— எஸ். வி. நாராயணன்.

Krishnan with butterஆழ்வார்களை, முக்கியமாக நம்மாழ்வாரை, மிகவும் ஈர்த்தது, அந்த வெண்ணையுண்ட கண்ணனின் நீர்மை, அந்த செளலப்யம்.

கண்ணனின் நீர்மை வெளிப்படுவதற்காகவே கண்ணனின் குறும்புகள் கூடின போலும். வீட்டில் உள்ள தயிர், வெண்ணெய் உண்டது காணாது என்று ஊரார் வீட்டு வெண்ணையை, சிறுவர் ஜமா சேர்த்துகொண்டு, எட்டாத உறிகளில் வைத்தாலும், தட்டாது விழுங்கிச் சென்றான். கண்ணனின் சேஷ்டைகளும் கூடின. ஊரார் புகாரும் பெருகியது.

கன்றுக்குட்டிகளின் காதில் கட்டெறும்பை விட்டு வேடிக்கை பார்ப்பது, கோபிகைளின் வளைகளை ஏமாற்றி வாங்கிக் கொண்டு போய் நாவற்பழம் வாங்கித்தின்றது, வீடுகளில் புகுந்து அவர்கள் செய்து வைத்திருக்கும் ‘கன்னல் இலட்டு வத்தோடு சீடை, காரெள்ளின் உண்டை” மற்றும் அக்கார அடிசில் போன்றவற்றை விழுங்கிவிட்டு ‘இன்னம் உகப்பன்’ என்று சொல்லி நிற்பது – இத்தகைய புகார்கள் ஓங்கிவந்த வேளையிலே யசோதைக்கு கோபம் வந்தது. ஆனால் அந்த தெய்வக் குழந்தையை அடிக்க மனம் வரவில்லை.

அவனைத் திருத்த வேண்டி உரலில் பிணைக்க எண்ணம் கொண்டாள். எனவே ஒரு தாம்புக் கயிறை எடுத்து அவன் இடுப்பில் கட்டி உரலில் பிணைத்துக் கட்டச் சென்றாள். முதலில் எடுத்த கயிறு போதவில்லை. அதற்காக ஆயர் மனைகளில் உள்ள கயிறுகளை எல்லாம் கொண்டு பொருத்திப் பார்த்தும் அவன் இடைக்கு அது போதாததாக இருந்தது. எல்லாத் தாம்புகளையும் ஒன்றாக முடித்து முயற்சி செய்தாள். அப்போதும் அவனைக் கட்டுவதற்கு அது போதவில்லை. யசோதை களைப்படைந்தாள். கை சலித்தது. வியர்வை கொட்டியது. கண்ணன் தாயின் அவஸ்தையைப் பார்த்தான்.

தேவேந்திரனுக்கும், பிரமனுக்கும், ஞானி களுக்கும், முனிவர்களுக்கும் லேசில் அகப்படாத அந்தப் பெரியோன், தாயின் கைத்தாம்பினால் உரலில் கட்டுண்டான். நம்மாழ்வார் வாய்மணக்கப் பாடுகிறார்:
‘பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறர்களுக்கு அரிய வித்தகன்
மலர்மகள் விரும்பும் நம்அரும்பெறல் அடிகள்
மத்துஉறு கடைவெண்ணைய் களவினில்
உரலிடை யாப்புண்டு எத்திறம்
உரவினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே’

பக்தி உடைய அடியார்களுக்கு எளியவனாயும், பிறருக்கு அணுக முடியாதவனாயும், திருமகளின் செல்வ நாயகனாகவும், பெறற்கரிய நம் தலைவனாகவும் உள்ள அந்தக் கண்ணன் என்னும் கருந்தெய்வம், வெண்ணைய் திருடியதால் கட்டப்பெற்று, உரலுடன் இணைந்து, அங்கேயே இருந்து ஏங்கிய அவன் எளிமைதான் என்னே! என்னே!

நம்மாழ்வார் இந்த எளிமைச் செயலை எண்ணி எண்ணி ஆறுமாத காலம் அப்படியே மோகித்துக் கிடந்தாராம். பக்தர்களால் தான் பகவானைக் கட்ட முடியும். பரம பக்தையான தாய் யசோதையினால் அந்தப் பரந்தாமன் கட்டுண்டான். வடவரையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பை கயிறாகப் பூட்டி, பாற்கடலை கலங்கச் செய்தவன் அவன். அவ்விதம் கலக்கிய கையே யசோதையார் கடைகயிற்றால் கண்டுண்ட கை. இது என்ன மாயமோ என வியக்கிறார் சிலப்பதிகார ஆசிரியர்.

பேயாழ்வார் இந்த நீர்மையை மிகவும் போக்யமாக அனுபவிக்கிறார்.
“மண்ணுண்டும் பேய்ச்சிமுலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு, ஆய்ச்சி
கண்ணிக் கயிற்றினால் கட்டத்
தான் கட்டுண்டிருந்தான் வயிற்றினோடு ஆற்றாமகன்’.

வயிற்றினோடு ஆற்றா மகன் என்ற விசித்திரமான தொரு விருதை அவர் கண்ணனுக்குச் சூட்டுகிறார். இதை ஒட்டியே நம்மாழ்வாரும் ”காரேழ் கடலேழ் மலையேழ் உலகுண்டும் ஆராவயிற்றேனை அடங்கப்பிடித்தேன்’ என்று திருவாய் மொழியில் பாடுகிறார் போலும். கடல்களை யெல்லாம் நிரப்ப வல்ல பெரு மேகங்களையும், ஏழு சமுத்திரங்களையும், ஏழு பர்வதங்களையும் விழுங்கியும் வயிறு நிரம்ப வில்லை. பேய்முலை நஞ்சுண்டான். அதுவும் போதவில்லை. ஆய்ச்சிமார் கடைந்த வெண்ணை யனைத்தையும் விழுங்கினான். அப்படியும் திருப்தி பிறக்கவில்லை.

இப்படி ஒரு அடங்காத ஆசையுடையவனை யசோதை தனது அன்பு என்னும் அஸ்திரத்தால் கட்டிவைத்தாளன்றோ. ‘உபநிஷதர்த்தம் உலூகலே நிபத்தம்’ ‘வேதத்தின் உச்சிப் பொருள் ஒரு உரலிலே கட்டுண்டிருந்தது காணிர்’ என்று ஆச்சரியப்பட்டார்கள் ரிஷிகள். அன்னை யசோதை கட்டியதால் உதரத்திலே பெருமாளுக்கு தழும்பு ஏற்பட்டதாம். தாமோதரன் எனும் திருநாமத்திற்கு வயிற்றிற் தழும்பை பொருளாகச் சொல்வதுண்டு. இன்றும் இத்தழும்பை ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வயிற்றில் காணலாம் என்பார் ஸ்ரீபராசரபட்டர்.

பெருமாளுக்கு பல தழும்புகளாம். பொய்கை யாழ்வார் கூறுகிறார். தாம்பினால் ஆர்ந்த தழும்பு ஒன்று. சாரங்கவில் உராய்ந்ததினால் கையில் தழும்பு. சகடம் உதைத்ததினால் காலில் தழும்பு. இப்படி பெருமாள் திருமேனியெல்லாம் தழும்பேறிக்கிடக்கிறதே, இவையெல்லாம் அவனுடைய ஆச்ரித தன்மையினால் ஏற்பட்டவை அன்றோ.

கண்ணனின் குழந்தைப் பருவத்தை, அவன் ஆடிப்பாடி வளர்ந்த அந்த காணக் கிடைக்காத காட்சியை, யசோதைபோல் தன்னால் பெற முடியவில்லையே என தேவகி புலம்புவது போல குலசேகர ஆழ்வார் அருமையான பாசுரங்களை அமைத்துள்ளார்.

முழுதும் வெண்ணெய் அனைந்து தொட்டுண்ணும்
முகிழ் இளம் சிறுத்தாமரைக்கையும்
எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கும்
நிலையும், வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும், அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறு வாய்தெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட யசோதை
தொல்லையின்பத்தின் இறுதி கண்டாளே.

யசோதை அடைந்த அந்த எல்லையில்லா இன்பத்தை தான் அடையவில்லையே என்று தேவகி பட்ட விசனம் வார்த்தைகளுக்குள் அடங்குமோ?

உரலில் கட்டுண்ட அந்த மாயக்கண்ணன் வெறுமே இருந்தானா? நாரதரின் சாபத்தினால் இரு மருத மரங்களாய், பல ஆண்டுகாலம் இருந்த குபேரனின் புத்திரர்கள் நளகூபரன், மணிக்ரீவன் ஆகியோரின் சாபவிமோசனத்திற்காக, உரலுடன் தவழ்ந்து சென்று அந்த இரு மருத மரங்களுக் கிடையே போய் அவற்றை வீழ்த்தினான். குபேரன் புத்திரர்கள் சாப விமோசனம் பெற்று கண்ணனை தொழுதேத்திச் சென்றனர். குழந்தையைக் கடவுள்தான் காத்தார் என மரம் விழுந்த ஓசையைக் கேட்டு ஓடி வந்த யசோதை, குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டாள்.

தமது ஆசாரியனான நம்மாழ்வாரை மட்டுமே பாடினார் மதுரகவி ஆழ்வார். ஆனால் ஆசார்யனை பாட ஆரம்பித்தவர் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்’ என்றுதான் துவங்குகிறார்.

அந்த பால கிருஷ்ணன் வெண்ணெய் மீது வைத்திருந்த அபரிமிதமான ப்ரீதியை எல்லா ஆழ்வார்களுமே பெரிதும் போற்றிக் கொண்டாடு கிறார்கள். அரங்கனைப் பாடிய திருப்பாணாழ்வார், ‘கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணைய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தான் எனப்பாடுகிறார்.

இப்படி வெண்ணெய் உண்டது குறித்து நம்மாழ்வார் ஒரு கேள்வி எழுப்புகிறார். மாயோனே, முன்பு ஒரு கால் உலகங்களை உண்டாய். பின்பு ஒரு கால் அதனை உமிழ்ந்தாய்.

ஒரு வேளை முதலில் உண்டு, பின்னர் உமிழும் போது, உலகத்தோர் போலே, அந்த மண்ணில் கொஞ்சம் உனது வயிற்றில் தங்கி விட்டதோ? அதனால் நோய் ஏதும் வராமல் காத்துக்கொள்ள, அந்த மண்ணுக்கு மருந்தாக வெண்ணையை வாரி விழுங்கினையோ? ‘மண்கரைய நெய்யூண் மருந்தோ?’ என்று வினவுகிறார் நம்மாழ்வார்.

கண்ணனின் வெண்ணெய்தின்ற சாகசங்களை நினைவு கூறும்போது ததிபாண்டனுக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டத்தைச் சொல்லவேண்டும். ஒரு நாள் அந்த நவநீத கிருஷ்ணன், வீட்டில் இருந்த வெண்ணெய்த் தாழியை உடைத்து, தான் வாரி அள்ளி வாயில் போட்டுக் கொண்டதல்லாமல், தரையிலே பாலையும், தயிரையும், வெண்ணெயையும் ஆறாகப் பெருக்க விட்டான்.

இதனைக் கண்ட யசோதை அவனை அடிப்பதற்காக துரத்திச் சென்றாள். தாய் அடிக்க வருவதைக் கண்ட கண்ணன் வெளியே ஓடினான். யசோதையும் துரத்திச் சென்றாள். தாய் தன்னை நெருங்கும் சமயத்தில், ததிபாண்டன் என்ற ஆயன் இல்லத்தில் புகுந்துவிட்டான் கண்ணன். யசோதை விரைந்து வருவதைப் பார்த்த கண்ணன், ததிபாண்டனை நோக்கி, “என்தாய் கோபத்துடன் வருகிறாள். உன் பக்கத்தில் உள்ள தயிர்த்தாழியை என் மேல் கவிழ்த்து என்னை ஒளித்துவை’ என்று வேண்டினான்.

ததிபாண்டன் அதன்படியே தாழியை கண்ணன் மேல் மூடிவிட்டான். யசோதை வந்து கேட்டபோது, ‘கண்ணனா! அவன் இங்கு வர வில்லையே’ என்று கூறிவிட்டான். யசோதையும் முணுமுணுத்துக்கொண்டே சென்று விட்டாள். ததிபாண்டன் ஞானவான். கண்ணன் யார் என்பதை நன்கறிந்தவன். யசோதை அகன்றவுடனே தாழியின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான் ததிபாண்டன்.

தாய் சென்று விட்டதால் தன்னை வெளியே விடும்படி கண்ணன்ததிபாண்டனை வேண்டினான். பரம்பொருளே கண்ணனாக அவதரித்திருக்கிறது என்பதை அறிந்த ததிபாண்டன், கண்ணனை நோக்கி ‘எனக்கு மோட்சம் அளித்தால் ஒழிய நான் உன்னை வெளியில் விட மாட்டேன்’ என்கிறான். ததி பாண்டனுக்கு அருள்புரிய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே கண்ணன் அந்த ஆயன் வீட்டுக்கு வந்ததால், ‘உனக்கு மோட்சம் அளித்தேன். என்னை விடு’ என்று கூறினான். ஆனால் ததிபாண்டன் நகரவில்லை. அவன் கூறினான் : ‘கண்ணனே, உன்னுடைய கிருபை எனக்குக் கிட்டுவதற்கு இந்த தயிர்த்தாழி மிகவும் உதவியாக இருந்தது. இதனை விட்டு நான் பிரிய மாட்டேன். இந்தத் தாழிக்கும் நீ மோட்சம் கொடுக்க வேண்டும்’ என்றான். கண்ணபிரான் ததிபாண்டனின் சாதுர்யத்தை மெச்சி, உமக்கும் மோட்சம், உமது தயிர்த்தாழிக்கும் மோட்சம் கொடுத்தேன் என்று கூறினான்.

அவ்வளவில் கண்ணனை ததிபாண்டன் வெளியே விட, ததிபாண்டனும் அவனது தாழியும் மோட்சலோகம் எய்தினர். ஆசார்ய ஹ்ருதயமும், அதன் வியாக்கியானமும் ததி பாண்டன் வரலாற்றைக் கூறுகின்றன.

வைணவ உலகமும், தமிழ் இலக்கிய உலகும் போற்றுகிற அஷ்டப் பிரபந்தம் என்ற எட்டு நூல்கள் அடங்கிய தொகுப்பை அருளிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சொல்லுவார்: பண்டங்களை வைப்பதற்கன்றி, சிந்திப்பதற்கு நெஞ்சும், திருநாமங்களை கூற நாவும், விழுந்து சேவிக்கத் திருமேனியும் இல்லாத அசித்தாயிருக்கிற மண்பாண்டம் மோஷம் பெற்றது. ஆனால், நெஞ்சும், நாவும், உடலும் உள்ள நமக்கெல்லாம் எளிதில் மோக்ஷம் கிடைக்காது இருக்கிறதே. இது எதனால்? என்று பெருமாளையே அவர் கேட்கிறார். ஆனால் பதில் அவருக்கே தெரியும்.

ராமபிரான் பிறந்த அயோத்தியிலே புல், எறும்பு ஆதி ஒன்றின்றியே அனைத்தும் நற்கதி பற்றன என்பார் நம்மாழ்வார். அதுபோல கண்ணனின் தர்சனமும், கண்ணனின் ஸ்பர்சமும் பெற்ற ததிபாண்டனும், அவனது தாழியும் மோகூடிம் பெற்றதில் அதிசயமென்ன? இதுபற்றி பெரியோர்கள் ரசமான கருத்து ஒன்றைச் சொல்லுவர். கிருஷ்ணதரிசனம், கிருஷ்ண கைங்கர்யம் இவற்றைச் செய்தவுடனேயே ததிபாண்டனுக்கு மோட்சம் உறுதியாகி விட்டது.

கிருஷ்ண ஸ்பர்ஸம் ஏற்பட்ட உடனேயே தாழிக்கும் நற்கதி கிடைத்துவிட்டது. ததிபாண்டன் அதைக் கேட்டுப் பெறுவதற்கு அவசியமே இல்லை. இருந்தாலும் அவன் அப்படிச் செய்தான் என்றால் அதற்கு முக்கிய காரணம் கிருஷ்ணனின் அந்த எளிமையை, பக்தர்களுக்கு அருள்புரியும் அந்த மேலான குணத்தை, உலகத்திற்கு எடுத்துக் காட்டவேதான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.

[தொடரும் …]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *