நிர்மலா ராகவன்

புகழ்ச்சியும், துணிவும்

 

உனையறிந்தால்3

கேள்வி: நான் ரொம்ப சமத்து, இல்லே?’ என்று என் மூன்று வயதுக் குழந்தை அடிக்கடி கேட்கிறான். ஏன் இப்படி? கர்வமா?

விளக்கம்: குழந்தைகளின் இயல்பு நம்மிலிருந்து வேறுபாடானது. அதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை நம் கோணத்திலிருந்து பார்த்தால் எப்படி!

நாம் ஒரு கதை சொன்னால், மறுநாளும் அதே கதையைச் சொல்லச் சொல்வார்கள் குழந்தைகள். அப்படிச் செய்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என்ற அர்த்தமில்லை. இம்முறையால் ஞாபகசக்தி நன்கு வளரும் என்று இயற்கையாகவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

வீட்டிலிருக்கும் பெரியவர்கள் குழந்தையைப் புகழ்வது அவசியம். `நீ எவ்வளவு சமர்த்து!’ என்று அடிக்கடி கூறி வளர்த்தால், அவனும் அதை அப்படியே ஏற்று, பிறர் மெச்சும்படி நடக்க முயல்கிறான். அடிக்கடி கேட்டு, உறுதிப்படுத்திக் கொள்கிறான். இது கர்வம் என்று அர்த்தமில்லை.

சிலர் அந்த முயற்சியைத் தவறாகப் புரிந்துகொண்டு, `உனக்கு ரொம்பத்தான் தலைக்கனம்!’ என்று திட்டுவார்கள். தனக்கு ஏதோ வேண்டாத குணம் இருக்கிறது என்று குழந்தையின் மனம் நொந்துவிடும்.

பெரியவர்களுக்கே தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படித்தெரியும்? பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அதனால்தான், குழந்தைகளை அசடு, முட்டாள், சோம்பேறி, கறுப்பு என்று பலவாறாகப் பழிக்கக்கூடாது. அவர்கள் முகம் வாடினால், என்னமோ வேடிக்கை என்று நினைத்துச் சிரிப்பவர்கள் இங்கிதம் தெரியாதவர்கள். நாம் `வேடிக்கை’ என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் பிறரை வருந்தச் செய்தால், அதில் என்ன வேடிக்கை இருக்கிறது?

குழந்தைகளைப் புகழ விஷயங்களா இல்லை!

குளித்துவிட்டு வரும்போது, `பளபளன்னு இருக்கியே!’ சாப்பிட்டு முடித்தவுடன், `தொப்பை அழகா, குண்டா இருக்கே!’ அழுது அமர்க்களம் செய்து, கடையில் முடியை வெட்டிக்கொண்டு வந்த சிறுவனிடம், `யாரிது! அழகா இருக்கு, அடையாளமே தெரியலியே!’ — இப்படி வயதுக்கேற்றபடி பாராட்டினால், குழந்தையும் மகிழும், அடுத்த தடவை நம் வேலையும் சுலபமாகும்.

சிறு வயதில் பாராட்டுக்கும், புகழுக்கும் ஏங்கியவர்கள் காலம் பூராவும் அதைப் பெறத் துடிப்பார்கள்.

`பெரிய பதவியிலிருக்கும் பெண்களிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்களைக் கொஞ்சம் புகழ்ந்தால் போதும். நாம் நினைத்ததைச் சாதிக்கலாம்!’ என்று ஆண்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.

அதாவது, ஒருவர் செய்ய யோசிக்கும் காரியத்தைச் புகழ்ச்சியால் செய்ய வைப்பது பிறரது சூழ்ச்சி.

இது தெரிந்தாலும், இன்னொரு முறை ஏமாறாது இருக்க முடியாது இவர்களால். பிறர் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே அமையும் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும்.

பாவம்! போலிப் பாராட்டை எதிர்க்கும் துணிவு இவர்களிடமில்லை. துணிச்சல் பெற ஒரு வழியை எங்கள் ஆசிரியையிடமிருந்து கற்றேன்.

சொந்தக்கதை: அப்போது எனக்குப் பதின்மூன்று வயது . எங்கள் ஆசிரியை கண்டிப்புக்குப் பெயர்போனவர். அவர் சிரித்தே யாரும் பார்த்ததில்லை.

`எனக்கு இந்தக் கணக்கு வரவில்லை, மிஸ்!’ என்று எங்கள் வகுப்பில் யாராவது சொன்னால், `நான் வரமாட்டேன்னு கணக்கு ஒன்கிட்ட வந்து சொல்லிற்றா?’ என்று ஏசுவார்.

நான் ஒரு முறை துணிந்து, `எனக்கு இந்தக் கணக்கைப் போட வரவில்லை,’ என்று சொல்லிவிட்டேன்.

எனக்குப் புத்தி மட்டு என்று ஒத்துக்கொள்ள அவமானமாக இருந்தாலும், எனக்குச் சவாலாக அமைந்த ஒன்றை எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது.

வகுப்பிலிருந்த அனைவரும் பயத்துடன் என்னையே பார்த்தார்கள். எல்லாவற்றிற்குமே திட்டும் ஆசிரியை மிஸஸ். லீலா மேனன்! இதை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்?

ஆசிரியை முகத்தில் சிறு புன்னகை. என்னை அவரருகே அழைத்து, தனியாகச் சொல்லிக்கொடுத்தார்.

அதன்பின், மற்ற மாணவிகளைப்போல, நான் அந்த ஆசிரியையைக் கண்டு அஞ்சவில்லை. பல முறை ஆசிரியைகளின் பொது அறைக்குச் சென்று, கணக்கில் சந்தேகம் கேட்பது வழக்கமாயிற்று. ஒரே ஒரு வரியைக் கோடிகாட்டிவிட்டு, `அப்புறம் என்ன?’ என்று கேட்டுக் கேட்டு, முழுவதையும் என் வாயிலிருந்தே வரவழைத்துவிடுவார். முடிந்ததும், மகிழ்ச்சியுடன் நான் நன்றி தெரிவிக்கையில், அவர் முகத்தில் சிறு புன்னகை அரும்பியிருக்கும்.
நான் கற்று வந்து, சகமாணவிகளுக்குப் போதிப்பேன். ஏனெனில், வேறு யாருக்கும் அவரருகே செல்லத் துணிவிருக்கவில்லை!

அன்று கற்ற பாடம்: தவறு செய்வதோ, ஒரு விஷயம் புரியாமலிருப்பதோ அப்படி ஒன்றும் அவமானத்துக்குரியது அல்ல! தோல்வியால் மனம் துவளாமல், எந்த வயதிலும் புதிய காரியங்களில் ஈடுபட அது பெரும் உதவியாக இருந்திருக்கிறது.
`எனக்குத் தெரியவில்லை. சொல்லிக் கொடுங்களேன்!’ என்று கேட்பதில் என்ன வெட்கம்?

சில சமயம், மாணவர்கள் கேட்கும் ஏதாவது கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குப் பதில் தெரியாமல் இருக்கலாம். `என்னைச் சோதிக்கப் பார்க்கிறாயா?’ என்றுதான் பலரும் ஆத்திரப்படுவார்கள். பொறுமையைக் கைவிடாது, `எனக்குத் தெரியாது. படித்துத் தெரிந்துகொண்டு, இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறேன்,’ என்று சொல்லிப் பாருங்கள். ஆனால், அடிக்கடி அல்ல! அவர்கள் கணிப்பில் உங்களுடைய மதிப்பு உயர்ந்து போகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *