-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. சாந்தி விஜய் எடுத்திருக்கும்  எழிலான இந்த நிழற்படத்தைப் போட்டிக்குத் தெரிவு செய்து அளித்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது வல்லமை இதழ்.

baby krishna

குழந்தையாய்க் காட்சியளிக்கும் தெய்வ வடிவங்களில் மக்களின் உள்ளங்கவர் கள்வர்கள் இருவர். ஒருவர் குறிஞ்சிநிலக் கடவுளும் பவள மேனியனுமாகிய சேயோன். மற்றொருவர் முல்லைநிலக் கடவுளும் காயாம்பு வண்ணனுமாகிய மாயோன்.

இந்தப் புகைப்படத்தில் காட்சியளிக்கும் குழந்தையோ நீலவண்ணனின் கோலம்புனைந்து தன் அழகாலும் நளின முகக்குறிப்புக்களாலும் நம் உள்ளத்தைக் கொள்ளையடித்துப் போகின்றது.

குழந்தையின் உருவும் அதன் நின்ற திருக்கோலமும் நம் கவிஞர்கள் மத்தியில் எத்தகைய எண்ண அலைகளை எறிந்திருக்கின்றன என்று அறிந்துவருவோம்!

***

’குழந்தைகளால் அடையாளப்படுத்தப்படும் பெரியோர்களும் பார்வையாளர் இல்லா (வாழ்க்கை)நாடகத்தில் குழந்தைகள்தாம்!’ என்கிறார்’ திரு. கவிஜி.

குழந்தைகள்
செய்து காட்டும்
பெரியவர்கள்
குழந்தைகளாகவே
இருக்கிறார்கள்….
யாருமில்லாத
மேடை நாடகத்தில்….

 ***

’குழந்தைகள்மீது பாசம்கொண்ட பாரதியின் ’பாப்பாப் பாட்டு’ கேட்டு மகிழ்ந்த என் செவிகளில் இன்று விழுகின்ற ஆபாசப் பாடலோ அருவருப்பைத் தருகின்றதே!’ எனக் குமுறும் மழலையின் மொழிகளைக் கவிதையாக்கியிருக்கிறார் திருமிகு. லட்சுமி.

 பாப்பா பாட்டு பாடிய
வாயால் ஆபாச கானம்
கேட்க முடியலையே!
எந்தன் மழலைப் பேச்சு
தொல்லை உலகில்
அருகித்தான் போய்விட்டதே!
தொல்லைக்காட்சி வருகையினால்
வயதுக்கு மீறிய பேச்சுக்கள்
கேட்ட காதுகள் இரண்டும்தான்
தொல்லைக்காட்சி வேண்டாம்
 என்று சொன்னதுவே!
[…]
மனிதநேயம் காத்திட்ட
மனிதராக வாழ்ந்திட்டால்
என்றும் நிம்மதி நமக்குத்தான்
இதயம் தொட்ட மகிழ்ச்சிதான்!

*** 

குழந்தைகளைக் குழந்தைகளாய் வளரவிடாமல் வயதுக்கு மீறிய முகபாவனைகளை அவர்களிடம் திணிக்கும் பெரியோர் செயல் ’வேருக்கு விஷம் பாய்ச்சி மரத்தை நஞ்சாக்கும் செயலை ஒக்கும்’ என்கிறார் திரு. மெய்யன் நடராஜ். 

கபடமற்ற குழந்தை முகத்தில்
கபடமுள்ள மனிதர்களின் பாவனை
வரவழைப்பதிலிருந்து
நாளைய சமுதாயத்தின் வேர்களுக்கு
விஷம் பாய்ச்சி வியக்கிறோம்
நாடகமாய் .

*** 

’தம் குழந்தைகளுக்கு ஆடை அணிகலன் பூட்டி அரங்கில் ஆடவிடும் பெற்றோரின் செயல் தம் பணத்தையும் பகட்டையும் காட்டுவதேயன்றி வேறில்லை’ என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

தேடி ஓடிப் பொருள்சேர்க்கும்
தந்தை தாயும் பெருமைக்காக
ஆட விட்டார் அரங்கமதில்
ஆடை அணிகலன் பூட்டியேதான்
வாடும் பயிர்போல் வாடவிட்டார்
விருப்ப மில்லா மழலைகளை,
நாடும் கல்வி அவர்களித்து
நாளை உலகுக் களிப்பீரே…!

*** 

’குழந்தையான தான் ’பெரியமனுஷி’ மாதிரி பாவனை காட்டினால்கூடத் தன் பெண்மைக்கு ஆபத்து வந்திடுமோ!’ என அஞ்சிடும் பிஞ்சு நெஞ்சினைப் பாவில் காட்டியிருக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

முக பாவனையில்
பெரிய மனுஷித்தனம்
காட்டச் சொன்னால்……

அய்யோஅய்யய்யோ….
வன்புணர மிருகங்கள்
வரிசையில் வந்து விடுமே….

பிஞ்சென்றும் பாராது
பிய்த்துத் தின்னும் மனிதர்கள்
[…]

கல்வியில் பாடம் கற்குமுன
கலவியைக் கற்றுத்தரும்
கசடர்கள்….
[…]

விழுந்த விதை
முட்டி மோதி
விருட்சமாய் வருவதற்குள்….
பூ பாரம் தாங்குமோ இப்
புனிதப் பெண் பிள்ளை!

கருவறை தாண்டி வந்தேன்
கல்லறை அடைவதற்குள்
சிறுமலர் வாடுமோ…..
சிறு புள்ளும்
சிறகடித்துப் பறக்குமோ…..

சரிபாதி இட ஒதுக்கீடா….
இருக்குமிடமாவது
தக்க வைத்துக் கொள்வோம்….

***

கண்ணா! உன் முகத்தின் வாட்டத்திற்குக் காரணமென்ன? ராதையுடன் காதல் கைகூடவேண்டுமே எனும் கவலையா? கீதையின் சாரம் சொன்ன களைப்பா? ஏழையின் ஒட்டியவயிறுகண்டு வந்த வேதனையா? எனக் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றார் திருமிகு. ராதா மரியரத்தினம். 

ராதையின் காதல் எண்ணி
கவலை கொண்டாயா இல்லை
கீதையின் சாரம் சொல்லி
களைப்படைந்தாயா
கொவ்வைக்  கனி  இதழை ஒத்த
கோபியர் தம்மை ஏய்த்து
அன்னையிடம் வாங்கிய
அடியை எண்ணித்  துயர் கொண்டாயா 

தான் படைத்த பூமியின்
அழகை அழித்த
மானுடம் நோக்கி உந்தன் கோபமா
தர்மம்நீதி இல்லா உலகைக்
கண்டு மனம் கொதித்தாயா
[…]

காக்கும் கடவுளாய் இருந்து
உலக சமநிலை காத்தாய்
கீர்த்தியுள்ள பெருமாள்
உனக்கு கோடிகள் குவியும் நேரம்
பார்த்திருக்கும் ஏழையின்
ஒட்டிய வயிறு கண்டு
காத்திரமாய் வந்த கோபமா….

***

வேடமிட்ட குழந்தையின் வாயிலாய் மக்கள் கற்கவேண்டிய வாழ்க்கைப் பாடங்களை நன்கு விளக்கியுள்ளீர்கள் கவிஞர்களே! பாராட்டுக்கள்!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் காண்போம்!

இன்றைய பெற்றோரிடம் காணப்படுகின்ற பெரிய குறை, தம் ஆசைகளையெல்லாம் தம் பிள்ளைகள் நிறைவேற்றியே தீரவேண்டும் என்கின்ற நியாயமற்ற எதிர்பார்ப்பு. அதன் விளைவு…எந்தப் போட்டியானாலும் தம் பிள்ளைகள் அதில் பங்கேற்று வெற்றிவாகை சூடிவிடவேண்டும் எனும் பேராசை கலந்த பரிதவிப்பு! அவ்வாறு அன்னையின் வற்புறுத்தலால் அளவற்ற அணிகலன்கள் சுமந்து கண்ணனாக மாறியிருக்கும் குழந்தையொன்று படும்பாட்டை விளக்கும் எளிய பாட்டொன்று கண்டேன்!

எத்தனை சொல்லியும் அம்மாவின் பிடிவாதம்!
இத்தனை பாரம்! செய்த தலையலங்காரம்.!
மொத்த முகப்பூச்சும் சேர்ந்து அம்மாடியென்
சத்தெல்லாம் இழந்ததாய் களைப்பு! அலுப்பு!

இந்த நள்ளிரவில் படத்திற்கு நிற்பது
எந்தப் பிள்ளைக்குத் தரும் மகிழ்விது!
சொல்லுங்கள்! எனக்கு ஆனந்தம் தரவில்லை
வெல்லுங்கள் பிடிவாதத்தாலல்ல அன்பால் எங்களை!
 

மழலையரின் இன்றைய நிலையைத் தன் கவிதையில் எதார்த்தமாய்ப் பேசியுள்ள திருமிகு. வேதா. இலங்காதிலகத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

***

அடுத்து என்னைக் கவர்ந்தது, ’நான் கண்ணன் வேடம் போட்டதுதான் தாமதம்…வந்து குவிந்துவிட்டனவே கோரிக்கை மனுக்கள்!’ என்று நொந்துகொள்ளும் குழந்தையை அழகாய்க் காட்சிப்படுத்தியுள்ள திரு. கொ. வை. அரங்கநாதனின் கவிதை.

அதர்மம் அழித்து
தர்மம் காக்க வந்த
புதிய தலைமுறை
கண்ணனே 

காஷ்மிர் த்ரௌபதியின்
துகிலுரிய காத்திருக்கும்
பாகிஸ்தான் துச்சாதனனுக்கு
பாடம் கற்பிக்கப்போவது
எப்போது

ஜனநாயக களத்தில்
களைகளாய் உணரப்படும்
சமுதாயச் சகுனிகளை
சட்டத்தின் முன்
எப்பொழுது நீ
கொண்டு வருவாய்

ஊழல்களிலிருந்து
நாட்டை மீட்டெடுக்க
புதிய கீதையை
எப்போது நீ
புனையப் போகிறாய் 

மாறு வேடப் போட்டிக்காக
கண்ணன் வேடமிட்டால்
இத்தனை மனுக்களா
அடப் போங்கப்பா
தலை சுத்துது

இக் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

 கவிஞர்களே! எதிர்வரும் போட்டிகளிலும் ஊக்கத்தோடு பங்குகொள்ளுங்கள்; வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 31-இன் முடிவுகள்

  1. பாராட்டிற்குரிய கவிதையாக எனது கவிதையை தேர்ந்தெடுத்தமைக்கு  நன்றி.வாழ்த்துத் தெரிவித்திருக்கும் கவிஞர் திரு. மெய்யன் நடராஜ் அவர்களுக்கு நன்றி! வெற்றி பெற்ற கவிஞருக்கும் பங்கு பெற்ற கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  2. ஓ! நான் எதிர் பார்க்கவே இல்லை சிறப்புக் கவிஞராவேன் என்று.
    தெரிவிற்கு மிக்க நன்றியும் மகிழ்வும்..சகோதரிக்கு.
    .அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *