பயன்மிகு இணையவழிச் சேவைகள் – மொழிபெயர்ப்பிற்கு உதவும் தளங்கள் மற்றும் இணைய அகராதிகள்

2

–சிவானந்தம் கனகராஜ்.

இணையத்தில் எத்தனையோ மொழிகளில், எத்தனையோ விதமான தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. நாம் தேடும் தகவல்கள், நாம் அறியாத வேறு மொழியில் இருந்தாலும், அதை இணையத்திலேயே மொழிபெயர்த்து அறிந்து கொள்ள இயலும். ஒரு வலைப்பக்கத்தை முழுமையாக, ஓர் மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யலாம். நமக்குத் தேவையான குறிப்பிட்ட சொற்களை மட்டும் மொழிபெயர்த்து, அவற்றின் பொருளை அறிந்துகொள்ள விரும்பினால், அவ்வாறு ஒரு சொல்லை மட்டும் மொழிபெயர்க்கவும் செய்யலாம். இதற்கு இணையத்தில் மொழிபெயர்ப்பு தளங்கள், ஒரு மொழியில் இருந்து மற்றோர் மொழிக்கு மொழிமாற்றம் செய்து, அதற்குண்டான பொருளையும் வழங்கும் மின்னகராதிகள் பலவும் இணையத்தில் கிடைக்கின்றன. அத்தகைய மொழிபெயர்ப்பு தளங்கள், மின்னகராதிகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

1) கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்புச் சேவை (Google Translation):

கூகுள் வழங்கும் மொழிபெயர்ப்புச் சேவையை பயன்படுத்தி ஆவணங்கள், வலைப்பக்கங்கள், சொற்கள், சொற்றொடர்கள், படக் கோப்புகளில் இருக்கும் சொற்கள், பத்திகள், நமது கையெழுத்து கொண்டே சொற்களை மொழிபெயர்ப்புக்கு உள்ளிடும் முறை, நமது குரல்வழி சொற்களை மொழிபெயர்ப்புக்கு உள்ளிடும் முறை என்று பல வழிகளில் நாம் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை வசதியைப் பயன்படுத்தலாம்.

கணினிகளில் இணைய வசதியினை பயன்படுத்தி, நாம் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் கருவிகளில் பயன்படுத்த என்று கூகுள் மொழிபெயர்ப்பிற்கென்று தனி செயலி (apps) உண்டு. கூகுள் மொழிபெயர்ப்பின் உதவியுடன் தனிச் சொற்கள், சிறிய சொற்றொடர்கள் போன்றவற்றிற்கு மிகத் துல்லியமான மொழிபெயர்ப்பு கிடைக்கும். அதே சமயம், பெரிய பத்திகள், அல்லது ஓர் முழு வலைப்பக்கமோ, ஓர் ஆவணத்தையோ முழுமையாக மொழிபெயர்க்க வேண்டுமெனில், மிகத் துல்லியமான முடிவுகள் கிடைப்பதில்லை.

இன்னபிற மொழிபெயர்ப்பு சேவை வழங்கும் இணையதளங்கள் பலவும் சொற்களை மட்டுமே மொழிபெயர்க்கும் வசதியைத் தரும் வேளையில் கூகுள் வழங்கும் வலைப்பக்க மொழிபெயர்ப்பு முயற்சி வரவேற்கத் தக்கது. தற்சமயம் கூகுள் வழங்கும் இந்த மொழிபெயர்ப்பு சேவை வசதி தொண்ணூறுக்கும் மேற்பட்ட மொழிகளுக்குக் கிடைக்கிறது. இதில், நமது இந்திய மொழிகளான தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, குஜராத்தி,உருது, பெங்காலி, கன்னடம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி ஆகியவையும் அடங்கும். இது, இம்மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தல், அல்லது, ஆங்கிலத்திலிருந்து இம்மொழிகளுக்கு மொழிபெயர்த்தல், மற்றும் இம்மொழிகளிடையே மொழிபெயர்த்தலும் அடங்கும்.

கூகுளின் மொழிபெயர்ப்புச் சேவையை கீழ்க்காணும் இணையதளத்தில் பெறலாம்:
https://translate.google.com/

கூகுள் வழங்கும் ஒலிபெயர்ப்பு சேவை (Google Transliteration):
இவ்வசதி மொழிபெயர்ப்பு செய்ய பயன்படாது. ஆனால், நாம் உள்ளிடும் சொற்களின் ஒலிக்கு ஏற்ப, நமக்கு வேண்டிய மொழியில் ஒலிபெயர்த்து கொடுக்கும். எடுத்துக்காட்டாக, நாம் தமிழில் “அம்மா” என்ற சொல்லை தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால், அது தமிழில் அம்மா என்று நமக்கு ஒலிபெயர்த்து கொடுக்கும். இவ்வசதி, கூகுள் வழங்கும் Google Transliteration சேவையின் மூலம் கிடைக்கிறது. இவ்வசதி தனி வலைப்பக்கத்திலும் கிடைக்கும். அது தவிர கூகுளின் இன்னபிற சேவைகளான கூகுள் மின்னஞ்சல் (Gmail), கூகுள் வழங்கும் வலைப்பூ சேவை (Blogger) ஆகியவற்றிலும் இந்த ஒலிபெயர்ப்பு சேவை கிடைக்கிறது.

கூகுளின் ஒலிபெயர்ப்புச் சேவையை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பயன்படுத்தலாம்:
http://www.google.com/inputtools/try/

2) ஷப்த்கோஷ் :

ஷப்த்கோஷ் இணையதளத்தில் தமிழ், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் வசதி கிடைக்கிறது.

கீழ்க்காணும் இணைய பக்கத்தில் இதனைப் பயன்படுத்தலாம்:
http://shabdkosh.com

இத்தளத்தில் ஒவ்வொரு குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டுமே மொழிபெயர்த்துத் தரும் வசதி இருக்கிறது. நாம் மொழிபெயர்க்க வேண்டிய சொல்லினை உள்ளிட்டால், அச்சொல்லினை உச்சரிக்கும் விதம், சொல்லின் மொழிபெயர்ப்பு, அச்சொல்லின் இன்னபிற வடிவங்கள் ஒருமை/பன்மை (Singular/Plural), வினை வடிவங்கள் (Tense Forms), சொற்பொருள் விளக்கம் (Definitions & Meanings) ) போன்ற தகவல்களையும் நமக்கு வழங்குகின்றது.

ஆண்ட்ராய்ட் (Android), ஆப்பிள் (Apple), மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows), விண்டோஸ் தொலைபேசி (Windows Phone) ஆகிய கருவிகளுக்கு (devices) ஷப்த்கோஷ் தனி செயலி (apps) கிடைக்கிறது.

3) Tamil cube வழங்கும் மொழிபெயர்ப்பு அகராதி:

தமிழ் க்யூப் வழங்கும் மொழிபெயர்ப்பு அகராதி ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கவும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கவும் உதவுகிறது. இந்தத் தளத்தில் பலதுறை சார்ந்த கலைச்சொற்களுக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.

இந்த அகராதியைக் கீழ்க்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்:
dictionary.tamilcube.com/

மொழிபெயர்க்க வேண்டிய சொல்லினை உள்ளிட்டால், அந்தச் சொல்லிற்கான பொருள் அகராதியில் இருப்பின் பொருள் தருவதுடன், அச்சொல்லுக்குத் தொடர்புடைய சொற்கள் மற்றும் இணையான சொற்களை வழங்கி, பொருளும் வழங்குகிறது. இந்தத் தளத்தில், மொழிபெயர்ப்பு சேவை கிடைப்பதுடன், இணையத்தில் இருக்கும் இன்ன பிற மொழிபெயர்ப்பு தளங்கள், இணைய அகராதிகளுக்கு இணைப்புகள் கிடைக்கின்றன.

4) kapruka.com வழங்கும் சிங்கள மற்றும் தமிழ் அகராதி:

கப்ருகா (kapruka) இணையதளம் வழங்கும் இணையவழி அகராதி. ஆங்கிலத்தில் சொற்களை உள்ளிட்டால், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பொருள் வழங்குகிறது. இது தவிர, அச்சொல்லின் ஒலிப்பு முறை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வழங்கப்படுகிறது. நமக்குத் தேவையான சொற்கள் இந்த அகராதியில் காணக் கிடைக்கவில்லையெனில், நாம் நமக்குத் தேவையான சொற்கள் குறித்து வேண்டுகோள் வைத்தால், அந்தச் சொல்லிற்கான மொழிபெயர்ப்பு அகராதியில் சேர்க்கப்படும்.

கீழ்க்காணும் இணையப் பக்கத்தில், இந்த அகராதியைப் பயன்படுத்தலாம்:
http://www.kapruka.com/dictionary/EnglishToSinhala.jsp

5) tamildict.com வழங்கும் தமிழ் – ஆங்கிலம் – ஜெர்மானிய அகராதி:

tamildict.com இணையதளம் வழங்கும் இணையவழி அகராதியில், கிட்டத்தட்ட 45 வகை பிரிவுகளில் சொற்கள் வகை பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்த அகராதியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனாளரும், புதிதாக அகராதியில் சொற்களை சேர்க்கலாம். ஏற்கனவே இருக்கும் மொழிபெயர்ப்பினை மேம்படுத்த விரும்பினால், அங்ஙனமும் செய்யலாம். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டி, திருத்தம் செய்யலாம்.

இது தவிர, எண்களை உள்ளிட்டால், அந்த எண்களைத் தமிழில் உச்சரிப்பது எப்படி என்ற விபரமும் கிடைக்கிறது. 999999999 (தொன்னூற்றியொன்பது கோடியே தொன்னூற்றியொன்பது இலட்சத்து தொன்னூற்றியொன்பது ஆயிரத்து தொளாயிரத்தி தொன்னூற்றியொன்பது) வரையிலான எண்களுக்கு இணையான தமிழ் வார்த்தைகளைத் தருகிறது.

இந்த அகராதியைக் கீழ்க்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்:
http://www.tamildict.com/english.php

6) தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் ஆங்கில – தமிழ் அகராதிகள் :

தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில், பல்வேறு அகராதிகளுக்கான இணைப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள், தமிழ் – ஆங்கில அகராதிகளும் அடங்கும்.
அவை ,
பால்ஸ் அகராதி
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் – தமிழ் அகராதி
இன்னபிற அகராதிகளின் விபரம் குறித்து அறிய, கீழ்க்காணும் இணையதளத்தில் காணலாம்.

தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் அகராதிகள் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm

குறிப்பு:
இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் அனைத்தும், அவற்றின் இணையபக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பயன்மிகு இணையவழிச் சேவைகள் – மொழிபெயர்ப்பிற்கு உதவும் தளங்கள் மற்றும் இணைய அகராதிகள்

  1. மிகவும் பயனுள்ள தகவல்களை நன்கொடையாக வழங்கிய திரு சிவானந்தம் கனகராஜ்ிற்கும் , வல்லமை மின்னிதழிலிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *