–சு.கோதண்டராமன்.

 

காழியில் ஆழிப் பேரலை**

vallavan-kanavu11

 

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
-சம்பந்தர்

 

வருடங்கள் உருண்டோடின. செந்தீ வளவன் சிவபதவி அடைந்தார். அவரது மகன் செம்மேனிச் சோழன் பதவிக்கு வந்து தன் தந்தையின் லட்சியங்களைப் பின்பற்றினார். அவர் காலத்தில் காழி, கடையூர், வீழிமிழலை ஆகிய மூன்று மயானக் கோயில்களின் கூரைகள் செங்கல் கொண்டு ஒட்டிய மண்டபங்களாக மாற்றப்பட்டன. வடமர்களில் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குப் புதிய மானியங்கள் அளிக்கப்பட்டன.

கோயில் இல்லாத ஊர்களில் புதிய கோயில்கள் கட்டப்பட்டன. அம்மையாரின் பாடல்கள் மக்களிடையே பரவின. அதனால் மக்களுடைய மனப்போக்கில் நல்ல மாற்றம் தென்பட்டது. துன்பங்கள் வந்தால் அவற்றை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும், அதிலிருந்து விடுபட முயலக்கூடாது, அப்பொழுது தான் மறுபிறவி இல்லாத மோட்ச உலகம் கிடைக்கும் என்றது சமணம். நமக்குத் துயரம் வந்தால் இறைவன் மாற்றுவான், இவ்வுலக வாழ்வையும் மறுஉலக வாழ்வையும் தரக்கூடியவன் இறைவன், அவனைப் பணிந்தால் எந்த உலகம் வேண்டினாலும் தருவான், அவன் நம்மை மீண்டும் பிறக்க வைத்தாலும் அவனிடம் அன்பு செலுத்தினோம் என்றால் வாழ்க்கை சுமையாக இராது என்று அம்மையார் கூறியது மக்களுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. இறைநம்பிக்கை ஏற்பட்டது. எப்பொழுதும் மறு உலக வாழ்வைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையைப் புறக்கணிக்கும் போக்கு மறைந்தது. உலக வாழ்க்கையில் ஈடுபாடு ஏற்பட்டது. கலைகள் வளரத் தொடங்கின. கோயில் கட்டும் கலையில் புதிய உத்திகளைக் கையாளத் தொடங்கினர். சோழநாடு மீண்டும் பழைய பெருமையை அடையவேண்டுமென்ற எண்ணம் மக்களுக்கும் ஏற்பட்டது. படையில் மக்கள் பெரும் அளவில் சேரத் தொடங்கினர். களப்பிரர்களைத் தோற்கடித்து சோழநாட்டை அடிமைத்தளையிலிருந்து நீக்கவேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வளரலாயிற்று.

மேலும் சில வருடங்கள் கழிந்தன. செம்மேனிச் சோழனுக்குப் பின் அரசரான ஆதிரை வளவனும் தன் பாட்டனார் வகுத்த பாதையிலிருந்து சற்றும் வழுவாமல் தொடர்ந்து சென்றார். அவர் காலத்தில் பல போர்கள் நடந்தன. ஒவ்வொன்றிலும் அவரே வெற்றி பெற்றார். அவற்றின் முடிவில் உறையூர் மீட்கப்பட்டது. களப்பிரர்க்குக் கப்பம் கட்டி வந்த உறையூரின் குறுநில மன்னர் சோழர்களுக்குக் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார்.

அவர் காலத்தில் வெற்றிகரமான நிகழ்ச்சிகள் பல தொடர்ந்து நடைபெற்றமையால் அவர் சுபதேவர்* என்று அழைக்கப்பட்டார். அந்தப் பெயருக்குப் பங்கம் ஏற்படுத்துவது போல ஒரு நிகழ்வு நடைபெற்றது. ஆனால் முடிவில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பது போல பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு சுபமாகவே முடிந்தது.

கார்வானிலிருந்து வந்த அந்தணர்கள் ஒவ்வொருவராகச் சிவகதி அடைந்தனர். அவர்களது பிள்ளைகளும் பேரர்களும் கொள்ளுப் பேரர்களும் தலையெடுத்தனர். அவர்கள் தங்கள் முன்னோர்களின் தர்மத்தை விடாமல் தொடர்ந்து நடத்தி வந்தனர். வேத கோஷமும் வேள்விப்புகையும் அங்கு விண்ணை நிறைத்தன. கொள்ளிடத்திற்கு அக்கரையிலிருந்த தில்லையிலிருந்து மக்கள் அங்கு வந்து அவர்களது தீ வழிபாட்டையும் கோவிலில் நடைபெறும் லிங்க வழிபாட்டையும் கண்டு பரவசப்பட்டுச் சென்றனர். காழி அந்தணர்களும் ஆறு கடந்து சென்று மக்களுக்கு இறைநெறியையும் அறநெறியையும் புகட்டி வந்தனர்.

ஒரு நாள் காலை, காழிக் கடற்கரையிலிருந்து மீனவர்கள் கூட்டமாக ஓடி வந்தனர். ‘ஓடிப் போங்கள், கடல் உள்ளே வந்து கொண்டிருக்கிறது’ என்று கத்தினர். நிறுத்தி விசாரித்தவர்களிடம், ‘நிற்க நேரம் இல்லை. இன்னும் அரை நாழிகையில் கடல் இங்கே வந்துவிடும். தொலைவில் தென்னை மரம் உயரத்திற்கு அலை ஆர்ப்பரிக்கிறது. அது இங்கே வந்தால் ஊரே அழிந்துவிடும்’ என்று சொல்லிக் கொண்டே மேற்கு நோக்கி ஓடினர்.

காழி அந்தணர் குடும்பங்கள் யாவும் வீதிக்கு வந்து விட்டன. அவர்களில் கவுண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்த மிக மூத்தவர் ஒருவர் இருந்தார். கார்வானிலிருந்து வந்தவர்களில் அவர் மட்டுமே மிச்சம். 90 வயதைக் கடந்த அவர் கூறினார், “நாம் இந்தத் தெய்வத்தை நம்பி இங்கே குடியேறி இருக்கிறோம். அந்தத் தெய்வ நம்பிக்கையை நாம் காப்பாற்றினால் அது நம்மைக் காப்பாற்றும். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஓடுங்கள். இளைஞர்கள் இங்கு இருந்து லிங்கப் பெருமானை நீர் தாக்காத உயரத்துக்குக் கொண்டு போங்கள்” என்று உத்திரவிட்டார். நான்கு இளைஞர்கள் அவசரம் அவசரமாக லிங்கத்தை ஆட்டி அசைத்துப் பிடுங்கினர். தோளில் சுமந்துகொண்டு புறப்பட்டனர்.

“மனிதன் பிழைப்பதே பெரிய கஷ்டமாக உள்ளது. கல்லைக் கட்டிச் சுமக்கிறீர்களே! உங்களால் வேகமாக ஓட முடியுமா?” என்று கேட்டுக் கொண்டே ஓடினார் ஒருவர்.

“இது வெறும் கல் இல்லையப்பா. இது சோழநாட்டை முன்னேற்ற அரசர் செந்தீ வளவனும் அவரது சந்ததியாரும் மேற்கொண்டுள்ள தீவிர விரதத்தின் அடையாளம். அவர் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம். நம்பிக்கை மலையை நகர்த்தும் என்ற உண்மையின் அடையாளம். வடிவத்தைக் காத்தால் சக்தியைக் காக்கலாம். சக்தியின் பொருட்டாக வடிவத்தைக் காக்க வேண்டும். இதைக் காப்பதில் நாம் காட்டும் ஈடுபாடு நாட்டு மக்களுக்கு இன்றும் வருங்காலத்திலும் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும்” என்றார் பெரியவர். இளைஞர்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நின்றனர். அவரது யோசனையின் பேரில் ஒரு உயரமான தென்னை மரத்தை அணுகினர். ‘முடிந்தவர் முடிந்த வரை ஏறுங்கள் மரத்தில்’ என்றார் பெரியவர். அவருடைய பேரன் விச்வேசன்தான் முதலில் ஏறினான். வேறு பத்து இளைஞர்கள் ஏறி வெவ்வேறு உயரத்தில் தொத்திக் கொண்டனர். ஒருவர் தோள் மீது ஒருவராக நின்று ஒரு மனித ஏணியை உருவாக்கினர். மற்றவர்கள் ஒரு பிரப்பங்கூடையில் லிங்கத்தை வைத்தனர். நீண்ட பிரப்பங்கொடியால் அதைப் பிணைத்து அதன் முனையைக் கீழிருந்தவரிடம் கொடுத்தனர். அவர் அதைப் பிடித்துத் தூக்கி மேலே உள்ளவரிடம் கொடுக்க, படிப்படியாகக் கூடை உச்சாணியில் இருந்த விச்வேசனிடம் போயிற்று. அத்தனைப் பேரும் மரத்தைக் கட்டிக்கொண்டு அங்கேயே நின்றனர். உயிர் போனாலும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்ற உறுதியுடன் நமச்சிவாய மந்திரத்தைக் கோஷித்துக்கொண்டு நின்றனர்.

தொலைவில் அலைகள் தென்னைமர உயரத்துக்கு எழுவதையும் தடால் என்று கீழே விழுவதையும் மரத்தின் மேல் பகுதியில் நின்றவர்களால் பார்க்க முடிந்தது. அந்த உயரமான அலைகள் கரையை நோக்கி நகர்ந்தன. அவற்றின் விளைவால் ஊருக்குள் நீர் புகத் தொடங்கியது. தென்னை மரத்தைக் கட்டிக் கொண்டு நின்றவர்களில் கீழே இருந்தவரின் முழங்கால் வரை நீர் வந்தது. அது மேலும் உயர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. நமச்சிவாய கோஷம் இன்னும் வலுவாக எழும்பிற்று. நல்ல வேளையாக அப்படி ஆகாமல் அலை வரும்போது உயர்வதும் தாழும்போது வடிவதுமாக இருந்தது. கடல் கரையைக் கடந்து உள்ளே வரவில்லை. இப்படியே ஐந்து நாழிகை நேரம் கழிந்தது. இவர்களது உறுதியின் முன் கடல் தோல்வி அடைந்தது. அலைகளின் உயரம் குறைந்து கொண்டே வந்து இயல்பு நிலை ஏற்பட்டது. வந்த ஆபத்து நீங்கியது என்பதை உறுதி செய்துகொண்டபின் மெதுவாகக் கூடையை இறக்கினர். அதனுடைய பழைய இடத்தில் வைத்தனர்.

உச்சியிலிருந்து இறங்கி வந்த பேரன் ‘தாத்தா எங்கே?’ என்று கேட்டான். அந்த வினாவை எல்லோரும் எதிரொலித்தனர். ‘மற்றவர்களுடன் மேற்கு நோக்கிப் போயிருப்பாரோ’ என்றனர் சிலர். இல்லை. ‘அவர் மரத்தடியில் நின்றுகொண்டு ருத்ரம் சொல்லிக் கொண்டிருந்தாரே’ என்றனர் சிலர். மரத்தடிக்குப் போய்ப் பார்த்தனர். அங்கே கடல் நீர் வந்து சேறாக்கிய நிலத்தில் கிழவர் அமைதியாகப் படுத்திருந்தார். அசைத்துப் பார்த்தார்கள். அசைவில்லை. அவர் சிவகதியை அடைந்துவிட்டார். சோழமன்னர் அவரை எதற்காக அழைத்து வந்தாரோ, அந்தக் கடமையை நிறைவேற்றிவிட்ட நிறைவு தெய்விக ஒளியாக அவர் முகத்தில் பிரகாசித்தது.


*சுபதேவர்- பெரியபுராணத்தில் இந்தப் பெயர் தான் கொடுக்கப்பட்டுள்ளது.
** சுனாமி ஒன்று சம்பந்தர் காலத்துக்கு முன் ஏற்பட்டிருந்ததும் காழி நகரம் அதில் தப்பிப் பிழைத்ததும் அவரது பாடல்கள் பலவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *