இலக்கியம்கட்டுரைகள்நறுக்..துணுக்...

புறநானூறு (385)

பவள சங்கரி

image

திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.

வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப,
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி,
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை,
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி,

வறன் யான் நீங்கல் வேண்டி, என் அரை
நீல் நிறச் சிதாஅர் களைந்து,
வெளியது உடீஇ, என் பசி களைந்தோனே;
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்,

நல் அருவந்தை, வாழியர்! புல்லிய
வேங்கட விறல் வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே!

பொருளுரை:

வெள்ளியென விடியல் பளபளவென புலர்ந்தது. புள்ளினங்கள் மென்குரலால் இசைக்கின்றன. புலவர் ஒருவர் தடாரிப் பறையை மற்றொருவர் வாயிலில் முழங்கிக் கொண்டிருப்பினும், வறுமை வதைக்கும் அக்குரலைக் கேட்ட ஒருவன் கழிவிரக்கம் கொண்டு, அப்புலவர்தம் வறுமை நீங்கவும், தூய்மையற்ற, நீல நிறம் பாய்ந்த, அவர்தம் கந்தை ஆடையை நீக்கிவிட்டு புதிய தூய வெண்ணாடை அணிவிக்கிறான். காலமறிந்து உதவும் காவிரியன்னை போன்ற அம்பர் அருவந்தை எனும் அந்த சோழ நாட்டான் புல்லியரசன் ஆட்சி புரியும் வேங்கட மலையின்பாற் பொழியும் கணக்கற்ற மழைத்துளிகளைப் போன்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறான்.

படத்திற்கு நன்றி

Share

Comment here