-மேகலா இராமமூர்த்தி

தலைவன் ஒருவனும் அவன் ஆருயிர்க் காதலியான தலைவி ஒருத்தியும் இல்லற வாழ்வில் இணைந்து இன்பவானில் பறவைகளாய்ப் பறந்துகொண்டிருந்தனர். ஒருபுறம், காதல் கைகூடிய இன்பம் தலைவனுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம் அவன் மனத்தில் கலக்கமொன்றும் கூடவே பயணித்தபடி இருந்தது. அது என்ன கலக்கம்?

”தலைவியோடு நடாத்திக்கொண்டிருக்கும் இல்லறம் நெடுநாளைக்கு நல்லறமாய்த் திகழப் பொருள் வேண்டுமே! இல்லையெனில் மனித வாழ்க்கைக்குப் பொருளேது? ’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றனரே சான்றோர். இருக்கும் கையிருப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கிவிட்டதே!” என்னும் கலக்கம்தான் அது!

”பெரிய இடத்துப் பெண்ணான தலைவியின் பெற்றோரிடம் சென்று பொருளுதவி பெறலாம்தான்; ஆனால் அது தன் ஆண்மைக்கு அழகாமோ? தன்முயற்சியால் பொருளாதாரம் கொண்டு ’தாரத்தை’க் காப்பாற்றுவதே பேராண்மை…இல்லையெனில் அது பேருக்குத்தான் ஆண்மை!” என்று எண்ணியவனாய்ப் பெருமூச்செறிந்தான். இன்மையின் இளிவை எண்ணி மருகிய அவன் உள்ளத்தின் சோர்வு முகத்தில் நன்றாய்ப் பிரதிபலித்தது.

சின்னாட்களாகவே தலைவனின் முகத்தில் கவலையின் சாயை தென்படுவதையும், அவன் கலகலப்புக் குறைந்தவனாய்க் காட்சியளிப்பதையும் கண்ட தலைவி, “ஐய! ஏன் இந்த முகவாட்டம்? அஃது என் அகத்தையும் வாட்டமுறச் செய்கின்றதே! எதுவாயினும் என்னிடம் தயங்காமல் சொல்லுங்கள்!” என்றாள்.

அவளை நோக்கிய தலைவன் , “கண்ணே! வளமனையில் வாழ்ந்த உன்னை வறுமனையில் கொண்டுவந்து வைத்துவிட்டேனே!” என்று வேதனையோடு கூறத்தொடங்க, இடைமறித்த தலைவி, ”அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; இங்கு நான் மிகுந்த மகிழ்ச்சியோடுதான் இருக்கிறேன், வீணாக வருத்தம் கொள்ளாதீர்கள்” என்றுகூறி முத்தைப் பழிக்கும் தன்பற்களைக் காட்டி முறுவலித்தாள்.

அப்போது மெதுவாய்த் தன் உள்ளக்கிடக்கையை அவளிடம் மொழியலுற்றான் தலைவன். “நீயும் நானும் உடம்பொடு உயிரிடையன்ன நட்பு கொண்டு இனிய இல்லறம் பேணுகின்றோம்; அதில் ஐயமில்லை. எனினும் பொருளீட்டாது, இருப்பதை வைத்துக்கொண்டு நெடுநாள் வளமாய் வாழவியலாது. எனவே வேற்று நாட்டிற்குச்சென்று நான் பொருளீட்டிவர விழைகின்றேன். உன் கருத்தென்ன கண்மணி?” என்று கேட்டான் ஆவலோடு!

தலைவி சிந்தித்தாள். ”நீங்கள் சொல்வது உண்மைதான்! பொருள்வளம் இல்லையெனில் அறவோர்க்களித்தல், அந்தணரோம்பல், விருந்தெதிர் கோடல் உள்ளிட்ட எந்த இல்லறக் கடமையையும் ஆற்றவியலாது. எனவே பொருளீட்ட வேண்டியது அவசியமே. ஆயினும், நீங்கள் வேற்று நாட்டுக்குப் பொருளீட்டச் சென்றால் நான் இங்கே எப்படித் தமியளாய் இருப்பது? நானும் உங்களோடு வருகின்றேனே…இருவரும் சேர்ந்தே செல்வோமே செல்வம் திரட்ட” என்றாள்.

அவள் குழந்தை உள்ளத்தையும், தன்மீது கொண்ட அளவற்ற காதலன்பையும் கண்ட தலைவனின் கண்கள் பனித்தன. “இல்லையம்மா! நான் நம் சிற்றூரையும், அதை அடுத்துள்ள கடலையும் தாண்டி, அப்பாலுள்ள நாட்டுக்குச்சென்று பொருளீட்ட எண்ணியுள்ளேன். பெண்டிரொடு கடல்தாண்டும் வழக்கந்தான் நம்மிடையே இல்லையே! எனவே, சில மாதங்கள் மட்டுமே நீடிக்கவிருக்கும் இப்பிரிவைப் பொறுத்துக்கொள்! நான் அங்கிருந்து அளவற்ற செல்வத்தை ஈட்டிவருவேன்; வளமையைக் கூட்டிவருவேன். அப்புறம் நம் இன்பவாழ்விற்கு எல்லையேது?” என்றான் உவகைபொங்க!

மதிநுட்பம் மிக்க தலைவி தலைவனின் கருத்தை ஏற்றுக்கொண்டாள். அவனை அன்போடு வழியனுப்பி வைத்தாள். வெறுங்கையோடு சென்றவன் வெறுக்கையோடு (செல்வம்) மீள்வான் எனும் உறுதியான நம்பிக்கையோடு நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தாள்.

அவ்வேளையில், தலைவியின் இல்லற வாழ்க்கை எவ்வாறு சென்றுகொண்டிருக்கின்றது என்று அறிந்துகொள்ளும் ஆவலில் தலைவியின் ஆருயிர்த்தோழி அவளைக் காண வந்தாள். ஈருடலும் ஓருயிருமாய் முன்பு வாழ்ந்தவர்கள் அல்லரோ அவர்களிருவரும்! தோழியின் வரவுகண்ட தலைவி அவளை முகனமர்ந்து வரவேற்றாள். தலைவியின் நலத்தைப் பற்றி உசாவிய தோழி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் தலைவியை நோக்கி, “தலைவரைக் காணோமே…எங்கு சென்றிருக்கிறார்?” என்று மெல்ல வினவினாள்.

மென்மையான புன்னகையொன்றை முகத்தில் படரவிட்ட தலைவி, ”அவர் எங்கள் இன்பவாழ்விற்கு அடிப்படையான பொருளைத்தேடி அயல்நாடு சென்றிருக்கின்றார். விரைவில் மீண்டுவிடுவார்” என்றாள் பூரிப்போடு.

”அப்படியா?” என்று வியந்த தோழி, ”உங்கள் களவுக் காலத்தில் (தலைவனும் தலைவியும் காதலர்களாயிருந்தபோது) தலைவனின் சிலமணி நேரப் பிரிவைக்கூட நீ தாங்க மாட்டாய்! இப்போதோ தலைவனைப் பிரிந்து சிலமாதங்கள் ஆகியும் வருத்தமின்றி ஆற்றியிருக்கின்றாயே! இஃதெப்படிச் சாத்தியமாயிற்று? அந்த ரகசியத்தை என்னிடந்தான் சொல்லேன்!” எனக் கேட்டுவிட்டுக் குறும்பாய்ச் சிரித்தாள்.

“அது ஒன்றும் பரம ரகசியமில்லை! தலைவர் எனைப்பிரிந்து அந்நிய நாட்டிற்குச் சென்றால் என்ன? என் நெஞ்சிற்கு எப்போதும் அவர் அணித்தாகத்தான் (அருகில்) இருக்கிறார்; அதுமட்டுமா? அவர் சென்றிருக்கும் நாட்டின் குளிர்ந்தகடலின் அலைகள்தாம் நாள்தவறாது இங்குவந்து (நாரையின் சிறகைப்போல் தாழை மலர்கள் மடல்விரிந்திருக்கும் கடற்கரைச் சோலையின்கண் அமைந்திருக்கும்) நம் சிற்றூரை முத்தமிட்டுச் செல்கின்றனவே! அவ்வலைகளைப் பார்ப்பது எனக்கு அவரைப் பார்ப்பது போலவே இருக்கின்றது!” என்று கூறி மகிழ்ந்தாள்!

”அடடா! கேட்கவே உவப்பாக இருக்கின்றதே உன் மொழிகள்! இவ்விளம் வயதிலேயே நீ பெற்றுவிட்ட அறிவுமுதிர்ச்சி என்னை மலைக்கவைக்கிறது! என்று கூறிவிட்டுத் தலைவியை ஆரத்தழுவிக் கொண்டாள் தோழி.

இத்தகைய வித்தியாசமான தலைவியைப் படைத்துக்காட்டிய குறுந்தொகைப் புலவரின் பெயரும் வித்தியாசமானதே. ஆம், ’செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்’ எனும் பெயரமைந்த அப்புலவரின் இனிய கற்பனையுடன் கூடிய குறுந்தொகைப் பாடல் வருமாறு:

வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை
குருகுளர் சிறகின் விரிபுதோ டவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரைவந்து பெயரும் என்பநத் துறந்து
நெடுஞ்சேண் நாட்டா ராயினும்
நெஞ்சிற்கு அணியரோ தண்கடல் நாட்டே.
(குறுந்: 228)

***

இக்கட்டுரையை வெளியிட்ட தினமணி – தமிழ்மணிக்கு (செப்டம்பர் 6, 2015 இதழ்) என் நன்றி.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *