அவன், அது, ஆத்மா (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

— மீ.விசுவநாதன்.

குருவாயூர்

கோகுலாஷ்டமி

 

அவன் சிறுவயதுமுதலே பார்த்து மகிழ்ந்த உற்சவம் என்றால் அது வடக்கு மாடத்தெருவில் உள்ள பஜனை மடத்தில் நடக்கும் “கோகுலாஷ்டமி”தான். ஆவணி மாதத்தில் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி அன்று, அதாவது பௌர்ணமி கழிந்த அஷ்டமி திதியில் “கிருஷ்ண ஜயந்தி” உற்சவத்தைக் கொண்டாடுவார்கள். அதாவது ரிக், யஜுர் வேத ஆவணி அவிட்டம் முடிந்து வரும் அஷ்டமியில் “கோகுலாஷ்டமி”யைக் கொண்டாடுவார்கள். அதை கிராமிய வழக்கில் “விட்டம் கழிஞ்ச எட்டாம்நாள்” கிருஷ்ண ஜயந்தி என்பார்கள்.

கிருஷ்ண ஜயந்தி அன்று அவனது கிராமத்துச் சிறுவர்கள் எல்லாம் காலையில் ஒவ்வொரு வீடாகச் சென்று ஒரு பாட்டுப் பாடி, எண்ணையும், காசும் வாங்கி வருவார்கள். பிறகு  அந்த எண்ணையையும், காசையும்  கோவிலுக்குக் கொண்டுக் கொடுப்பார்கள். சரி அது என்ன பாட்டுத் தெரியுமா? அவனுக்கு நண்பர் ராமன் வாத்தியார் அதை நினைவுப் படுத்தினார்.

                 “ஸ்ரீ ஜயந்தி அம்பாலம்,

                  சிவராத்ரி அம்பாலம்

                   ஸ்ரீ கிருஷ்ண ராயருக்குத்

                   திருவிளக்கு எண்ணை..

                   அவலிடிக்கற பொரிபரக்கற

                   அத்தைய கண்டா புஸ்….

                   அம்மையக்கண்டா டஸ்..

                   ஆனைக்காரன் பொண்டாட்டி

                  ஆட்டுக்குட்டி பெத்தாளாம்”

என்று அந்தப் பாடல் போகும். அவனும், நண்பர்களும் சேர்ந்து பாடும் மகிழ்ச்சியை அவன் இன்றும் நினைத்து அனுபவிக்க முடிகிறது.

அவனுக்கு அம்மா ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வெல்லச் சீடை, முறுக்கு, தட்டை, தேன்குழல், அப்பம், வெண்ணெய், நெய், பால், அவல், நாவல்பழம், கொய்யாப்பழம், இவற்றுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் எல்லாம் தாயாராக வைத்திருப்பாள். மாலை ஐந்து மணிக்கு வாசலில் மாக்கோலம் போட்டு , மாவினால் எட்டு போல எழுதி அதன் மீது ஐந்து விரல்களையும் அழகாகப் போட்டு “குழந்தையின் கால்களை” வாசலில் இருந்து வீட்டிற்குள் வருவது போலப் போடுவாள். அதை அவனுக்கு அக்காவுக்கும் சொல்லித் தந்து போடச் சொல்லுவாள். அவனிடம் மாவிலையைத் தந்து வாசல் முகப்பில் ஒரு கயிற்றில் அழகாகத் தொங்கவிடச் சொல்வாள். ஆறு மணிக்கு விளக்கேற்றி, பூஜையில் உள்ள தவழ்ந்த கிருஷ்ணனுக்குச் சந்தனம், கும்குமமிட்டும்,

பூச்சூட்டுவாள். ரேழியில் உள்ள பூஜை இடத்தில் உள்ள எல்லாப் படங்களுக்கும் அவனையும், அவனுக்கு அக்காவையும் “பூ” வைக்கச் சொல்லுவாள். ஊதுபத்தி, தசாங்கம் எல்லாம் மணக்க வீடே மங்களகரமாக இருக்கும். பூக்களின் வாசனையும், ஊதுபத்தி, தசாங்க வாசனையும், அதுகூட பக்ஷண வாசனையும் அவனுக்குச் சொல்ல முடியாத ஆனந்தத்தைக் கொடுக்கும். “அம்மா..எப்ப வாத்தியார் வந்து பூஜைய ஆரம்பிப்பார்…” என்று அவன் மாலை ஆறரை மணிக்கே அவனுக்கு அம்மாவை நச்சரிக்கத் துவங்கிவிடுவான்.

முன்பெல்லாம் கிருஷ்ண ஜயந்தி, விநாயகர் சதுர்த்தி, மகர சங்கராந்தி போன்ற பூஜைகளுக்கெல்லாம் அவரவர்கள் வீட்டிற்கென்றிருக்கும் வாத்தியார்தான் (சாஸ்த்ரிகள்) வந்து பூஜை செய்வார். எல்லோரும் பொறுமையாகவும் இருப்பார்கள். கிராமத்தில் நிறைய சாஸ்த்ரிகளும் இருந்தார்கள். இப்பொழுதெல்லாம் அவரவர்களே புத்தகம் பார்த்துப் பூஜை செய்கிறார்கள்.

வாத்தியார் வந்து பூஜை செய்த பிறகு பிரசாதங்களை ஒவ்வொரு தட்டிலும் வைத்து அவனுக்கு அக்காவிடமும், அவனிடமும் தந்து அவனுக்கு தாத்தாவுக்கும், அப்பா, சித்தப்பா போன்ற வீட்டுப் பெரியவர்களுக்கும்  தரச்சொல்லுவாள். அதன் பிறகு அவனுக்கு அக்காவுக்கும், அவனுக்கும் தருவாள். ஒவ்வொரு பக்ஷணமும் (பலகாரமும்) அத்தனை சுவையாக இருக்கும். அவை ஒவ்வொன்றிலும் அவனுக்கு அம்மாவின் அன்பு அதில் தெரியும். ஒரு சில முறுக்குகள் நன்றாக வேகாமல் இருந்தாலும் சுவையோடும், வெல்லச் சீடைகள் தாங்களே “ராஜா” என்று சொல்வதுபோலவும் சுவையாக இருக்கும். அவன் வெண்ணையை விரும்பித் தின்பான். அம்மாவும் அவனுக்குத் தருவாள். அவனுக்கு அம்மா வழித் தாத்தாவும், பாட்டியும்  பக்கத்துத் தெருவான “தொந்திவிளாகம் தெருவில்” இருந்தனர். அவர்களுக்கும் “பக்ஷணத்தை”க் கொண்டுக் கொடுத்துவிட்டு வரும்படி அம்மா சொல்லுவாள். அவனும், அவனுக்கு அக்காவும் கொண்டுக் கொடுப்பார்கள். அவர்களுக்கு தாத்தாவும், பாட்டியும் பக்ஷணம் தருவார்கள். அவனுக்குப் பாட்டி செய்யும் பக்ஷணம் ரொம்பவும் பிடிக்கும். பக்கத்தில் உள்ள   நண்பர்கள் வீட்டிற்கும் அம்மா பலகாரம் தந்து கொடுக்கச் சொல்லுவாள்.  அதிலிருந்து வெல்லச் சீடையை எடுத்து அவன் தின்னப் போகும் போது,” கண்ணா…அம்மா இன்னோர்த்தராத்துக்குத் தந்ததை எடுக்காதே..ஒனக்கு வேண்ணும்னா…அம்மா தருவாளே” என்று அவனுக்கு அக்கா பாலா அவனைத் திருத்துவாள். அதே போல மற்ற நண்பர்கள் வீட்டில் இருந்தும் பக்ஷணங்கள் தருவார்கள். கிராமத்தில்தான் அந்தப் பழக்கத்தை அவன் பார்த்திருக்கிறான். பட்டணத்தில் அது தேய்ந்து கட்டெறும்பாகப் போய்விட்டது.

இரவில் வடக்கு மாடத்தெருவில் இருக்கும் பஜனை மடத்துக்குக் கதை கேட்கச் செல்வான். அநேகமாக அம்பாசமுத்திரம் கிருஷ்ணபாகவதர்தான் கதை சொல்லுவார். அவர் கதை சொல்லும் பாணி அவனுக்குப் பிடித்திருந்தது. நல்ல நல்ல கச்சேரிகளும் நடக்கும். ஒரு முறை தூத்துக்குடியில் இருந்து பேராசிரியர் அ.சீனிவாசராகவன் வந்திருந்தார். அவர் தலைமையில் “இராமாணத்தில் சிறந்த தம்பியர்” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. திலகர் வித்யாலய உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் கே.ஏ.நீலகண்டையர் ஒரு அணிக்கும், தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் குஞ்சிதபாதம் ஒரு அணிக்கும் தலைவராக இருந்து மிகச் சிறப்பாக வாதங்களை எடுத்து வைத்தனர். பேராசிரியர் அ.சி.ரா.வின் உரை அமிர்தமாக இருந்தது. அவரது உரையை அவன் அப்பொழுதுதான் முதல் முதலில் கேட்கிறான். இரண்டு அணித்தலைவர்களின் கருத்துக்களை மிக அழகாகக் கூறி, கம்பனின் பாடல்களின் அழகை, கருத்துச் செறிவை அவரது பரந்துபட்ட அறிவால் எளிமையாக அவர் விளக்கிய விதத்தில் அவன் சொக்கித்தான் போனான். அதுமுதல் அவன் அவரது தமிழுக்கும், ஆங்கிலப் புலமைக்கும் அடிமையாகிப் போனான். பிற்காலத்தில் அ.சீ.ரா.வின் மாணவர் கவிமாமணி இலந்தை சு.ராமசாமி எழுதிய நூலின் மூலமும், கல்கத்தா பாரதி சங்கத் தலைவராக இருந்த மு. ஸ்ரீநிவாசன் தொகுத்த நூலின் மூலமும் பேராசிரியரின் இலக்கிய ஆளுமையை அவன் கொஞ்சம் அறிந்து கொண்டான். இது போன்ற சிறந்த இலக்கிய வாதிகளை அவனுக்கு அறிமுகம் செய்தது அந்த “கோகுலாஷ்டமி” உற்சவ நிகழ்ச்சிகள்தான்.

கோகுலாஷ்டமி உற்சவத்தின் கடேசிநாளில் தீபப் பிரதக்ஷிணம் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறும். முடிவில் ஒருவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் போன்ற முகமணிந்து, உடையுமணிந்து ஊர்வலம் நடைபெறும். வடைமாலைப் பிரசாதமும் உண்டு. அப்பொழுதெல்லாம் அனேகமாக H.கிருஷ்ணனோ, லெஷ்மண வாத்தியாராது விஸ்வமோதான் “ஸ்ரீ ஆஞ்சநேயர்” வேடம் அணிந்து வருவார்கள். ஒரு முறை அப்படி வரும்பொழுது மேலமாடத் தெருவில் தங்கள் வீட்டு வாசலில் கட்டிலைப் போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி அவர்களது முகத்தை நோக்கி,” ஹோ” என்று ஆஞ்சநேயர் வேடமிட்ட “விஸ்வம்” கத்த, கட்டிலில் இருந்தவர்கள் மிரண்டு போனது முகவும் சுவாரஸ்யமாக இருந்தது. எல்லோருமே அதை ரசிப்பார்கள்.

 

நவராத்திரி

kolu

நவராத்திரி விழாவும் அவனுக்குக் கொண்டாட்டம் தரும் நிகழ்ச்சிதான். காலாண்டுத்தேர்வு முடிந்து பத்து நாட்கள் விடுமுறை இந்த நவராத்திரி விழாவுக்குத்தான் கிடைக்கும். இந்த விடுமுறையில் தேர்வு வினாத்தாள்களில் உள்ள வினாக்களுக்குச் சரியாக விடை எழுதி, பள்ளிக்கூடம் திறந்ததும் அதை ஆசிரியர்களிடம் காண்பிக்கவேண்டும். அதற்காக அவனுக்கு அம்மா அவனைக் காலை வேளையில் எழுதி முடிக்க வைப்பாள். அவனுக்கு சரஸ்வதி பூஜை அன்று குஷிதான். காரணம் அன்று எல்லாப் புத்தகங்களையும் பூஜையில் வைத்து விடுவார்கள். அதனால் அன்று அவன் நன்றாக நண்பர்களுடன் விளையாடுவான்.

ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிக்குத் துவங்கி எட்டு மணிவரை அவனும், அவனுக்கு நண்பர்களும் அந்த கிராமத்துத் தெருக்களில் (ரோட்டிற்கு மேற்கே) உள்ள வீடுகளுக்குக் கொலுப் பார்க்கச் சென்று விடுவான். கையில் ஒரு “ஐயனார் காப்பிப் பொடி” கவரை எடுத்துக் கொள்வான். ஒவ்வொரு வீட்டிலும் தருகிற சுண்டல்களை எல்லாம் அந்தக் கவரின் போட்டுக் கொண்டு, அவனும் அவனுக்கு நண்பர்களும் அதைக் கலந்து உண்பார்கள். உப்பும், உரப்பும், திதிப்புமாக ஒரு வித்யாசமான சுவையைத் தரும். அவன் அதை அவனுக்கு அக்காவுக்கும் தருவான். அவளும் அவனுக்குத் தருவாள். சுண்டல் தாராத வீடுகளில் அவனும், நண்பர்களும் விளக்குகளை அணைத்தும், கத்தியும் கலாட்டா செய்வார்கள். உயிருள்ள தவளையை எடுத்து வந்து அந்த வீட்டிற்குள் விட்டு விட்டு ஓடி விடுவார்கள். அதற்கெல்லாம் அவனுக்கு அம்மா நல்ல “பிரசாதம்” முதுகிலே பதியும்படித் தரவும் செய்வாள்.

அவனுக்கு ஆசிரியர் ஆர்.சங்கர ஐயர் (ஆர்.எஸ்.சார்) வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் “கொலு” வித்யாசமாக இருக்கும். மகான்களின் உருவ பொம்மைகளை அவரே அழகாகக் கைபடச் செய்து வைத்திருப்பார். அந்தக் கொலுவை பார்க்கப் போகும் குழந்தைகளுக்கு அவர் அந்த மகான்களின் கதைகளைச் சொல்லுவார். சுண்டலும் தருவார். அவன் அவரது வீட்டில் ரசித்து இரண்டு மூன்று முறை “கொலு” பார்த்திருக்கிறான்.

அவனுக்கு நண்பன் ரகுவின் வீட்டுக் கொலு மிகவும் பெரியதாக இருக்கும். தனியாகப்  பூங்கா வைப்பார்கள். அதற்கு அவனும், நண்பர்கள் ரகு, சங்கர், கபாலி, பிரபு, நீலகண்டன், H.கிருஷ்ணன், குட்டிச் சங்கர், சுரேஷ் போன்றவர்களும் வயல் காட்டிற்குச் சென்று “வரப்புகளில் உள்ள புற்களை” மண்ணோடு வெட்டிக் கொண்டு வருவார்கள். ரயில்வே நிலையம், பூங்கா, கோவில், தெருக்கள் என்று அந்த இடத்தில் வைப்பார்கள். வீட்டுப் பெரியவர்கள் அந்த குழந்தைகளுக்கு மிகவும் உற்சாகம் தரும் வகையில் உதவுவார்கள். நன்னி சங்கரராமையர், வெங்கட்ராமையர், அப்புத் தாத்தா, Glad கிருஷ்ணையர் போன்றவர்களின் வீட்டுக் “கொலு” மிகவும் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும்.

அவனது வீட்டிலும் அம்மா கொலு வைப்பாள். கொஞ்சம் பொம்மைகள்தான் உண்டு. அந்த பொம்மைகளை அவளுக்கு அப்பாவும், அம்மாவும் அவனுக்கு அம்மாவின் கல்யாணமான சமயத்தில் வாங்கித் தந்தது என்று பெருமையாகச் சொல்லுவாள். அந்த பொம்மைகளின் முகம் நல்ல திருத்தமாக அழகாக இருக்கும். பிள்ளையார் பொம்மை இன்றும் இருக்கிறது. நிறம் போகாமல் அப்படியே. அதில் அவனுக்கு அம்மாவின் “கை”ப் பரிச்சயம் தெரியும். அதனால் அந்த பிள்ளையார் பொம்மையிடம் ஒரு தனி சிநேகம் இருக்கிறது. நிறைய பொம்மைகளை அவன் சிறுவயதில் உடைத்து விட்டதாகச் சொல்லுவாள். அதில் அவளுக்குக் கோவம் இல்லை. தன் குழந்தை உடைத்த பெருமைதான் தெரியும். விஜயதசமி அன்று பூஜையில் இருந்து புத்தகத்தை எடுத்துக் கொடுத்து அவனுக்கு அம்மா அவனைப் படிக்கச் சொல்லுவாள். அன்று அவன் எல்லாப் பாடங்களையும் படிப்பான்.

நவராத்திரி படம்

அவனது தெருவில் குடியிருக்கும் நண்பன் H. கிருஷ்ணன் வீட்டில் நவராத்திரி நாட்களில் லக்ஷார்ச்சனையும், ஸ்ரீசூக்த, ஸ்ரீதுர்க்கா சூக்த ஹோமங்களும், நவமி திதியன்று  ஸ்ரீ சண்டிஹோமமும், தேவி மகாத்மிய பாராயணமும் நடைபெறும். அன்று மதியம் அன்னதானமும் செய்வார்கள். அவனுக்கு அக்காவும், அம்மாவும் அந்த பூஜைகளைப் பார்த்து வருவார்கள். கிருஷ்ணனின் மூத்த சகோதரி “யக்யலக்ஷ்மி” அக்கா நன்றாகப் பாடுவாள். இராமலிங்க பாகவதரின் சிஷ்யை. நவராத்திரி காலத்தில் அவள் பாடும் பாட்டைக் கேட்டு,”யக்யலக்ஷ்மி” அக்கா எப்படிப் பாடறா பாரு” என்று அவனுக்கு அக்காவிடம் அம்மா சொல்லுவாளாம். அவனும் சென்று பார்த்திருக்கிறான்.  நண்பன் H. கிருஷ்ணனின் தகப்பனார் ப்ரும்மஸ்ரீ ஹரிஹர ஞான சாஸ்த்ரிகள் அந்த ஹோமங்களைச் செய்வார். அவரும், அவரது முன்னோர்களும் ஸ்ரீவித்யா உபாசகர்கள்.

ஹரிஹர ஞானம் சாஸ்த்ரிகள் ஸ்ரீ அபினவவித்யாதீர்த்தரும் சீடரும்

1964ம் வருடம் நவராத்திரிக்கு சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் கல்லிடைக்குறிச்சிக்கு வந்திருந்தார்கள். அப்பொழுது தினமும் காலையில் பூஜை முடிந்து தீர்த்தப் பிரசாதமும், இரவில் தர்பார் நிகழ்ச்சியும் நடைபெறும். அது சமயம் தேவி மகாத்மிய பாராயணம் செய்வார்கள். அந்த தர்பார் காட்சி இன்றும் அவனுக்கு நினைவிருக்கிறது. ஒன்பது வயதுச் சிறுவனான அவனை அவனுக்கு அப்பாவும், தாத்தாவும் குருவைதரிசனம் செய்யக் கூட்டிப் போவார்கள். சாஸ்வதி பூஜை அன்று நவமி திதி. அன்று சண்டிஹோமம் பூர்ணாஹுதி நடைபெறும். அதற்காக ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் வீரப்பபுரம் தெருவில் இருந்து குத்துக்கல்தெரு (வடக்கு ரத வீதி) வழியாக இராமச்சந்திரபுரம் தெருவுக்கு நடந்தே வந்தார்கள். வேத கோஷத்துடன் ஜகத்குரு நடந்து வந்ததை அவன் அவனுடைய வீட்டு வாசலில் இருந்தபடி தரிசனம் செய்தான். அப்பொழுது, “ஆச்சார்யாள் சாரதாம்பாள் கோந்தே. அவரை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணு” என்று வணங்க வைத்தாள் அவனுக்கு அம்மா. வீட்டு வாசலில் அவன் விழுந்து வணங்கினான். அந்த மகான் மெல்லிய புன்சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டே நடந்து சென்றார். அந்தப் பார்வையில்தான் அவன் வாழ்க்கையே பாதுகாப்பாக நடந்து செல்கிறது என்று இன்றும் அவன் நம்புகிறான்.

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அவன், அது, ஆத்மா (28)

  1. மிக அருமையான கட்டுரை; தெளிவான விளக்கங்கள். ஆசிரியருக்கும் வலைத்தளத்திற்கும் வாழ்த்துக்கள்.

  2. அருமை. மேலும் சில வரிகள் உண்டு …..

    அத்தைய கண்டா பஸ் 
    பாட்டிய கண்டா  புஸ்
    கோணகோண புளியங்காய் 
    கொப்புளிச்சட்டி நார்த்தங்காய் 

    அதன் பிறகு ஆனைக்காரன் பொண்டாட்டி …. முதலிய வரும். 

    நானும் சிறியவனாக இருக்கும் போது என் தாய்வழி பாட்டி ஆசார்யாள் வரும்போது இடுப்பில் தூக்கிக்கொண்டு காட்டி இருக்கிறார்.  கட்டியம் கூறுபவர் 

    “சாம்ப்ரா ஹூ ….. எதிர் ப்ரயணா  ஹூ …..” என்பது போல் கையில் வெள்ளி கேடயம் வைத்து பராக் சொல்லிக்கொண்டே ஸ்வாமிகள் முன்னால் செல்வார்.  பூஜை முடிந்ததும் தட்டு நிறைய  வீரபாஹு புட்டு பிரசாதம் வைத்து கொடுக்க ஆரம்பிப்பார்கள். நம்ப ஊர் கூட்டத்தில் எனக்கு கிடைத்ததில்லை.  ஆனால் பிற்காலத்தில் சேர்த்து வைத்து ஸ்ரீ சத்ரமௌலீஸ்வரர் அபிஷேக தீர்த்த பஞ்சம்ரித்த திராக்ஷை நிர்மால்யம் கிடைத்தது என் பாக்கியம் . முதலியப்பபுரம் தெருவில் ஆசார்யாள் விஜய யாத்திரை செய்யும் போது ஆரத்தி எடுத்த ஒவ்வொரு வீட்டிலும் ஸ்வர்ண புஷ்பம் போட்டதாகவும் எங்கள் வீட்டில் ஒரு க்ஷணம் நின்றதாலும் , பிறந்த என் கடைசி அக்காவுக்கு சாரதாம்பாள் என்றே பெயர் வைத்தார்கள் (சமீபத்தில் அந்த தம்பதியருக்கு சஷ்டியப்த பூர்த்தி எல்லோர் ஆசியாலும் நடைபெற்றது).

    எங்கள் வீட்டிலிருந்து 7,8 வீடு தெற்க்கே உள்ள ஆர் எஸ் சார் வீட்டு கொலு தடபுடலாக இருக்கும். அவர் புத்திரர் ஸ்ரீ ரமணி அருமையாக ஏற்பாடு செய்வார். 

  3. அன்பர்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *