தொடரும் பொருளாதார வீழ்ச்சி..

0

பவள சங்கரி

தலையங்கம்

பொருளாதாரச் சந்தையின் நேற்றைய வீழ்ச்சிகள் இன்றும் தொடருகின்றன. பொதுவாகவே அன்றைய நாளின் சந்தை துவக்கம், ஜப்பானிலிருந்துதான் துவங்குகிறது. பொருளாதார சந்தை தொடக்கமே சரிவுடன் ஆரம்பமாகியுள்ளது. அதைத் தொடர்ந்து சங்காய் பொருளாதாரச் சந்தையும் 6% சரிவுடன் தொடங்கியுள்ளது. இது இப்படியே தொடருமானால் சீனா, இந்தியா, ஆசுதிரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரச் சந்தைகள் பெருமளவில் விழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாணய மதிப்புகளில் சரிவுகளைச் சந்திக்காமல் தாக்கு பிடிப்பது யூரோ மற்றும் பவுண்டின் மதிப்புகள் மட்டுமே. இவற்றிற்கு அடிப்படை காரணமாக இருப்பது, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்ததும் சீனா தன்னிச்சையாக தனது நாணயத்தின் மதிப்பை குறைத்ததுமாகும். இந்த மதிப்பு குறைப்பின் மூலமாக தன்னுடைய பொருளாதாரத்தை சீர் செய்யும் நோக்கோடு செயல்பட்டது தவறான அணுகுமுறையாகிவிட்டது. அதனுடைய பொருளாதார நிலை சீர்படுவதற்குப் பதிலாக மேலும் படுபாதாளத்திற்கு சென்றடையும் அபாயமும் உள்ளது. கச்சா எண்ணெயின் கொள்முதலை மிகவும் குறைத்ததும் ஒரு தவறான நடவடிக்கையாகும். மீண்டும் பழைய நிலையில் உற்பத்தியைப் பெருக்கி, ஏற்றுமதியை அதிகரித்தால் மட்டுமே இந்நிலையிருந்து மீண்டு வரமுடியும். ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் போன்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சலுகைகளை அறிவித்தால் மட்டுமே இந்தச் சரிவுகளிலிருந்து பொருளாதாரத்தை தடுத்து நிறுத்த முடியும். வங்கிக் கொள்கைகள் மாறுபட வேண்டும். நாணய மதிப்பை குறைப்பதற்குப் பதிலாக வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும். சீனாவின் பாதிப்பு என்பது தமதளவில் மட்டும் நிற்காமல் உலகையே பாதிக்கக்கூடிய நிலையில் இருக்கிறது. மிக பிரமாண்டமாக வளர்சியடைந்த சீனா, அதை தக்கவைத்துக்கொள்ள போராட வேண்டிய நேரமிது. சீனா தன்னுடைய நாணயத்தின் மதிப்பைக் குறைத்ததால் மற்ற நாடுகளின் நாணய மதிப்பும் தானாகக் குறைய ஆரம்பித்துள்ளது. கச்சா எண்ணெயின் விலை என்றும் இல்லாத அளவிற்கு நேற்று மட்டும் 1.7 டாலர் குறைந்து 43 டாலரை அடைந்துள்ளது. இது இன்னும் தொடர்ந்து 40 டாலர்களை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து என்றாலும் அப்படி விலையேறும் வாய்ப்பு குறைவு. ஏனெனில் மக்களிடையே வாங்கும் சக்தி மிகவும் குறைந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய பெரும் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். பங்குச் சந்தையில் மேலும் நிலையற்ற தன்மை நிலவி வரும் என்கிறனர். தொடர்ந்து சரிவையே சந்திக்கப்போகும் அபாயமும் இருப்பதாகத் தெரிகிறது.

மத்திய நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கி தலைவரும், இந்தியாவை சரிவிலிருந்து தடுத்து நிறுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள், இந்தச் சரிவிலிருந்து எப்படி மீட்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உற்பத்தியாளர்களையும், ஏற்றுமதியாளர்களையும் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ரூபாயின் மதிப்பை சரிவிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள் குறித்தும் எதிர்பார்ப்புகள் வலுவடைந்துள்ளது. மத்திய வங்கி வட்டி விகிதங்களை பழைய அளவீடுகளான 8 அல்லது 7.25 சதவிகிதத்திற்கு குறைக்குமா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு ஏற்படும் வகையில் இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *