— எஸ். வி. நாராயணன்.

Krishnan with butterஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைப் பற்றியும், கண்ணனின் பால லீலைகளைப் பற்றியும் குறிப்பிடும்போது காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ரசமானதொரு கருத்தைக் கூறுவார். ஸ்ரீகிருஷ்ணன் சேஷ்டைகள் செய்யும் குழந்தையாக, ஆநிரை மேய்க்கும் சிறுவனாக, குழல் ஊதும் கண்ணனாக, கோபிகைகளைச் சீண்டும் பாலகனாக, அசுரர்களை வதைக்கும் அசகாய சூரனாக, ஆபத்பாந்தவனாக, அனாத ரஷகனாக, தூதுசெல்பவனாக, சாரதியாக இப்படி பல ரூபங்களை தரித்து அனேக லீலைகளை செய்திருக்கிறான். சாதுக்களையும் நல்லவர்களையும் மட்டுமின்றி, எல்லோரையும் கவர வேண்டு மென்றே ஜாரசோர சிகாமணியாக, கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான். அனைவரையும் ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அன்புக்கும் பாத்திரமாக்கிக் கடைத் தேற வைத்தான் என்று கூறுவார் காஞ்சிப் பெரியவர். இப்படி, அனைவருக்கும் அருள் புரிவதற்காகவே அவதரித்த கிருஷ்ணனின் அவதாரமே பூர்ண அவதாரம். ‘சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ – என்னையே தஞ்சமென்றிருந்தால் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன் என்று கூறியவர் கிருஷ்ண பகவான். ‘மாசு.ச.’ – கவலைப்படாதே, என்று நமக்கெல்லாம் உறுதியளித்த தெய்வம் அல்லவா அந்த கார்மேகவண்ணன்.

இராம அவதாரம் ஆதர்ச புருஷ அவதாரம். உலகத்திற்கு ஒரு உதாரபுருஷனாக அவர் விளங்குகிறார். தாம் பரம்பொருள் என்பதை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. ஆனால், கிருஷ்ணாவதாரத்தில் பகவான் தமது சக்தியை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருந்தான். பிறந்தவுடன், அன்னை தேவகிக்கும், தந்தை வசுதேவருக்கும் சங்கு சக்கர கதாதாரியாக, தமது சுயரூபத்துடன் காட்சியளித்தார். பின்னர், தமது மாயையால், தங்களுடைய குழந்தையாக அவர்கள் காணும்படி செய்கிறார்.

வளர்ப்புத்தாயான யசோதை, பிள்ளை வாயில் வையம் ஏழும் கண்டு “ஆயர் புத்திரன் அல்லன்: அரும் தெய்வம்” என்று அதிசயிக்கிறாள். ஆனால் அந்த உணர்வு சில நொடிகளே நீடித்தது. கள்ளக் கண்ணனின் மாயை மூடி மறைத்தது. ”வெண்ணைதான் தின்கிறாயே, மண்ணை ஏன் தின்கிறாய்” என்று அதட்டத் துவங்கி விடுகிறாள். கோவர்த்தன கிரியை விளையாட்டாக குடை போல் எடுத்ததை அனைவரும் பார்க்கிறார்கள். காளியன் என்ற பயங்கர நாகத்தின் மீது அவன் நின்று நடன மாடிய அழகை எல்லோரும் பிரமிப்புடன் பார்க்கிறார்கள்.

அமானுஷியமான பரம்பொருள் நமது கண்ணன் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படாமல் அவன் பார்த்துக் கொண்டான் என்பதை நினைக்கும்போது, அவனுடைய அந்த செளலப்யத்தை எடுத்துச் சொல்ல வார்த்தைகளும் உண்டோ? பாண்டவர்களுக்காக, நடையாய் நடந்து தூதுபோன அந்த நீர்மைக்கு இணையும் உண்டோ!

நம்முடைய இந்த நாட்டிலே, வேதம் ஒதப்படும் இந்த புண்ணிய பூமியிலே, கிருஷ்ண பக்தி ஆங்காங்கே பெரியதொரு பிரேமையாகவே மிளிர்வதைக் காணலாம். சூர்தாஸ், மீரா, ஜயதேவர், நரசிமேத்தா, சைதன்யர் போன்ற எண்ணற்ற ஹரிதாசர்கள் கிருஷ்ணானுபவத்தின் அருமையையும் பெருமையையும் உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.

பக்தியே கடவுள்தரிசனத்திற்கு வழி. பக்தியின் மூலமே கண்ணனை உணரலாம். வெறும் படிப்பினாலும், மேதையின் பலத்தினாலும் அவனை உணரமுடியாது. உளம் உருகி அவனை நினைத்தாலன்றி அவன் நமக்கு அருகில் வரமாட்டான் என்ற வைணவ நெறியை நன்கு எடுத்துக் காட்டியவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்கள் ஒவ்வொருவரும் கிருஷ்ணனையும் அவனது அற்புத லீலைகளையும் நினைந்து, நினைந்து உருகி, ‘உண்ணும்சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்ற நிலையிலே இருந்து, தத்தம் அனுபவங்களை பற்பல பாசுரங்களாக, அழியாப் படைப்புகளாக, நெஞ்சிற்கினிய தமிழ்ப்பாடல்களாக அருளி, பெரும் கிருபை செய்திருக்கிறார்கள். கிருஷ்ணாவதாரத்திலே தமது மனதை பறி கொடுத்து, அதிலே பூரணமாக லயித்து, அந்த பரப்ரம்மம் ‘அம்மா’ என்றழைத்திட என்ன தவம் செய்தாளோ என்று எல்லாரும் போற்றிய யசோதையாகவே தன்னை பாவித்துக் கொண்டு, பாலகிருஷ்ணனின் வினோத லீலைலைகளை எல்லாம், மிக அழகாக, படம் பிடித்துக் காட்டுவது போல் காட்டுகிறார் பெரியாழ்வார். பெரியாழ்வார் அருளிச் செய்துள்ள அந்தப் பாசுரங்களை நாம் நமது இல்லங்களில் படித்து மகிழும்போது அந்த இல்லங்களிலே அந்த மாயக்கண்ணன் நிச்சயம் தன் பாதங்களை அடிமேல் அடி வைத்து, தளர் நடையுடன், காலினிற் சிலம்பு கொஞ்ச முத்து மாலைகள் அசைந்திட வந்து அருள்புரிவான் என்பதில் ஐயமில்லை.

பெரியாழ்வார் எப்படியெல்லாம் வர்ணிக்கிறார் பாருங்கள். கண்ணன் பிறந்தபோது ஆய்ப்பாடி எப்படி இருந்தது என்கிறார்:
“ஓடுவார், விழுவார், உகந்து ஆலிப்பார்
நாடுவார், நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும், பல்பறைகொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே”

கண்ணன் பிறந்ததைக் கேட்டு பாடினார்கள்,ஆடினார்கள் ஆயர்பாடி ஆயர்கள். அத்துடனா?
உரியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தரவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து,
எங்கும் அறிவழிந்தனர் ஆய்ப்படி ஆயரே.

ஆயர்பாடி ஆயர்கள் எல்லாம் நந்தகோபன் வீட்டுக் குழந்தையை தங்கள் குழந்தையாகத்தான் எண்ணினர். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம், இவ்வளவு களிப்பு.

தாயான யசோதை தன் மகன் கண்ணனை தொட்டு தொட்டுப் பார்த்து மகிழ்கிறார். இங்கே வாருங்களேன். என் குழந்தையின் பாதக் கமலங்களைப் பாருங்களேன். இந்தக் குழந்தை பாதக் கமலங்களை வாயில் வைத்து சுவைத் துண்ணும் அந்த அழகைப் பாருங்களேன். “பேதைக் குழவி பிடித்து சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள் காணிரே’ என்கிறார் பெரியாழ்வார். சங்கும் சக்கரமும் நிலாவிய அந்த கைத்தலங்களைப் பாருங்களேன். ‘வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணிரே’ , ‘கண்கள் இருந்தவா காணிரே’, ‘புருவம் இருந்தவா காணிரே’, நெற்றி யிருந்தவா காணிரே’ , ‘ குழல்கள் இருந்தவா காணரே என்று குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் சுட்டிக் காட்டி உச்சி மோந்து யசோதை எப்படி மகிழ்ந்திருப்பாளோ அப்படி மகிழ்ந்து போகிறார் பெரியாழ்வார். தாயுமாகி, அவர் படைத்த இப்பாடல்கள் அந்த மாயக்குழவியை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

[தொடரும் …]

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *