செங்கீரையாடும் குழந்தை முருகன்

Baby-muruga

மீனாட்சி பாலகணேஷ்

கடவுளைக் குழந்தையாக்கிப் பிள்ளைத்தமிழ் பாடுவதில் உள்ள மகிழ்ச்சி என்ன என்றால், அக்கடவுள் அடியார்களுக்கு அருள் செய்ததையும், அவர்களை ஆட்கொள்ளச் செய்த திருவிளையாடல்களையும், அவர்களைத் தம் மீது அன்பு கொள்ளுமாறு கருணை கூர்ந்ததையும், மேலும் இவை போன்ற அனைத்தையும் சிறு பிள்ளையின் விளையாடல்களாகவே கண்டு பாடிப் பரவி, ஆனந்தம் அடைவது தான்.

முருகப்பிரானைக் குழந்தையாகவும் குமரனாகவுமே (இளைஞனாக) நாம் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். குழந்தை முருகன் செங்கீரை ஆடி மகிழும் பருவத்தில் அவன் செங்கீரை ஆடிய அழகினைத் திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழில் பாடி மகிழ்கின்றார் கவியரசு நடேச கவுண்டர்.

முதலில் செங்கீரை ஆடுவது என்னவெனக் காணலாமா? ஒருகாலை நீட்டி ஒருகாலை மடக்கி, முகத்தை நிமிர்த்திப் பார்த்து தவழ முனையும் அருமையான அழகுப் பருவம் தான் செங்கீரைப் பருவம். குழந்தையின் ஐந்தாம் திங்களிலிருந்து இது நிகழும். அவ்வாறு தவழ முனையும் குழந்தை முன்னும் பின்னும் சாய்ந்தாடும். இது பசிய இளந்தளிர்கள் தென்றல் காற்றில் அசைந்தாடுவது போலக் காண்பதனாலோ என்னவோ, செங்கீரைப் பருவம் எனப்படுகின்றது.

கீர் என்றால் சொல் எனவும் தமிழ் மொழியில் ஒரு பொருள் உண்டு. சின்னஞ்சிறு குழந்தைகள் மிழற்றும் பொருளற்ற மழலை மொழியையும் செங்கீரை ஆடுதல் (பொருளற்ற சொல் கூறுதல்- மழலை பேசுதல்) என்பர் புலவர்.

‘குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல்கே ளாதவர்’ என்பது தெய்வப்புலவர் வாக்கு.

இத்தகைய மழலைச் சொல்லுக்குப் பொருள் கற்பித்துப் பெற்றோர் கொள்ளும் பேரானந்தம் இனிய இசையினைக் கேட்டு மகிழ்வதனை விட உயர்வாகும்.
*****

இங்கு திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்களைக் கண்டு அவை காட்டும் வண்ணச் சித்திரங்களின் அழகில் தோய்ந்து மகிழலாமா?
*****

‘ஆடவல்லானாகிய சிவபிரான் அருளிய திருக்குமரா, நீ செங்கீரையாடி எம்மை மகிழ்விப்பாயாக,’ எனும்போதில் அவ்வாடல் வல்லான் ஆடிய நடனக் காட்சியைச் சொற்சித்திரமாகச் சிந்தையில் தீட்டுகிறார் புலவர்.

ஆடுவது என்பது சிவபிரானின் குடும்பத்திற்கே உரிய ஒரு கலை! தகப்பனான சிவபெருமான் அழகுற மன்றினுள் நடனமாடுகின்றான். அனைத்தையும் ஆட்டுவிக்கிறான்! அவனுடன் கங்கைநதிப் புனல் எழுந்தாடுகின்றது; அவன் சடாமுடியிலணிந்த கலைமதியும் அசைந்தாடுகின்றது; கழுத்திலணிந்த கொன்றை மாலையும் தானாடுகின்றதாம்; சடை கலைந்து ஆகாயவெளியுடன் கலந்தாடுகின்றதாம். ஆதவன் (சூரியன்), சோமன் (சந்திரன்), அங்கி (நெருப்பு) எனும் ஐயனுடைய மூன்று விழிகளிலும் கருணை வெள்ளம் பொழிந்து ஆடுகின்றதாம்; ஐயன் ஆடினால் அனைத்துமே ஆடுமன்றோ? அவன் கொவ்வைச் செவ்வாய்ப் புன்முறுவல் எனும் நிலவாடிட, எட்டுத் திசைகளும் அசைவுறும் வண்ணம் எட்டுப்புயங்கள் அசைந்தாடுகின்றன; திருக்கையில் ஏந்திய மழு, தீயினுடன் மான், அவன் புனையும் அணிகளான பாம்புகள் (வரி அரவம்) ஆகியனவும் ஆடுகின்றன. மறைந்த பொருளான வேதங்களின் உறைவிடமானதும், அதனை மிழற்றுவதுமான அவனது சிலம்பணிந்த திருவடிகளின் கீழ் கிடக்கும் முயலகன், ஐயனின் ஆட்டத்தினால் தானும் நெளிந்தாடுகின்றானாம். இவ்வாறு மன்றுள் (சிற்சபை) நின்று சிவபிரான் ஆடுகின்றான்.

ஐயனின் திருநடனத்தை எப்படி வர்ணித்தாலும், திரும்பத் திரும்பப் பாடிக் களித்தாலும், நடனமிடும் அத்திருக்கோலம் நம் மனக்கண்ணில் ஒளிப்பிழம்பான ஒரு சித்திரமாக இந்தப் பிரபஞ்சச் சுழற்சியொடு கூட்டி நம்மையும் ஆட வைக்கும்; அந்த ஆட்ட அழகினைக் கண்ணால் கண்டுணருதல் கடினம்; உய்த்துணருதலே உயர்வாம். கவியரசு நடேச கவுண்டர் இந்தப் பாடலின் மூலம் அவ்வாறு உய்த்துணரும் நிலைக்கு நம்மை உயர்த்தி விடுகிறார்.

‘இத்தகைய ஆடல் அரசனான சிவபிரான் தந்தருளிய குமரனே, (ஐயன் ஆடும் அழகிற்கொப்பக் குழந்தாய்) நீயும் செங்கீரை ஆடி அருளுகவே! குருமலை எனப்படும் சுவாமிமலையில் அமர்ந்த நாதனே செங்கீரை ஆடியருளுக!’ எனத் தாயாக மாறி விண்ணப்பிக்கிறார்.

கங்கா நதிப்புன லெழுந்தாட அங்கணொரு
கலைமதி அலைந்தாடவே
கமழ்நறுங் கொன்றையந் தொங்கலா டச்சடை
கலைந்துவான் கலவியாடப்
பொங்கா தவன்சோம னங்கியெனும் விழிகளிற்
பொழிகருணை வெள்ளமாடப்
புன்முறுவ னிலவாட எண்டிசையு மசைவுறப்
புயமாட அங்கைமேவு
மங்காத எரியினோ டரிணமா டப்புனையும்
வரியரவ மாடநன்கு
மறைமிழற் றுஞ்சிலம் படியடியி லுறும்பசு
மாரனு நெளிந்தாடவே
செங்கோ லெடுத்துமன் றாடியவ ரருள்குமர
செங்கீரை யாடியருளே
திருமருவு குருமலையி லமர்சாமி நாதனே
செங்கீரை யாடியருளே.

இன்னொரு பாடலில் உன் மழலை மொழியால்- செங்கீரையால்- எமக்கு ஒருசொல்லேனும் உபதேசம் செய்வாயாக எனவும் வேண்டுகிறார்.

தமிழின் தனிப்பெருங்கடவுள் முருகன். அவனை, ‘தமிழ் முருக!’ என விளித்து, தீந்தமிழால் இனிமையான ஒரு மழலைச் சொல் கூறி செங்கீரை ஆடி அருள வேண்டி, அவர் தீட்டும் சொற்சித்திரம் இதுவாகும்.

மிகுந்த நீர்வேட்கை கொண்டொருவன் நீருக்காக அலைகின்றான். பரந்து விரிந்து கிடக்கும் கடல்நீர் அவனுக்குத் தெரிகின்றது. (வேறு ஒரு நீரும் கிட்டாமையால்) அவன் அதனை மிகுதியாகப் பருகுகிறான், தாகம் தீர்ந்த பாடில்லை. அவனும் அதை உணரவில்லை. இந்நிலையில் குடுவையில் நல்ல தண்சுவை நீரினை அவனுக்கு அளித்துப் பருகக் கூறினால் அவன் தாகம் தணிந்து மகிழ்வானல்லவா? இதனை உவமை காட்டிக் குமரனாம் குழவியின் மழலையின் பெருமையைப் பாடுகிறார்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களையும் இறைவன் படைத்தான்; அவற்றில் நிலைத்திணை, இயங்குதிணை என வேறுபட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் உடன் படைத்தான்; உயிர்கள் கற்றறிந்து உய்வதற்காகவே நால்வகை வேதம் முதலான நூல்களையும் தந்தருளினான். மனிதனும் காலகாலங்களாக அமர்ந்து இவற்றை மிகவும் முயற்சி எடுத்துக் கற்றான். ஏட்டுச் சுரைக்காய் போல அவை அனைத்தையும் கற்றாலும் அவற்றின் உட்பொருளை உணர்ந்து உய்யும் கலைத்திறன் அவனுக்கில்லை! என்ன செய்வது?

அவ்வமயம் இந்த அறியாமையை அகற்ற வருகிறான் முருகன் எனும் இளம் குமரன். அவன் நம் போன்ற மானிடர்கள் ஒருகாலும் நாமாகக் கற்றுணர முடியாத ஞானத்தை, ஒரே ஒரு சொல் கூறி உணர்த்தியருளினால், உடனே நாமும் ஒரே நொடியில் உயர்கதி பெற்று உய்வோம் அல்லவா? ‘அதனை, அந்த இனிய சொல்லை, உன் இனிய மழலையால் செங்கீரை ஆடி உணர்த்துவாயாக முருகனே!’ எனக் கேட்டுக் கொள்கிறார்(ள்) புலவராகிய தாய்!

ஐவகை எனும்பூதம் ஆதியை வகுத்ததனுள்
அசரசர பேதமான
யாவையும் வகுத்து மறை யாதியும் வகுத்தனைஎம்
ஐயமற் றவைஓதவோ
கைவரு கலைத்திறன் எமக்கிலை வருந்தியே
கற்பினும் கடல்நீரினைக்
காதலில் பருகிநீர் வேட்கைதணி யாதவர்
கணக்காகி நின்றதன்றோ
உய்வகை எமக்கருள ஒருமொழி உரைப்பையேல்
ஓதியுண ராதஞானம்
ஒருநொடியி லெய்தியுயர் கதிபெறுவ மாதலால்
உள்ளுருகி வேண்டுகின்றோம்
தெய்வமறை முடிவான அநுபூதி உறஇனிதோர்
செங்கீரை யாடியருளே
திருமருவு குருமலையி லமரினிய தமிழ்முருக
செங்கீரை யாடியருளே

தெய்வத்தைக் குழந்தையாகக் கண்டு பாடினால் அந்தத் தெய்வம் செய்த அருட்செயல்களை அந்தத் தெய்வக் குழந்தையின் விளையாடல்களாகக் கருதிப் போற்றி மகிழ வாய்ப்பு மிகுகின்றது. பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் இத்தகைய வாய்ப்புக்களைப் பெருமளவில் புலவர்களுக்கு நல்கியுள்ளன என்பது ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலிலும் கண்கூடு.

*****

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *