலாக அமைகின்றது. எப்படியாகினும் ஏதாகினும் ஒரு இசைக்கருவியை பயிற்சி செய்தலை வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் பழக்கிக் கொள்வது அதிலும் குறிப்பாக இளம் வயதினில் இருந்தே இவ்வகை பயிற்சிகளில் ஈடுபடுவது இசைக்கருவிகளில் திறமையைப் பெருக்கிக் கொள்ள மிக உதவும். பள்ளிக் கூட பாட நடவடிக்கைகளோடு இசைக் கருவிகளிலும் குழந்தைகளின் நாட்டத்தை பெற்றோரும் ஆசிரியரும் செலுத்த வழிகாட்ட வேண்டியதும் மிக முக்கியம்.

5

பெல்ஜியம் வருபவர்கள் தவறாது வந்து பார்க்க வேண்டிய ஒரு கூடம் என்றால் இந்த அருங்காட்சியகத்தை கூறுவேன். இந்த அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வரும் போது நம் மனம் மாறுபட்ட சிந்தனையில் மூழ்கியிருப்பதை நிச்சயம் உணர்வோம்.

அடுத்த பதிவில்.. மற்றுமொரு நாட்டில் .. மற்றுமொரு அருங்காட்சியகத்தைக் காண்போமா..?

சுபா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *