தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

0

amuthe_thamilile

Rasul_Gamzatovடாகெசுதான் என்றொரு நாடு இருக்கிறது. அங்கு முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிறதாம். அதில் ஒன்று, ‘அவார்’ எனும் மொழி. இந்த மொழியின் மீப்பெரும் கவிஞர் ரசூல் கம்சடோவ் (Rasul Gamzatov)என்பவர். தம் மொழியின் மீது நம் பாரதிக்கு ஈடாக ஆழ்ந்த காதல் கொண்டிருந்தவனாம் ரசூல். ‘ஒருவேளை இந்த அவார் மொழி நாளை இறந்துவிடும் என்ற நிலை வந்தால், நான் இன்றே இறந்துவிடுவேன்’ என்றானாம் அக்கவி! கம்சடோவ் இத்தாலி நகரில் இருந்தபோது, தம் நாட்டினர் ஒருவரைச் சந்தித்தாராம். இந்தச் சந்திப்பு குறித்து தாம் தம் தாய்நாடான டாகெசுதான் திரும்பியவுடன் தாம் சந்தித்த அந்த நபரின் தாயிடம் சென்று குறிப்பிட்டபோது, அவருடைய அன்னையார் அவரிடம் முதலில் கேட்ட கேள்வி, ‘என் மகன் தங்களுடன் அவார் மொழியில்தானே பேசினான்?’ என்பதுதானாம். அதற்கு ரசூல் கம்சடோவ், ‘இல்லையே அம்மா, தங்கள் மகன் பிரெஞ்சு மொழியில்தான் பேசினார். ஏன் என்று எனக்கும் விளங்கவில்லை’ என்றாராம். உடனே அந்தத்தாய் என்ன செய்தார் தெரியுமா? அவர் தாம் அணிந்திருந்த துணியை எடுத்து தம் தலையின்மீது போட்டுக்கொண்டாராம். ஆம், அந்த நாட்டின் கலாச்சார மரபின்படி ஒருவர் இறந்துவிட்டால், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தலையில் துணியை போட்டுக்கொள்வார்களாம். தம் மகன் தமது தாய் மொழியில் பேசவில்லை என்பதால் அவனை இறந்தவனாகக் கருதிய அந்தத் தாயின் மொழிப்பற்றை என்னென்று சொல்வது! நம் நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழ் தாய்மார்களும் இதனை கருத்தில் கொண்டு குழந்தைகளை வழி நடத்தினால் நம் தமிழ் மொழி இன்னும் பல கோடி காலங்கள் நிலைத்து நிற்காதா?

தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *