பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

பழமொழி: ஒன்றேற்றி வெண்படைக்கோள் ஒன்று

 

புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருண்முடிவும் ஒன்றால் – உரைபிறிது
கொண்டெடுத்துக் கூறல், கொடுங்கழித் தண்சேர்ப்ப!
ஒன்றேற்றி வெண்படைக்கோ ளொன்று.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருள் முடிவும் ஒன்றால்; உரை பிறிது
கொண்டு எடுத்துக் கூறல், கொடுங் கழித் தண் சேர்ப்ப!
ஒன்று ஏற்றி வெண்படைக்கோள் ஒன்று.

பொருள் விளக்கம்:
கள்ளமற்ற நட்பு கொண்டவர்களுக்குள், நண்பர் கூறிய சொற்களும் அதன் பொருளும் ஒன்றாகவே இருக்கும். மனதில் ஒன்றும் பேச்சில் மற்றொன்றும் கூறும் வஞ்சனையுள்ளோர் சொல்வது, வளைந்த உப்பங்கழிகள் கொண்ட குளிர்ந்த கடல் நாட்டில் வாழ்பவரே, மற்றொருவர் பாடலை தனது வெண்பா எனச் சொல்லி ஏய்க்கும் செயலுக்கு ஒப்பாகும்.

பழமொழி சொல்லும் பாடம்:
உண்மையான நட்பு கொண்டவர் என்றும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதில்லை. அவ்வாறின்றி, மனம் வேறு, சொல்வேறாகப் பேசும் வஞ்சம் நிறைந்தவர் நட்பைத் தவிர்த்துவிடுதல் வேண்டும் என்ற அறிவுரையை வள்ளுவர்,

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. (குறள்: 819)

சொல்லும் செயலும் மாறுபட்டவரின் நட்பு கனவிலும் துன்பத்தைத் தரும் எனக் கூறி எச்சரிக்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *