– புலவர் இரா. இராமமூர்த்தி.

திருவள்ளுவர் தம் திருக்குறளில் ஒரு குறிப்பிட்ட சொல்லையோ, தொடரையோ அடிக்கடி பயன் படுத்துவார்!

அவற்றுள் நன்றி என்ற சொல் அறம் என்ற பொருளிலும் (97, 110, 117), உதவி என்ற பொருளிலும்(102, 104), நன்மை என்ற பொருளிலும் (108) வந்துள்ளது!

அடுத்து, நன்று என்ற சொல், அறம் என்ற பொருளிலும்(38), நன்மை என்ற பொருளிலும்(108), அருள் என்ற பொருளிலும் (253), இன்பம் என்ற பொருளிலும் (328), வந்துள்ளது!

அடுத்து, நயன் என்ற சொல், ஒப்புரவு என்ற பொருளிலும்(216), நீதி என்ற பொருளிலும்(97), அன்புள்ள செயலென்ற பொருளிலும்( 103), விருப்பம் என்ற பொருளிலும்(192) வந்துள்ளது!

இவ்வாறே ஆற்றல் என்ற சொல், ஒத்தல் என்ற பொருளிலும்(101), வலிமை என்ற பொருளிலும் (225), பெருமை என்ற பொருளிலும்(287) வந்துள்ளது! இருள் என்ற சொல், அவிச்சை (5) , மயக்கம் (227), நரகம் (122), இழிபிறப்பு (352) என்ற பொருள்களில் வந்தது!

இவ்வாறே சிறப்பு என்ற சொல், காரணத் திருவிழா (18), மோட்சம், வீடு (31, 358), துறக்கவின்பம் (75), யோகம் (313) ஆகிய பொருள்களில் வந்துள்ளது!

இவ்வாறே பல சொற்களை நாமே கண்டறியலாம்!

ஒருவர் நம்மிடம் ஒரு வினாவை வினவும்போது, நாம் நன்றாக அறிந்த விடையைத் தயக்கமின்றிச் சொல்வோம்! இத்தகைய வினாக்களையும், விடைகளையும் தமிழ் இலக்கணம் வரையறை செய்துள்ளது! வினாவகைகள் ஆறு என்றும், விடை வகைகள் எட்டு என்றும், நன்னூல் கூறுகிறது. நாம் வினவும் வினாவையே மீண்டும் நம்மிடம் கேட்பது போன்ற திருக்குறட்பாக்கள் சில உள்ளன! யானறிந்த வகையில் ஒன்பது குறட்பாக்களில், வினாவியவரையே வினாவும் அமைப்பு உள்ளது இவற்றுள் ஒரு குறட்பாவை விளக்கும் முயற்சியில் புதிய அணுகுமுறை புலப்பட்டது!

”வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்”(291)

என்பதே அந்தத் திருக்குறள்! இந்தத்திருக்குறள் வாய்மை என்ற உண்மை பேசுதல் குறித்த விளக்கத்தை அளிக்கிறது ஒரு சுவையான நிகழ்ச்சியை இத்துடன் சேர்த்து விளக்கலாம்! திருவள்ளுவரிடம் ஒருவர் வினா விடுப்பதாகவும், அவர் அதற்கு விடையளிப்பதாகவும் இந்தத் திருக்குறளுக்கு விளக்கம் கூறுவர்! அடியேன் குருநாதர், திருச்சி தேசியக்கல்லூரிப் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன் கூறும் விளக்கமும் இப்படித்தான் அமைந்தது!

அவர் இதனை விளக்கிக் கூறுகையில், ஒரு சிறுவனிடம் ”எட்டெட்டு எத்தனை?” என்று கேட்டால், அவனுக்கு உடனே விடை புலப்படாது! அவன் சற்றே தயங்கி, ஒரெட்டு எட்டு, ஈரெட்டு பதினாறு … என்று தனக்குள்ளேயே பெருக்கல் வாய் பாட்டைச் சொல்லிப் பார்ப்பான்! இடையில் அவன் நம்மிடமே ”எட்டெட்டுதானே?” என்று கேட்டுக் கொண்டு, சற்று நேரம் எடுத்துக் கொண்டு, மனத்துக்குள் எட்டெட்டு அறுபத்துநான்கு என்ற விடை வந்தவுடன், நம்மிடம் அறுபத்துநான்கு என்று சொல்லி மகிழ்வான்!” என்பார்! அவரே, இந்தச் சிறுவன் தனக்குப் புலப்படாத விடையைக் கூறுமுன் மனத்துக்குள் நினைத்துப் பார்த்து , நம்மையே கேட்டுக்கொண்டு, விடை கூறுவது போல், திருவள்ளுவரும், ”வாய்மை எனப்படுவது யாது?” என்று ஒருவன் கேட்டபோது, அதே வினாவை அவனிடம் மீண்டும் கேட்பது போல்,”வாய்மை எனப்படுவது யாது, எனின்” என்று வினவியபின், விடைதருகிறார்!” என்று விளக்கினார்!

அதாவது, திருவள்ளுவர், ”வாய்மை என்றால் என்ன?” என்ற வினாவுக்கு, உண்மை பேசுதல் என்ற நேரான விடையைக் கூறிவிடலாம்! அவ்வாறு கூறாமல் சிந்திக்கிறார்! அவர் அந்த வினாவைக் கேட்டவரிடமே மீண்டும் கேட்கிறார்! ”வாய்மை என்றால்”, என்பதை ”வாய்மை எனப்படுவது” என்று சற்றே விரிவாக்கிக் கேட்கிறார்! வாய்மை எனப்படுவது என்ற தொடரில்,” வாய்மை என்று சான்றோரால் சிறப்பித்துச் சொல்லப்படுவது” என்ற புதிய பொருளுணர்ச்சியைக் கொள்கிறார்! அவ்வாறாயின், வாய்மை என்ற சொல்லினை விட, வாய்மை எனப் படுவது என்ற தொடருக்கு வேறுபட்ட பொருள் இருக்க வேண்டும்! அப்பொருள், திருவள்ளுவர் கூறும் மாறுபட்ட விடையினால் நமக்கு விளங்குகிறது! உண்மை பேசுதலே வாய்மை! எல்லாரும் அறிந்த இதனையே ஒருவன் வள்ளுவரிடம் வந்து கேட்கிறான் என்றால், அதற்குக் காரணம் இருக்க வேண்டும்! என்று சிந்திக்கிறார்!

ஒரு பெண்ணைக் காமவெறி பிடித்த ஆண்மகன் தொடர்ந்து வந்து துரத்துகிறான்! அந்தப் பெண் விரைந்தோடித் தப்பி விடுகிறாள்! அங்கே வழியில் சான்றோர் ஒருவர் அமர்ந்திருக்கிறார்! அவரிடம் இக்கயவன், ”இங்கே ஒரு பெண் ஓடிவந்தாளே, அவளைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான். அவரும் ”ஆமாம் பார்த்தேன்” என்கிறார்! ”அவள் எந்தப்பக்கம் சென்றாள் ?” என்று கேட்கிறான். அவன் தோற்றத்தையும், ஓடிவந்த பெண்ணின் அச்சத்தையும் புரிந்து கொண்ட அவர், உண்மையை அப்படியே கூறுவதால் தீமை உண்டாகி விடுமே? என்று கருதுகிறார்! அவர் அந்தச் சூழ்நிலைக்கேற்ற வகையில் உண்மையைக் கூறத் தயங்கி அவனுடைய தீய எண்ணம் பலிக்காத வகையிலும், அந்தப் பெண்ணுக்குத் தீங்கு நேராத வகையிலும் வேறுதிசையைக் காட்டி அவனைத் திசை திருப்பி விடுகிறார்!

இந்த வகையில்தான் திருவள்ளுவர் நேரான விடை கூறத் தயங்கி, நன்கு சிந்தித்து, ”தீமை பயவாத சொற்களைச் சொல்லுதலே வாய்மை!” என்கிறார்! அதனால் திருக்குறளுக்குப் புதிய கோணத்தில் விளக்கம் கிட்டிவிடுகிறது! உள்ளதை உள்ளவாறே பேசுவதாலும் தவறு நிகழ்ந்து விடலாம்! இதனை வள்ளுவர் நன்கு சிந்தித்தே இயற்றியுள்ளார் என்பதை அடுத்த குறட்பாவில்,

”பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்!” (292)

என்று கூறுவதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்! புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்றால் மட்டுமே பொய்மை, வாய்மையின் இடத்தினைப் பெறுமென்ற சீரிய சிந்தனை, இதற்கு முதற்குறளில் ”யாதெனின்” என்ற வினாவால் நமக்குப் புலப்பட்டு, புதிய விளக்கத்தினை நமக்கு அளிக்கின்றது!

இவ்வாறே, ”யாதெனின்” என்ற வினா அமைந்துள்ள 178, 254, 321, 789, 831, 844, 986,1041 ஆகிய குறட்பாக்கள், புதிய சிந்தனையுடன் அமைந்திருப்பதை அன்பர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுகிறேன்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *