நேர்மையும் வாய்மையும்

நிர்மலா ராகவன்

உனையறிந்தால்
கேள்வி: என் தந்தை என்னைப்பற்றி (வயது 17) புகழ்ச்சியாகப் பிறரிடம் கூறுகிறார். அது எல்லாமே உண்மையாக இருக்காது என்று தெரிந்தும், அவர்களும் ஏன் அதை நம்புவதுபோல் நடிக்கிறார்கள்?

பதில்: உங்கள் தந்தைக்குத் தன் குடும்பத்தைப்பற்றி எல்லாரும் நல்லவிதமாக நினைக்கவேண்டும் என்ற ஆதங்கம். அனேகமாக அவரது நண்பர்களும் இப்படி இருப்பதால், மற்றவருக்குத் தலைகுனிவு ஏற்படாதவகையில், அவர் கூறும் பொய்யைப் பெரிதுபடுத்துவதில்லை.

இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், தாயோ, தந்தையோ இப்படி ஒன்றைப் பத்தாக்கிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்போது, `நம் பெற்றோர் சொல்வதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும்,’ என்று பிள்ளைகள் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். பொய் பேசுவது தவறில்லை என்ற குணம் பெரியவர்களிடமிருந்து படிந்துவிடும். பெற்றோர் எவ்வழி, பிள்ளைகள் அவ்வழி.

குழந்தைகள் உண்மையே பேசவேண்டும், நேர்மை தவறாது நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அவர்களுக்குப் பெரியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டாமா? பெற்றோரை நம்ப முடியாதவர்கள் அவர்களிடம் தங்கள் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள மட்டும் வருவார்களா?

சில பெற்றோர், `நான் உன் வயதாக இருந்தபோது..,’ என்று அளப்பார்கள், ஏதோ தாம் பெரிய ஹீரோவாக இருந்ததுபோல். பிள்ளைகளுக்கு அறிவும், உற்சாகமும் ஊட்டுவதாக நினைத்துக்கொண்டு.

`அப்பாவோட கட்டுக்கதையையெல்லாம் யார் நம்புவார்கள்! சும்மா எங்களை ஏமாத்தற வேலை! மரியாதைக்காகக் கேட்டுவைப்போம்,’ என்று என் மாணவர்கள் என்னிடம் சொன்னபோது, எனக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

(நான் முதன்முதலில் அவர்கள் வகுப்புக்குள் நுழைந்ததும், மலாய் இனத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயத்துடன் என்னைப் பார்த்தார்கள். அது எனக்குப் புதிய அனுபவம். நான் சீன மாணவிகளுக்குத்தான் பெரும்பாலும் ஆசிரியையாக இருந்து வந்திருந்தேன்.

அவர்களது பயத்தைப்போக்க, நான் நிறைய பேசினேன். மூன்றாம் நாள், `நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள்!’ என்றான் ஒரு மாணவன். அது பாராட்டுதல்பொல் ஒலிக்கவில்லை. அவனுடைய கணிப்பு. அவ்வளவுதான். அவன் பிற ஆசிரியைகளின் வகுப்பில் வாயே திறக்கமாட்டானாம்.
அதன்பின், தாமே வந்து, வந்து, தங்களைப் பாதிக்கும் விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார்கள் அவர்கள். நான் படித்து அறிந்ததைவிட, என்னிடம் பயின்ற மாணவ மாணவிகளிடம் கற்றது அதிகம்).

கலிகாலத்தில் நல்லவர்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாக, பொய்யும் பித்தலாட்டமும் செய்பவர்கள்தாமே செல்வந்தர்களாக இருக்கிறார்கள்? பிள்ளைகளை எதற்கு நல்லவர்களாக நடக்கப் பழக்க வேண்டும் என்று சில பெற்றோர் கேட்க நினைப்பது புரிகிறது.

போலியாக வாழ்பவனுக்குள் எப்பவும் ஒரு பயம், நிம்மதியின்மை இருக்கும் — தன் செல்வம், பதவி, அதிகாரம், ஏதோ ஒன்று கைவிட்டுப் போய்விடுமோ என்று. Being good is its own reward.

இருப்பினும், சிறு குழந்தைகளிடம் அவ்வப்போது பொய் சொல்லாதவர் யார்! நன்றாக அலங்கரித்துக்கொண்டு முக்கியமான ஓர் இடத்துக்குப் புறப்படுகையில், `நானும் வருவேன்,’ என்று அழும் குழந்தையிடம், `டாக்டரைப் பார்க்கப் போகிறேன்,’ என்று சொல்கிறாள் தாய். `நாளைக்கு உன்னையும் அழைத்துக்கொண்டு போகிறேன்,’ என்று சமாதானமும் சொல் கிறாள். எப்படியும், சிறிது நேரத்தில் குழந்தை அதை மறந்து விளையாட ஆரம்பித்துவிடும். இப்படிப் பொய் சொல்வதால் எந்த தீங்கும் விளைவதில்லை என்றே தோன்றுகிறது.

தாம் ஏதாவது விஷமம் செய்துவிட்டு, குற்ற உணர்ச்சி பெருக, பெற்றோரிடம் வருவான். `தப்பு என்று புரிந்து, பயமும் உண்டானபின், தண்டனை எதற்கு!

`போனால் போகிறது! தெரியாமல் செய்துட்டே!’ என்று அனுதாபம் காட்டினால், மனத்தளர்ச்சி ஏற்படும்போதெல்லாம் பெற்றோரை நாடத் தயங்கமாட்டார்கள்.

எந்த வயதாக இருந்தாலும், பிள்ளைகள் செய்த செய்கையைப் பிறர்முன் அம்பலப்படுத்துவது கூடாது. அது அவர்களை அவமானப்படுத்துவதாகும். தனியாக அழைத்து, கண்டனம் இல்லாமல், அவர்கள் செய்தது ஏன் தவறு என்று சொல்லலாம்.
சிறு, சிறு குற்றங்களையும் உடனுக்குடன் கண்டித்து, தண்டிக்க வேண்டும் என்று நினைத்து நடப்பார்கள் சில பெற்றோர். பெரிய குற்றங்கள் செய்யாதிருக்கும் வழியாம்!

தாம் எதற்காகத் தண்டிக்கப்படுகிறோம் என்பதே புரியாத வயதில், `அப்பா அம்மாவிடம் சொன்னால்தானே அடி விழப் போகிறது!’ என்று.எதையும் மறைக்கப் பார்ப்பார்கள் சிறுவர்கள்.`

ஆறு வயதுக்குமேல் ஆன குழந்தைகளிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும். வாரம் பூராவும் நன்றாகப் படித்தால், ஞாயிறன்று கடற்கரைக்கோ, மிருகக்காட்சி சாலைக்கோ அழைத்துப்போவதாக ஆசை காட்டியிருந்தீர்களா? அதன்படி நடந்தால்தான், நீங்கள் அடுத்தமுறை ஏதாவது சொன்னால் நம்பத் தோன்றும்.

ஆனால், அன்று பேய்மழை என்று வைத்துக்கொள்வோம். காரணத்தை விளக்கி, ஒத்திப் போடுங்கள். இது சிறுவர்களுக்கும், அவர்களுடைய உணர்வுகளுக்கும் நீங்கள் கொடுக்கும் மரியாதை.

ஒரு தாய், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தன் மகன் ஹாஸ்டலிலிருந்து விடுமுறைக்கு வீடு திரும்பியதும், அவனுடைய உடைமைகளைச் சோதனையிட்டு, அங்கு தட்டுப்படும் சிகரெட் டப்பாக்களை தூக்கி எறிவதாகப் பெருமையுடன் என்னிடம் சொல்லிக்கொண்டாள்.

`வாராவாரம் இப்படி நடக்கும். அவனும் என்னை எதுவும் கேட்கமாட்டான். நானும் ஒன்றும் சொல்ல மாட்டேன்!’
இப்படிப்பட்ட தாயை மகனால் மதிக்க முடியுமா என்று என் யோசனை போயிற்று. பெற்றோரின் நேரிடையான, அல்லது இத்தாய் செய்ததுபோல் மறைமுகமான எதிர்ப்பே தீய பழக்கங்கள் தொடர உந்துதலாக அமைகிறது. பெரியவர்கள் எதிர்த்தால், தாம் அவர்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெருமை பிள்ளைகளுக்கு எழும். தொடர்ந்து அதையே செய்வார்கள்.

இன்னொரு பிள்ளை, `அம்மா! நான் சிகரெட் பிடிக்கிறேன்!’ என்று கூறினானாம், மனசாட்சியின் தொல்லை தாங்காது.
தான் செய்வது தவறு என்ற உறுத்தலால்தானே அன்பான தாயிடம் அதைச் சொல்கிறான்! இது புரிந்து, நீண்ட பிரசங்கம் செய்யாது, `சரி. ஆனா, போதைப்பழக்கம் வேண்டாம்! பத்திரம்!’ என்றபடி அவள் நகர்ந்துவிட்டாள்.

பல ஆண்டுகள் கழித்து, `நீங்க ரொம்ப மோசம்மா. அன்னிக்கு சிகரெட் பிடிக்கிறதா நான் சொன்னபோது நீங்க திட்டல. எனக்கு சுவாரசியமே போயிடுச்சு. விட்டுட்டேன்!’ என்றான் மகன் குறும்புச் சிரிப்புடன்!

பதின்ம வயதினர் சிறுவர்களிலும் சேர்த்தியில்லை, வளர்ந்த பெரியவர்களும் இல்லை. பொருளாதார சுதந்திரம் கிடையாதுதான். இருந்தாலும், தம் உடலில் ஹார்மோன்களினால் ஏற்படும் மாற்றங்களைப்புரிந்துகொள்ள முடியாத நிலையில், `நான் இன்னும் சிறுகுழந்தை இல்லை!’ என்று முரண்டு பிடிப்பார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திரம் கொடுத்து, தீய பழக்கங்கள், கெட்ட நண்பர்கள் ஆகியவற்றால் விளையக்கூடும் அபாயத்தை, வருமுன் காப்பது போன்று சொல்லித் தருவது நல்லது. எந்தப் பழக்கமும் முற்றியபின் மாற்றுவது கடினம்.

நீங்கள் சிறு வயதிலிருந்தே அவர்களுக்குச் சரியாகப் பேசி, விளையாடிச் செய்திருந்தால், எதிர்த்துப் பேசாமல் கேட்டுக்கொள்வார்கள். பரஸ்பர அன்பும், மரியாதையும் நிலைத்திருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *