கிரேசி மோகன்…

 சிரிங்க

சிரிப்பின் ஸ்தல புராணம்….ஒருமுறை சிவனைப் பார்க்க கைலாஸம் சென்ற மஹாவிஷ்ணுவின் , சக்கரத்தைப் பிள்ளையார் வாயிலிட்டு விழுங்கிவிட்டாராம்….வினாயகரோ, பெரிய வீட்டுப் பிள்ளை(சிவனின் சீமந்தப் புத்திரன்)….அதட்டவும் முடியாது….பார்த்தார் விஷ்ணு….தனது நான்கு(தோர்பி) கைகளால் காதைப்(கர்ணம்) பிடித்து….தோர்பி கர்ணம்தான் நாளடைவில் மருவி தோப்புக் கரணம் ஆனது…. நெடுமால் மேலும் கீழும் எழுந்து அமர்ந்து வேடிக்கைக்(ஸ்லாப்ஸ்டிக் ஹுயூமர்) காட்ட….குழந்தை வினாயகர் சிரித்ததில், வாயிலிட்ட சக்கிரம் உருண்டு விழுந்ததாம்….விஷ்ணு அதை எடுத்துக் கொண்டு சென்றாராம்….இதுதான் ‘’ஹாஸ்யம்’’ பிறந்த கதை….உபயம்-காஞ்சி பெரியவா….அதன் வெண்பாவாக்கம் கீழே….

‘’காப்புக் கரம்கொண்டு, காதைப் பிடித்துமால்,
தோப்புக் கரணமிட தந்தியின்முன், -சாப்பிட்ட,
சக்கிரம் வீழ சிரித்தனன், அக்கணம்,
பொக்கென ஹாஸ்யம் பிறப்பு’’….(1)
—————————————————————————————————————–

‘சிந்திக்கும் வேளை சிரிக்க இறைவனை,
சந்திக் கலாமே சகஜமாய், -பந்திக்கு
முந்துதல் போல முறுவலைப் பூத்திட,
உன்திக்கில் வெற்றி உதிப்பு”….(2)
—————————————————————————————————————–
‘சிரிமுடிந்தால் சிந்தி, சிரமமென்றால் மேலும்
சிரி”சிரித்த பின்மூக்கை சிந்தி, -விரிசிறகை
வானில் பறந்திடுவாய் வாய்விட் டுநகைக்க,
ஊனில் குறையே(து) உனக்கு”….(3)
——————————————————————————————————-
“வாகான வாயுனக்கு வந்ததேன்! , வீழ்த்திடும்,
சோகானு பூதியைச் சொல்லவல்ல, -ஆகாயம்,
கீழுள்ள ஆய கலையில் சிரிப்பின்றேல்,
பாழுந்தன் வாய்ப்பந்தல் பேச்சு”….(4)

————————————————————————————————————–

“சிந்தனை தோன்றும்முன், சீறிக் குதித்திடும்,
பந்தென வாய்க்குள் பளேர்சிரிப்பு, -சிந்தனை,
வாராது போனாலும், வாய்விட் டுச்சிரிக்க,
வாராது நோயுன் வழிக்கு”….(5)
————————————————————————————————————-

‘கொல்லையில் பூத்து கொடியில் மணத்திடும்,
முல்லையைப் போல முறுவலிக்க, -வல்லமை,
தாராய் பராசக்தி, துன்பத்தில், தோல்வியில்,
மாறா சிரிப்பாய் மலர்”…..(6)
————————————————————————————————————–

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிரிப்பதிகாரம் (1)

  1. அன்பின் கிரேசி சார்…

    அமர்க்களம்…அபாரம்..

    தெறிப்பாய்த் தெறிக்கும் சிரிப்”பா” திறப்பார்  
    வெறிப்பாய் நோக்கி வியப்பர் – பிரிப்பார் 
    இதழ்களைப் புன்னகை இன்முகம் மின்ன
    கதறலே இல்லை இனி.

    எஸ் வி வேணுகோபாலன் 
    9445259691

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *