ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி…

–கவிஞர் காவிரிமைந்தன்.

வா… வாத்தியாரே… வூட்டாண்டே …
நீ வாராங்காட்டி நான் வுட மாட்டேன்…
ஜாம்பஜார் ஜக்கு… நான் சைதாபேட்டை கொக்கு…

மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்களால் நகைச்சுவை நடிகையாகத் தொடக்கம் தந்த ஆச்சி மனோரமா உலக வரலாற்றில் எவரும் எட்ட முடியாத உயரத்தை எட்டியுள்ளார். கதாநாயகியாக ஜொலித்திருந்தாலும் கூட அவரால் இந்த சரித்திரத்தைப் படைத்திருக்க முடியாது. தமிழ்த் திரையுலகில் பெண் சிவாஜி என்கிற அளவு நடிப்பில் தனது பரிமாணங்களைத் தந்து மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்.

manorama3தில்லானா மோகனாம்பாள், சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்களில் இவரது நடிப்பு இணையற்றது. புரட்சித் தலைவர் முதல், புரட்சித் தலைவி வரை முன்னாள் முதல்வர்கள் ஐவரோடு கலையுலகில் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்.

1300 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, 300க்கும் மேலான பாடல்கள் பாடி தமிழ்த்திரையில் தனித்துவ முத்திரை பதித்து, எல்லோர் நெஞ்சங்களிலும் இடம்பெற்ற நகைச்சுவை நடிகை ஆச்சி மனோரமா அவர்களின் நினைவாக இப்பாடல் பதிவேறுகிறது …

பொம்மலாட்டம் திரைப்படத்தில் வி. குமார் இசையமைப்பில் கவிஞர் வாலி அவர்களின் பாடல். திரையில் தோன்றும் சோ, மனோரமா ஜோடி ஜாடிக்கேத்த மூடி ரகம்!

ஒரு திரைக்கவிஞன் எத்தனைவிதமான பாடல்களை எழுத முடியும் என்பதற்கு கவிஞர் வாலி சரியான எடுத்துக்காட்டு! முத்தான தமிழில் மோகனப் பாடல்கள் தரவும் தெரியும், சல்பேட்டாத் தமிழில் சென்னைத் தமிழ்ப் பாடல் தரவும் முடியும் என்று நிரூபித்தவர்.

அசுரத்தனமான இசை ஞானம், கேட்ட மாத்திரத்தில் வந்துவிழும் பல்லவிகள், பாடல் முழுவதும் அந்தப் பத்திரத்தின் பதிவுகள், விழியிமையினை விரிய வைக்கும் துள்ளல் இசையுடன் நையாண்டி கலவை செய்து மக்கள் மனதில் ‘லபக்’ என்று ஒட்டிக்கொண்ட பாடல்!

manorama2ஆச்சி மனோரமாவின் குரலில் இப்பாடல் அமைந்தது இப்பாடல் பெற்ற புகழுக்கு உச்சம்! நகைச்சுவையை தன்னிலே கலந்தளிக்கும் வல்லமை பொருந்திய “சோ” அவர்களும் ஈடுகொடுத்து உருவாக்கிய இப்பாடல் ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தில் ஏனைய பாடல்களை மிஞ்சி நிற்பது இதற்கான தனித்துவன்களே காரணம்!

ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே கோர்த்தெடுத்து தருகிற யுக்தி “கவிஞர் வாலி”க்கு சபாஷ் போடவைக்கும்!

பொதுவாகவே இப்பாடல் கேட்போரை குதூகலம் செய்யும்போது இந்தப் பாஷையை அன்றாட வாழ்வில் கொண்டிருப்பவர்கள் கொண்டாட்டம் அல்லவா போட்டிருப்பார்கள்!

வா… வாத்தியாரே… வூட்டாண்டே …
நீ வாராங்காட்டி நான் வுட மாட்டேன்…
ஜாம்பஜார் ஜக்கு… நான் சைதாபேட்டை கொக்கு…
ஜாம்பஜார் ஜக்கு… நான் சைதாபேட்டை கொக்கு…

வாராவதிலே நின்னுக்கினிருந்தேன் அமராவதியாட்டம்
கைப்பிடித்து நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்!
லவ்வா பார்த்து ஷோக்கா பேசி
டேக்கா கொடுத்தே பின்னாலே
லவ்வா பார்த்து ஷோக்கா பேசி
டேக்கா கொடுத்தே பின்னாலே
சரிதான் வாம்மா கண்ணு… பட
பேஜாரச்சு நின்னு…
சரிதான் வாம்மா கண்ணு.. பட
பேஜாரச்சு நின்னு… (வா வாத்தியாரே)

நைனா உன் நினைப்பாலே நான்
நாஷ்டா துண்ணு நாளாச்சு…
நைனா உன் நினைப்பாலே நான்
நாஷ்டா துண்ணு நாளாச்சு…
மச்சா உன் மூஞ்சைப் பாத்து
சால்னா நினைப்பு வந்தாச்சு…
மச்சா உன் மூஞ்சைப் பாத்து
சால்னா நினைப்பு வந்தாச்சு…
ஆயாக்கடை இடியாப்பம்னா …
பாயாக்கறியும் நீயாச்சு…
ஆயாக்கடை இடியாப்பம்னா …
பாயாக்கறியும் நீயாச்சு…
வா வா மச்சா வா மச்சான்…
வா வா மச்சா வா மச்சான்…
வா வா மச்சான் ஒண்ணா சேர்ந்து
வாரவதிக்கே போகலாம் … (வா வாத்தியாரே)

காணொளி:https://www.youtube.com/watch?v=oiqJrRG1b7s

Share

About the Author

கவிஞர்.காவிரிமைந்தன்

has written 309 stories on this site.

கவிஞர் காவிரிமைந்தன் நிறுவனர் - பொதுச்செயலாளர் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் பம்மல், சென்னை 600 075 தற்போது.. துபாய் 00917 50 2519693 மின் அஞ்சல் முகவரி - kaviri2012@gmail.com Website: thamizhnadhi.com

One Comment on “ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி…”

  • நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன் wrote on 13 October, 2015, 16:34

    ஆச்சி மனோரமாவின் தமிழ் திரையுலக புகழ் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்

Write a Comment [மறுமொழி இடவும்]


2 − = zero


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.