இலக்கியம்கவிதைகள்

பொறாமை

-ஆர். எஸ். கலா

மனிதன் மனதிலே
மறைத்து வைத்து
வளர்க்கும்  மரம்
பொறாமை

இரத்தத்தை நீராக
ஊற்றி எலும்பை
வேலியாகக் கட்டி
பாதுகாத்து வைக்கும் மரம்
பொறாமை

பிறர் வாழ்க்கைமேல்
கல் எறிந்து
அவர்கள் சந்தோசத்தை
உரமாகப் போட்டு
வளர்க்கும் மரம்
பொறாமை

மனம் என்னும்
மண்ணிலே வளர்ந்து
முகத்திரையைக் கிழித்து
ஒரு நாள் வெளியாகும் மரம்
பொறாமை

சிறுகச் சிறுகச் சேர்ப்பவனையும்
சிதைத்துத் துவைக்க
வரும் மரம்
பொறாமை

உறவாடிக் கெடுக்கப்
பாலம் போட
முன்வரும் மரம்
பொறாமை

உள்ளே ஒன்று
வெளியே  ஒன்று
வைத்து மறைக்கக்
காரணமாகும் மரம்
பொறாமை

ஒருவன் வளர்ச்சியைப்
பார்த்ததும் கெட்டவனின்
உள்ளத்தில்
முளையிடும் மரம்
பொறாமை

மனிதன் மனிதனாக
வாழ விடாமல்
தடுக்கும் மரம்
பொறாமை

எத்தனைப் போட்டியிலும்
திட்டம் போட்டு
நுழைகின்ற மரம்
பொறாமை

பொதுவாகப் பொறாமை
விதையிடுவது
எல்லோரிடமும்
உண்மை…
முளையிலே
கிள்ளினால்   நன்மை!

 

Share

Comment here