தமிழ்த்தேனீ.

“ பணம் “ இந்த ஒரு சொல் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது?

அந்தப் பணத்தைச் சேர்க்க மனிதர் என்ன பாடு படுகிறார்? சிலர் தமது உடல் உழைப்பால், சிலர் தமது மூளையால், சிலர் அவர்களின் தந்திரத்தால், சிலர் அவர்களின் கட்டற்ற முறையால் தவறான செயல்களால் சேர்க்கின்றனர் செல்வத்தை.

நான் எப்போதுமே இறைவனிடம் எனக்கு நிறையச் செல்வத்தை அள்ளிக்கொடு என்று வேண்டமாட்டேன். மாறாக, இன்று எனக்குத் தேவையானவற்றை நிறைவாகச் செல்வழிக்க ஐந்து ரூபாய்கள் இருந்தால் போதும் என்றால் அந்த ஐந்து ரூபாய்களை அடைய எனக்கு ஏதேனும் வழிகாட்டு.

நாளை பத்து ரூபாய்கள் வேண்டுமென்றாலோ, அதற்கு மறு நாள் இரண்டு ரூபாய் வேண்டுமென்றாலோ அவற்றை அடைய வழிகாட்டு. வேறு ஒரு நாள் எந்தச் செலவுமே இல்லையென்றால் எனக்கு அன்று பணம் தேவையில்லை. ஆனால் யாரிடமும் கையேந்தும் நிலையையோ அல்லது கடன் வாங்கும் நிலையையோ ஏற்படுத்தாதே என்றுதான் வேண்டிக் கொள்வேன்.

அதற்கு மேல் வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை என்பதுதான் உண்மை, அதற்கு மேல் அதிகப் பணம் வைத்திருந்தால் அதை எப்படிச் செலவழிப்பது என்று தெரியாமல் தீய பழக்க வழக்கங்கள் வரும் என்பதுதான் உண்மை.

மேலும் வாழ்க்கையில் நிம்மதியான நிலையைப் போக்கி பிரச்சனைகளை ஏற்படுத்தும் அதிகப் பணத்தின் கையிருப்பு. ஏனென்றால், அதிகப் பணம் இருக்கும் போது இல்லாதவருக்குக் கொடுப்போம் என்னும் மன நிலை நமக்கு வருவதில்லை என்பதே உண்மை.இந்தக் கருத்தை ஒட்டிய என் கற்பனைக் கதை.

***

Kubera,_the_God_of_Riches_WIKIஒருவர் எதிர்பாராத விதமாகச் செல்வத்தின் அதிபதியான குபேரனை சந்திக்கிறார். அவரிடம் குபேரப் பெருமானே எனக்கு உங்கள் அருள் வேண்டும், ஶ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் வேண்டும் . எனக்கு நிறையப் பொன்னும் பொருளும் பணமும் வேண்டும். ஆகவே பொன் செய்யும் மருந்தொன்று எனக்குக் கொடுத்து அருளினால் என்றும் உங்களை நான் மறவாமல் இருப்பேன். ஏனென்றால் இப்போது பொன்னுக்கு இருக்கும் மதிப்பு வேறு எதற்கும் இல்லை என்றாராம்.

அதற்குக் குபேரன் அந்த மனிதரிடம் நான் சொல்வதைக் கவனமாகக் கேள் மனிதா பொன்னை மனிதர்களாகிய நீங்கள் கண்டு பிடித்தீர்கள், முத்து, பவழம், வைரம் போன்ற விலை மதிப்பற்ற பொருட்களை நீங்கள் கண்டு பிடித்தீர்கள். எங்கள் திரு உருவப் படங்களைப் பதிப்பித்து, விக்ரக வடிவில் வடித்து அவற்றையெல்லாம் எங்கள் மேல் அணிவித்து எங்களைச் செல்வந்தர்களாக காட்டுகிறீர்கள். எங்கள் கைகளின் மூலமாகக் கொட்டுவதைப் போல் காட்டுகிறீர்கள். நீங்களாகக் கற்பனை செய்து கொண்டு அந்தக் கற்பனையை உண்மை என்று நினைத்து நீங்களே ஏமாறுகிறீர்கள்.

நன்றாக யோசித்துப் பார் பணத்தை நாங்களா அச்சடிக்கிறோம், அச்சடிப்பது நீங்கள். அப்படி இருக்க எங்களிடம் வந்து அந்தப் பணத்தைக் கேட்டால் நாங்கள் எப்படித் தருவோம். மிகச் சரியாக விநாயக சதுர்த்தி அன்று நாம் சந்தித்திருக்கிறோம். எல்லாம் இறைவன் செயல். எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் குபேரனாகிய என்னிடம்தாம் எல்லாச் செல்வமும் இருக்கிறது என்று.

ஒரு காலத்தில் என்னுடைய கட்டுப்பாட்டிலேதான் எல்லாச் செல்வமும் இருந்தது. அப்போது எனக்குக் கர்வமும் இருந்தது. அந்தக் கர்வத்தின் விளைவால் நான் பரமசிவனிடம் சென்று அவரை விருந்துக்கு அழைத்தேன் என்னிடம் உள்ள செல்வங்களையெல்லாம் காட்டிப் பெருமைப்படுவதற்கு.

ஆனால் பரமசிவன் எப்படியோ என் மனதில் இருந்ததை அறிந்துகொண்டு அவருக்கு முக்கியமான வேலை இருப்பதாகவும் அதனால் விநாயகரை அனுப்புவதாகவும் சொன்னார். நானும் விநாயகரை விருந்தாளியாய் ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தேன்.

குறிப்பிட்ட தினத்தில் விநாயகரும் வந்தார். அவருக்கு பிடித்தமான எல்லாவித உணவு வகைகளும் சமைத்து அவருக்குத் தலை வாழை இலையிலே பரிமாறினேன். அவரும் மகிழ்ந்து நன்றாகச் சாப்பிட்டார். போடப் போட உண்டு கொண்டே இருந்தார், உணவு வகைகள் எல்லாம் காலியாகின. அடுத்து அவரின் பசியைப் போக்க என்னிடமிருந்த செல்வங்களை எல்லாம் பரிமாறினேன் ஏதோ ஒரு கட்டத்தில் அவருக்கு என்ன தோன்றியதோ போதும் என்றார்.

ஆனால் அவர் போதும் என்கிற சொல்லை உச்சரித்த நேரத்துக்குள் என்னுடைய செல்வத்தில் பாதி காணாமல் போயிற்று. அப்போதுதான் புரிந்தது அது என் கர்வத்தின் விளைவு என்று. ஆகவே செல்வம் அதிகமிருந்தால் கர்வம் வரும். கர்வம் வந்தால் செல்வம் காணாமல் போகும். அதனால்தான் அதற்குப் பெயர் செல்வம் என்று வைத்துவிட்டு, அது இல்லாதவனுக்கு வறுமை என்று பொருள் கொள்ளுகிறீர்கள்.

இந்த உலகத்திலே வயிறு நிரம்பினால் மனம் நிறையும், போதும் போதும் என்று கைகளை குறுக்கே தடுத்து இனி போடாதீர்கள் என்று மறுப்பர். ஆனால் கஜானா நிரம்பினால் மனம் பேராசை கொள்ளும் கைகளை அகல விரித்து இன்னும் வேண்டு இன்னும் வேண்டும் என்று பேராசை கொள்வர்.

பேராசை பெரு நஷ்டம் என்பதை அனுபவித்தவன் நான் . ஆகவே போதும் என்கிற ஒற்றைச் சொல்லையே உனக்குப் பரிசாக அளிக்கிறேன். ஏன் தெரியுமா போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து. என்று கூறிவிட்டு குபேரன் அந்த மனிதரின் கண்ணிலிருந்து மறைந்தே போனார். இன்று வரை அவரைக் காணவில்லை. நீங்கள் யாரேனும் அவரைக் கண்டால் என்னிடம் சொல்லுங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *