பழமொழி கூறும் பாடம்

0

தேமொழி.

 

பழமொழி: நெய்த்தலைப் பால் உக்குவிடல்

 

விழுத்தொடைய ராகி விளங்கித்தொல் வந்தார்
ஒழுக்குடைய ராகி ஒழுகல், – பழத்தெங்கு
செய்த்தலை வீழும் புனலூர! அஃதன்றோ
நெய்த்தலைப்பா லுக்கு விடல்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 

பதம் பிரித்து:
விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர!-அஃது அன்றோ
நெய்த்தலைப் பால் உக்குவிடல்.

பொருள் விளக்கம்:
பெருமைதரத்தக்க பாரம்பரியப் பின்னணியுடன், பழம்பெரும் குடிப்பிறப்பைக் கொண்டவர் ஒருவர், சிறந்த ஒழுக்கம் நிறைந்த வாழ்வையும் கடைபிடித்தல் (எத்தகையது எனில்), முதிர்ந்த தேங்காய்கள் வயலில் விழும் வளமும், நீர் வளமும் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே; அத்தகைய நிலையன்றோ, பசும் நெய்யில் சிந்திய பால் கலந்துவிட்டது போன்ற நன்மை தருவதை ஒத்தது.

பழமொழி சொல்லும் பாடம்:
நற்குடிப்பிறப்பைக் கொண்டவர், குடிப்பிறப்பின் பெருமையைக் காக்கும் நல்லொழுக்கமும் கொண்டிருப்பதே சிறப்பைத் தரும். நற்குடிப்பிறப்பிற்கேற்ற நல்லொழுக்கத்தின் இன்றியமையாமையை வள்ளுவர்,

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். (குறள் – 133)

ஒருவர் ஒழுக்கமுடையவராக வாழ்வதே நற்குடிப்பிறப்பிற்கேற்ற பண்பாகும், தவறினால் அத்தகவையவர் இழிபிறப்பினராகக் கருதப்படுவர் என்றும்,

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார். (குறள்: 956)

குற்றமற்ற குடிபிறப்பினராக வாழவிரும்புபவர் வஞ்சகச்செயல்களை ஒத்த தகாத செயல்களைச் செய்யார் என்றும் பெருமைமிக்க நற்குடிப்பிறப்பினரின் நல்லொழுக்கத்தின் தேவையை உணர்த்துகிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *