சுரேஜமீ

திட்டமிடல்

 

peak1

வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்!

என்ற பழமொழி யாவரும் அறிந்த ஒன்றே. ஏன் இவை இரண்டும் மட்டும் நம் சமூகத்தில் மிகப் பெரும் சவால் களாகக் கருதப்பட்டன? ஏதோ ஒரு காரணமில்லாமல், இந்தப் பழமொழி வந்திருக்க வாய்ப்பில்லை. சற்று யோசித்துப் பார்த்தால், ஒரு திருமணத்தை நடத்துவதற்கோ அல்லது ஒரு வீட்டைக் கட்டுவதற்கோ அதிகப் படியான உழைப்பு தேவைப்படுகிறது. உழைப்பு மட்டும் போதுமா? எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்ற முன் யோசனை தேவைப்படுகிறது.

வேறென்னலாம் தேவை என்று ஒரு பட்டியலிட்டால்;

1. பணம்
2. இடம்
3. பணியாளர்கள் தேர்வு
4. கொள்முதல் தொடர்பான செயல்கள்
5. ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பணிகள்
6. காலம் கருதிச் செய்யும் பணிகள்

என அவரவர் தகுதிக்கேற்ப பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஆனால், இவையெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ , அனேகமாக அனைவர் வாழ்விலும் நிச்சயம் ஒரு முறையேனும் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

இதை நிறைவேற்ற நாம் எடுக்கும் முயற்சிகளுக்கும், அது தொடர்பான நேரமேலாண்மைக்கும்,

மேலாண்மையியல் கொடுத்த பெயர் ‘திட்டமிடல்’!

ஆக ‘திட்டமிடல்’, என்ற பதம் நமக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், இற்றை நாட்களில் திட்டமிடுதல் இல்லாமல் ஒரு பயணம் கூட நம்மால் மெற்கொள்ள இயலாது எனும்போது

வாழ்க்கையில் வெற்றி பெற திட்டமிட வேண்டாமா?

ஆங்கிலத்தில் சொல்வார்கள்….

‘நாம் திட்டமிடத் தவறுகிறோம் என்றால்; தவறுதலுக்குத் திட்டமிடுகிறோம்’ என்று!

அப்படியானால் ‘திட்டமிடுதல்’ என்பது என்ன? அதை எப்படிக் கையாள்வது? அதன் மூலம் வெற்றியைத் தொடமுடியுமா?

முடியும் என்கிறார் திருவள்ளுவர்! ஆம்! இதோ அதற்கான சாட்சிக் குறள்!

‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்!”

இன்றைக்கு எதை வேண்டுமானாலும் காசாக்க முடியும் என்ற உலகத்தில், ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக, எந்த ஒரு முயற்சிக்கும் இடம் கொடாமல்,

யாராவது சொல்ல மாட்டார்களா? ஏதாவது எளிய வழி இருக்காதா? என்று எத்தனை பயிலரங்கங்கள்? கருத்தரங்கங்கள்? பயிற்சிப் பட்டறைகள் என ஊடகங்கள் வாயிலாக அறிந்து,

உடனே முதல் ஆளாகப் பதிவு செய்கிறோம்?

இதில் இருக்கும் ஆர்வத்தை, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்தினால்,

நம் தந்தை எப்படி ஒவ்வொரு விடயத்தையும் கையாள்கிறார்; நம் ஆசிரியர் என்ன செய்கிறார்? வீட்டில் உள்ள முதியவர்கள் எப்படி ஒரு பிரச்சினையைக் கையாள்கிறார்கள் என்று உற்று நோக்கக் கற்றுக் கொண்டால்,

நிச்சயமாக ஒரு திட்டமிடுதலின் அடிப்படை மேலாண்மை நமக்கு எளிதில் புலனாகும்!

சாகச வார்த்தைகளைக் கண்டு அச்சம் கொள்ளாமல், எந்த வார்த்தையையும் நம் வாழ்க்கையோடு ஒப்பீடு செய்யக் கற்றுக் கொள்ளும் அடுத்த கணம்,

வாழ்வின் வெற்றிக்கான ரகசியம் நம் வசம் வந்துவிட்டதை உணர முடியும்.

திட்டமிடுதல் என்ற சொல்லின் அடிப்படை , ஒரு செயல் செய்வதற்கு முன்னால், அதன் தேவையை, அதனால் ஏற்படக் கூடிய நன்மையை, அந்த செயலைச் செய்வதற்கு நம்மைத் தயார் செய்வது எப்படி என்ற அணுகுமுறையை முதலில் வரைவாக்கம் செய்தல் அவசியம்.

உதாரணமாக, குடும்பச் சுற்றுலா ஒன்றைத திட்டமிடுகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான தேவைகள் என்ன எனப் பார்ப்போமா?

1. அழைக்கப்படும் நபர்கள் பட்டியல்
2. கால அளவு
3. மாதம் மற்றும் தேதி விவரங்கள்
4. உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை
5. செல்லும் இடம் தீர்மானித்தல்
6. பயணத்திட்டம்
7. முன் பதிவு செய்தல்
8. தங்குமிடம் தேர்ந்தெடுத்தல்
9. பயணத் தேவைகள் பட்டியலிடல்
10. இன்ன பிற

சற்றே யோசித்தால், ஒரு பயணச் சுற்றுலாவுக்கு நாம் செய்யக் கூடிய, மிகச் சாதரணமான செயல்பாடுகள்தான், இங்கு பட்டியலிடப் பட்டிருக்கின்றன.

எனவே, திட்டமிடல் என்பது நமக்குத் தெரியாமலே, நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தாலும், நாம் அதற்கு ஒரு மெருகூட்ட வேண்டிய ஒரு கட்டாயச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் மிகையாகாது.

எழுந்தது முதல் உறங்கும் வரை ஒரு நாளில் நாம் செய்யக் கூடிய செயல்களைத் திட்டமிடத் தொடங்குவோமேயானால்,

செயல்கள் ஒன்று வெற்றியில் முடிய வேண்டும்; அல்லது ஒரு வெற்றிக்குத் தளமாக அமைய வேண்டும்!

இவை தவிர வேறொன்றுக்கு வாய்ப்பே இல்லை! எதிர்மறை சிந்தனைகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்காதீர்கள்.

திட்டமிடல் என்பது எதேச்சையாக நடக்கக் கூடியது அல்ல; சற்று முன்யோசனையுடன் செய்யக் கூடியது என்பதை அறிவோம். அந்த வகையில், திட்டமிடல் நமக்கு பல வாய்ப்புகளை உருவாக்கும். சரியாகத் திட்டமிடக் கற்றுக்கொண்டால், நம் முன் இருக்கக்கூடிய வாய்ப்புகளைச் சீர்தூக்கிப் பார்த்து, சிறந்த முடிவுகளை மேற்கொள்ள முடியும்!

பிறகென்ன……வெற்றியாளர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இணைந்திருக்கும்!

இல்லத்தில் தொடங்கும் வரவேற்பு, இமயம் வரை சென்றால்,

சிகரம் கூடச் சற்றே உயரமாகும்…..உங்களைத் தொடுவதற்கு!

சிந்திப்போம்………………

அன்புடன்
சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *