-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. காயத்ரி அகல்யாவின் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிப்படமாகத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் வல்லமையின் நன்றியறிதலுக்கு உரியவர்கள்.

small boy with a slate

’உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்கிறது புறம். எத்துணைத் துன்பம் வரினும் அதனைத் தக்கவகையில் வென்று கல்வி கற்பதே குழந்தைகளின் வருங்கால வாழ்விற்கு நன்று. தமிழ் எழுத்துக்களைக் கற்பலகையில் கருத்தோடு எழுதிப் பழகும் சிறுவனின் வாழ்வு பொற்புடன் விளங்க நாமும் வாழ்த்துவோம்!

சிறப்பான அறிவுரைகள் பலவற்றைச் சிறுவனுக்கு நம் கவிஞர்கள் வழங்கியிருக்கக் காண்கிறேன். அந்நன்மொழிகளை நாமும் அறிந்து பயன்பெறுவோம்!

ஈகையெனும் ஆயுதம் ஏந்தி வறுமையை விரட்டிச் சிறுமையைச் சாடவும், ஒருமையைப் பாடவும் சிறுவனை அழைக்கிறார் திருமிகு. ராதா மரியரத்தினம்.

…அகரத்தைத் தாண்டி
சிகரத்தில்
ஏறு
உயரத்தில்
நின்று
பள்ளத்தை
நோக்கு
உள்ளத்தைத்
திறந்து
ஈகை
எனும் பேராயுதம் ஏந்தி
வறுமையைப்
போக்கு
சிறுமைகள்
சாடு
ஒருமையைப்
பாடு
பாரதி
கண்ட உலகத்தைக் காணு
ஐயா
அப்துல் கலாம் கண்ட
கனவை
நீ காணு!

***

மெய் (உடல்) தேடிக்கொண்டிருக்கும் மானுட உயிர்(எழுத்துக்)களைத் தன் ’பா’வின் பாடுபொருளாக்கியிருக்கிறார் திரு. கவிஜி.

இம்முறை
என்ன வாங்கி வந்தாய்
என்று கேட்ட
மகனிடம்
தங்கச்சி பாப்பாவோ
தம்பி பாப்பாவோ
வாங்கி வந்ததை
கூற முடியாமல் வயிற்றோடு
இழுத்து அணைத்துக் கொண்டாள்
இரண்டாவது திருமணம்
செய்து கொண்ட
தாய்
ஏதோ மெய் தேடிக் கொண்டிருந்தது
உயிர் எழுத்துக்கள்

***

கற்பலகை ஏந்திய இந்த ஞானச்சிறுவன் ’சிற்றின்பம் விலக்கிப் பேரின்பம் தேடு!’ என அறவுரை அளிப்பதை நமக்கு அறியத்தருகின்றார் திரு. விஎஸ்கே.

அகரத்தில் தொடங்கி
அதையொட்டியப் பயணம்
அளவற்றுப் பெருகி
அவஸ்தைப் படுத்துகிறதே
[…]
இனியென்ன
எழுதட்டும்
ஈதென்ன செய்வதென்னும்
உண்மையிங்குப் புரியாமல்
ஊன்நிமிர்ந்து உதடுகுவித்து
எனையிவனும் நேரிட்டான்
ஏதொன்றும் கூறாமல்
ஐயத்தைப் போக்குதற்கு
ஒருவழியும் தெரியாமல்
ஓவியமாய் யானமர்ந்தேன்
ஔசித்யம் அறிந்தவனோ
வெஃகல் விலக்கேலென்றான்!

***

’எழுத்துக்களுக்கு அகரமே ஆதாரம்; அதுபோல் மானுட வாழ்வுக்கு மகவே ஆதாரம்’ எனும் வாழ்வியல் உண்மையைக் ’குறள் வடிவில்’ விளம்பியுள்ளார் திரு. ஜெயபாரதன்.

அகர முதல எழுத்தெல்லாம்!  வாழ்வு
மகனின் முதற்றே அறி.

***
உறக்கம் வந்ததால் நெடிலைக் குறிலாய் மாற்றியெழுதிவிட்டான் சிறுவன் என்பது திரு(மிகு). மணிச்சிரலின் அனுமானம்.

தூக்கம் வந்து நெடிலை குறிலாக்கினாலும்
துயரம் எதுமில்லை! கொம்பும் முளைப்பதில்லை!
தவறாய் தெரிந்து கண்களை உருட்டினாலும்
பயமும் வருவதில்லை! கண்ணன் மாறவில்லை
நிறத்தை திரித்து கண்போல் காட்டினாலும்
தாக்கம் குறையவில்லை! பார்வை அகலவில்லை!

***

’பழுதிலாத் தமிழ்க்கல்வி அழிவிலாப்புகழைச் சேர்த்திடும்’ என்று நம்பிக்கையோடு சிறுவனைச் சொல்ல வைத்திருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

எழுத்தறி வித்தவன் முதன்முதலில்
எழுதிக் காட்டிய தாய்த்தமிழின்
எழுத்தெலாம் எழுதித் தேர்ந்திடுவேன்,
ஏணியாய் எனையவை ஏற்றிடுமே,
உழுதவன் வளம்பெற வளர்பயிர்போல்
உறுதுணை எனக்குத் தந்திடுமே,
பழுதிலா தாய்த்தமிழ் படிப்பதால்நான்
புகழொடு பெருநிலை பெறுவேனே…!

***

’அகரம் எழுதிப் பழகு அழகாய்; சிகரத்தில் ஏற்றும் உலகம் உன்னை! என்று இளந்தளிரிடம் இன்மொழிகள் கூறுகின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

அகரம் எழுதிப் பழகுமுன்னை நாளை 
சிகரத்தில் ஏற்றும் உலகுநகராமல் 
மெய்யெழுத்துத்  தீட்டுமுன் கையெழுத்தை சீர்செய் 
தலையெழுத்தை மாற்றும் உணர் 

***
’ஆங்கிலக் களிற்றினால் இடறப்பட்ட தமிழ்மகளின் மெய்யில் உயிரும்தான் உளதோ?’ என்றோர் அருமையான வினாவை எழுப்பி நம்மைச் சிந்திக்க வைத்திருக்கின்றார் திருமிகு. லட்சுமி.

  …தரையில் மடிந்து கிடக்கும்
உன் தோள் பையில்
தீந்தமிழுக்கும் இனி
இடம் உண்டா?
[…]
ஓடி விளையாடு பாப்பா
என்றுதான் பாடினேனே!
ஓயாமல் எழுத நானும்
சொல்லவில்லையே!
[…]
காக்கைக்கும்
தாகமுண்டு
என்றே நீயும் கொடைக் கர்ணனாய்
வாழ்ந்திடுவாயா!
[…]

பளிங்கு சிலைகளாய்
வடிக்கப்பட்டு மௌனம் காக்கவா
பா வடித்தோம்!
காக்க மறந்த கிருஷ்ணர்
தேடி இனி எங்கு செல்வது?
ஆங்கிலக் களிறினால் 
இடறிய தமிழ்மகள்
மெய்யுடம்பில் உயிரும்தான்
இனி உளதோ!
களிற்றரசு ஏறி
அறிவியல் தமிழ்மகளும் 
அகிலமெங்கும் உலாப்போகும் 
நாள் எந்நாளோ
அந்நாளே நான் காணும்
தொலைநோக்கு பாரதம்!

***

’சுந்தரத் தமிழ்விடுத்துச் சொர்க்கலோகம் செல்வதும் எனக்குத் தேவையில்லை’ எனச் சூளுரைக்கும் தமிழ்ச்சிங்கத்தைத் தன் ’பா’வழியே படைத்துக் காட்டியிருக்கின்றார் திரு. பெ. முத்துக்குமரன்.

மொழிகளுள் முதலில் தோன்றியதால், தமிழ்
பிறமொழிகளின் கலப்பில்லாதவள் !
தனித்தமிழாய் விளங்குவதால்
பிறமொழி போல் களங்கமில்லாதவள் !
[…]
மூப்பில்லா
கன்னித்தமிழ் முன்னே
அண்டத்தில் ஏதும் அழகில்லை !
தமிழ் அமிழ்தாய் விளங்குவதால்
அவளுக்கென்றும் அழிவில்லை !
[…]
தமிழின்
மதிப்பை குறைத்து
எடை போடவேண்டாம் !
தமிழைவிடுத்து கிடைப்பது
சொர்க்கமாயினும் எனக்கு வேண்டாம் !

***

’எண்ணும் எழுத்தும் என்றும் கண்ணாகும்; நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வே பொன்னாகும்!’ எனச் சிறுவனுக்கு நல்வழி காட்டுகிறார் திருமிகு. வானதி வேதா. இலங்காதிலகம்.

எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
கண்ணெனும் மொழியை நாம்
மண்ணில் முதலில் எழுதினோம்.
இங்கு சிலேட்டுப் பலகையில்.
இப்படித் தயக்கம் வேண்டாம்.
இ ” னா சுற்றிக் கட்டுமொரு
இடறல் எழுத்துத் தான்!
இசைவாக எழுதி முடிப்பானா!

முகத்தின் தயக்கம் எடு!
அகத்தில் நம்பிக்கையுடன் முன்னெடு!
சுகமாக எழுதுவாய் சரியாகும்!
தகவு தானாகச் சேரும்!
நம்பிக்கை கொடுக்காது ஆசிரியரும்
நழுவி அச்சுறுத்தல் கேடாகும்!
நகுதலும் நளினம் செய்தலும்
நல்ல வளர்ச்சிக்குக் குந்தகமாகும்!

***

உளத்திற்கு உரமூட்டும் வளவான சிந்தனைகளை வழங்கியிருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்!

அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகியிருப்பவர் யார் என அறிந்துகொள்ள வேண்டாமா?

’எம்மொழி உயர்தனிச் செம்மொழி! என்று வீணாய்ப் பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பதைவிட்டு, அருந்தமிழை அரியணையேற்று! வையத் தலைமை கொண்டாலும், வாழ்வில் தமிழைக்கொள்!’ எனும் சிறந்த மொழிகளைப் பகரும் ஓர் கவிதை என் இதயத்தை இனிக்கச் செய்து கண்கள் பனிக்கச் செய்தது!

அக்கவிதை…

கரும்பலகையில்
கற்றுக்கொள்ளும் அகரம்
விரும்பியுன்னைத்  தொடவைக்கும்
வெற்றியின் சிகரம்…!

உயிரும் மெய்யும்
உயிர்மெய்யாயும்
ஆயுதம் ஏந்திடு
அருந்தமிழ் காக்க…!

வல்லினமாகி
மெல்லினம் காத்து
இடையினம் ஆகா
இழிநிலை போக்கு…!

உயர்தனிச் செம்மொழியென்னும்
பழங்கதைப் பேசிப் பழகாமல்
அருந்தமிழ் மொழியை
அரியணை ஏற்று…!

மெல்லத் தமிழினிச்
சாகும் என்னும்
பொல்லா மொழியினைப்
பொடிப்பொடியாக்கு…!

வையத் தலைமைகொள்
வாழ்வில் தமிழைக் கொள்
மையப் புள்ளி நீயென
மாநிலத்துக்கெடுத்துக் காட்டு…!

உய்யும் வழியென்றே
உலகை உன்புறம் திருப்பு
ஐயம் அகற்றி
அகிலத்திற்குச் சொல்

அருந்தமிழொன்றே
அவனியில் நிலைக்கும்
ஆயிரமாயிரம்
ஆண்டுகள் கடந்தும்
!

தமிழுயர்வுக்காய்த் தன் கவிதையில் குரல் கொடுத்திருக்கும் திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் மகிழ்வோடு அறிவிக்கின்றேன்.

அடுத்ததாக மற்றுமொரு பொருள்பொதிந்த கவிதை…

பத்துப் பாட்டு
எட்டுத் தொகை
பதினெண் கீழ்கணக்கென
ஒரு கோடி
இலக்கியங்கள் இருந்தும்
’மம்மி டாடி’யிலேயே
மகிழ்கிறது நம் இனம்

குழலினிது
யாழினிதென்பர்
தம் மக்கள்
ஆங்கிலம் பேச கேளாதார்
இதுவே
இன்றையக் குறளாய்
எங்கும் ஒலிக்கிறது
[…]
அன்னை
மொழியில் பேச
அவமானப்படும்
ஒரே இனமென
உலகெங்கும் நாம்
அறியப்படுகிறோம்

இந்த இழிநிலைகளை மாற்ற
உயிரெழுத்துப் பழகும்
இளந் தளிரே
உன்னால் மட்டுமே முடியும்

மொழி என்பது
இனத்தின் இதயம்
இதயம் துறந்த இனம்
பிணமொக்கும் என்பதை
நம்மவருக்கு
உரக்க சொல்
நாளைய விடியலாவது
நன்மை பயக்கட்டும்!

’ஓர் இனத்தின் இதயம் அதன் மொழியே ஆகும்; இதயமற்ற இனம் உயிரற்ற பிணம்!’ எனச் சாடியிருக்கும் திரு. கொ.வை. அரங்கநாதனின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவிக்கின்றேன்.

கவிஞர்களே! தீப்பொறி பறக்கும் சிந்தனைகளை நும் பாக்களில் காண்கின்றேன். பாராட்டுக்கள்!

தொடர்ந்து உங்கள் பங்களிப்பைத் தந்து எம்மைக் களிப்பில் ஆழ்த்துங்கள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி 29-இன் முடிவுகள்

  1. வெற்றி பெற்ற இரு கவிதைகளுமே சூப்பர் வெற்றியாளர்களுக்கு பாராட்டுக்கள்-சரஸ்வதி ராசேந்திரன்

  2. என் கவிதை நெஞ்சம் இனிக்கவும் கண்கள் பனிக்கவும் செய்ததாய்ப் பாராட்டிச் சிறந்த கவிதைய்ய்த் தேர்வு செய்தமைக்கு நன்றி பாராட்டுகிறேன்.

  3. என் கவிதையினைச் சுட்டிக் காட்டி என்னை மென்மேலும் ஊக்கப்படுத்திய ஆசிரியர் குழுவிற்கு மிக நன்றி …வெற்றி பெற்றவர்களுக்கு என் பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *