சுரேஜமீ

எளிமை

peak11
பிறக்கும் போது அனைவரும் வெறுமையாகத்தான் பிறக்கின்றோம் . ஆனால், அவரவர் வாழ்க்கைக்கு ஏற்ப வசதிகள்,

வாய்ப்பினை ஏற்படுத்த,

சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் சில வேற்றுமைகளை விதைக்கிறது.

இதன் விளைவாக ஒரு அந்நியப்படுதல் என்பது தெரிந்தோ தெரியாமலோ சிந்தையில் புகுந்து விடுகிறது.

எப்பொழுது நாம் அன்னியப்படுகிறோம் என்ற உணர்வு மேலோங்குகிறதோ,

எது நம்மைச் சாதாரண நிலையிலிருந்து சற்றே விலகி இருக்க உந்துகிறதோ,

நெருங்கிப் பழகிய நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ தொடர்பிலிருந்து பிரித்து நம்மை மிகுதிப் படுத்துகிறதோ,

அத்தகைய சூழலைக் கையாளும் கலையைக் கற்றுக் கொள்வதும்; நம் நிலையிலிருந்து மாறாதிருத்தலுமே

எளிமையின் இலக்கணம் எனலாம்!

வசதிகள் பெருகலாம்; தவறில்லை! ஆனால், வளர்ந்து வந்த பாதையை விட்டு விலகாமல், வசதிகளை வாய்ப்புக்களாக உருவாக்கி, அடுத்த மனிதனுக்கு எடுத்துச் செல்வதுதான் வாழ்வின் பயனாகும்.

மாட மாளிகைகளோ, வைத்திருக்கும் பல சொகுசுக் கார்களோ, இன்ன பிற செல்வங்களோ,

நம் உழைப்பில் வாங்கியதாக இருந்தாலும், கைக்கு கை மாறிச் செல்லும் இயல்பானது; இல்லையேல், இயற்கை அழிவுக்கு உட்பட்டது!

ஆனால், நாம் தேடும் மனிதம் மட்டுமே, தன் அத்தியாயத்தை நம்மோடு முடித்துக் கொள்வது என்றால்;

அதை நாம் வாழ்வில் சரியாகப் புரிந்து கொள்ளத் தயங்குவதற்குத் தடையாக இருக்கும் மனநிலையைத் தவிர்த்தால்,

நாம் அனைவராலும் விரும்பப்படும் எளிமையான மனிதராக வாழ முடியும்.

ஆனால் அவ்வாறாக இருக்கும் மனிதர்கள் சிலரே!

கேள்வியில்தான் தெளிவு பிறக்கும் என்றாலும், நாம் தகுதியான கேள்விக்கு என்றுமே நம்மை உட்படுத்துவதும் இல்லை!

நிலைமறந்து நிலவைத் தொட்டு என்ன பயன்?

கற்ற கல்வியும்; கல்வியால் பெற்ற செல்வமும் மட்டும் காரணம் அல்ல; மாறாக உழைப்பு தரும் கௌரவம்; தேடி வரும் பட்டஙகள்; பதவி தரும் புகழ் என பட்டியலை அடுக்கிச் செல்லலாம்

கவியரசரின் வரிகளில் சொல்லவேண்டும் என்றால்;

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்……….

செடி கொடிகள்; புள்ளினங்கள் மற்றும் இயற்கை, எத்தன்மையிலும், ஒரே நிலையில் இருக்க,

மனிதன் மற்றும் ஒவ்வொரு நிலையிலும், வெவ்வேறாகப் பிரதிபலிக்கத் துவங்குகிறான்.

இதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்தால்,

மனிதன் மட்டும்தான் ‘தான்’ என்றும்; ‘தனது’ என்றும் சுருக்கிக் கொள்கிறான். அதன் பயனாக, வாழ்வில் பெரும்பான்மையிலிருந்து விலகிச் சிறுபான்மை தொகுப்போடுத் தன்னை ஐக்கியப்படுத்தி, வாழ்வின் நோக்கத்தைச் சிறுமைப் படுத்தி விடுகிறான்.

எளிமைக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்த பலரில் மிகவும் குறிப்பிடத் தக்க தலைவர்கள்,

kamraj

கர்ம வீரர் காமராஜர் மற்றும் சமீபத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும்!

abdul

இரு எடுத்துக் காட்டுகள் இவர்களின் எளிமைக்குச் சான்றாக!

முதலில் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாகக் கருதப்பட்ட கருப்பு காந்தி காமராசர்,

முதல்வராகப் பொறுப்பேற்ற நேரம். பாதுகாப்பிற்காக முன்னும் பின்னும் காவல்துறை சார்ந்த சிவப்பு விளக்குப் பொருத்திய மற்றும் பாதுகாப்பு ஊர்திகள் வர,

தலைவர் காமராசர் உடனடியாக உயர் காவல்துறை அதிகாரியை அழைத்து,

எனக்கு எதற்கு இவ்வளவு ஆடம்பரம்? மக்கள்தான் உயரிய பாதுகாப்பு; ஆகவே, இத்தகைய பாதுகாப்பை உடனடியாக விலக்குங்கள் என்று உத்தரவிட்டாராம்!

அடுத்ததாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரின் எளிமையைச் சொல்ல வேண்டும் என்றால்,

மிகச் சாதாரணமானவர்! இப்படியும் ஒரு மனிதரா என்று வியக்க வைக்கும் மனிதர் இக்காலத்தில் வாழ்ந்தார் என்பதே

நாம் எப்படி எளிமையாக இருக்க வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த மாமனிதர்!

குடியரசுத் தலைவராக இருக்கும்போது ஒரு விழாவுக்குச் செல்கிறார். ஆங்கே அமைக்கப் பட்டிருந்த மேடையிலே,

எல்லா இருக்கையும் சாதரணமாக இருக்க,

ஒன்று மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. அதுதான் டாக்டர் அப்துல் கலாமுக்கான இருக்கை என்று சொல்லக் கேட்டதுமே

இருக்கையை அகற்றச் சொன்னதோடு மட்டுமல்லாமல்,

அவருக்கும் சாதாரண இருக்கையையே அமர்த்துமாறு வேண்டுகிறார்!

இவர்களின் வாழ்வு சொல்லும் நீதி என்ன?

இவர்கள் வாழ்ந்தால் மக்களின் மனதில் நிரந்தரமாக இருக்கலாம் என்ற செய்தி மட்டுமல்ல…..

இயற்கை வாழ்வின் பின்னும் இருந்து வாழலாம் என்றல்லவா சொல்லாமல் செய்திருக்கிறார்கள்!

எளிமையாக இருந்தால், சக மனிதனின் உணர்வுகள் புரியும்; எளிதில் நம்மை அடுத்தவர்கள் அணுகவும்; நாம் மற்றவரை அணுகவும் இயலும்!

இலக்கு நோக்கி எளிதாகப் பயணப்பட முடியும்!

புறநானூற்றுப் பாடல் ஒன்று இப்படிச் சொல்கிறது….

பல்சான் றீரே! பல்சான் றீரே!
…………..
………….

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

குறிப்பாக நம்மால் மற்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும், நிச்சயம் தீங்காவது இழைக்காமல் இருக்க முடியும்! அதுதான் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியது என்றும்;

நல்வழியும் அதுதான் என்றும் சொல்கிறதென்றால்,

எளிமையை விரும்புங்கள்! எளிமையாக இருக்கக் கற்றுக் கொண்டால்,

நமக்கான தேவைகள் புலப்படும்! மற்றவர்களின் தேவைகளையும் நம்மால் நிறைவேற்ற முடியும்!

ஒவ்வொரு நகர்வாகத் தொடர்வோம் சிகரத்தை நோக்கி…….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *