-மேகலா இராமமூர்த்தி

திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்துள்ள இப்புகைப்படத்தைப் இவ்வாரப் போட்டிக்குத் தேர்வுசெய்துள்ளார் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளிஓவியருக்கும் தேர்வாளருக்கும் வல்லமையின் நன்றி.

 laughing dolls

’சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!’ என்ற புகழ்பெற்ற திரைப்பாடல் ஒன்றுண்டு. சிரித்துவாழ வேண்டும் என்றால் அதற்கு நாம் மெய்வருத்தி உழைக்கவேண்டியது அவசியமாகும். உழைப்பினால் வாராத உறுதிகள் உளவோ?

நமது அடுத்த வேலை, இவ்வாரப் போட்டிக்குக் கவிஞர்கள் வரைந்திருக்கும் இனிய கவிதைகளைப் படித்துமகிழ்தல்!

***
கொலு பொம்மைக்கும் குபேர பொம்மைக்கும் வேறுபாடு அறியாத அழகி ஒருத்தியின் செயலைச் சுவையான கவிதையாக்கியிருக்கிறார் திரு. கவிஜி.

கொலு பொம்மை
என்று நினைத்து
பார்த்து ரசித்து
சத்தமில்லாமல்
சிரித்த
குபேரன் பொம்மையை
சற்று தள்ளி வைத்தாள்
கொலு பார்க்க வந்த
பக்கத்து வீட்டு
அழகி

***
நம்முடைய செல்வ வளத்தை உயர்த்துதற்கு நவராத்திரி நாயகியர் புன்னகையோடு காத்திருக்க, நாம் ஏன் அந்நிய நாட்டு குபேர பொம்மைகளின் சிரிப்பை நாடவேண்டும்? என்று வினா எழுப்புகிறார் திருமிகு. புனிதா கணேசன். 

நவரசத்தின் ஒரு ரசமாய் சிரித்திருக்கும்
நவ சீன குபேர, குண்டு பொம்மைக் கூட்டம்!
பொருள் பெருகும் பெரு நனைவு கொண்டு
மருள் அடைந்த மாந்தர் கொலு வைத்தார்!
அருள் பெருகும் மகா லக்ஷ்மி கடைக்கண்
திருப் பார்வை பெற சிறப்பான நவராத்திரி
இருக்கிறதே! மகத்தான செல்வம் ஈந்திடவே!
இம்மைக்கும் மறுமைக்கும் என்றென்றும்
செம்மையுடன் மனமொடுக்கி வழிபடினே
ஏழேழு பிறப்பிற்கும் கிடைத்திடுமே மங்காது
வாழ்வே துலங்கி நிற்கும் வையகம் வியக்க
செழுமையுடன் செழிக்குமே செல்வம் சீராய்!

***
”சிரிப்பைத் தொலைத்துவிட்ட (மனிதர்களாகிய) நாங்கள், உழைக்க மனமில்லாது, சிரிக்கும் பொம்மைகளான நீங்கள் எமக்குச் செல்வத்தைக் கொண்டுவருவீர்கள் என்று (தவறாக) நம்பிக்கொண்டிருக்கின்றோம்” என்கிறார் திருமிகு. எஸ். நித்தியலட்சுமி.

உன்னைப் போல் எங்களுக்கு
சிரிக்க தெரியவில்லை சந்தோஷமாக!
உன்னை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்
என்று நம்புகிறார்கள்!
ஆனால் , நாள் முழுவதும் உழைத்தால் தான்
செல்வம் பெருகும் என்று தெரியவில்லை நம்மவர்க்கு!!!!

***
’ஆசையே துன்பத்துக்குக் காரணம்’ என்ற புத்தரைச் சிலையாக்கிச் சிரிக்க வைத்துப் பணத்தாசையை மக்களிடம் விதைக்கும் மனிதனின் குணத்தை என்னவென்பது? என்று வேதனையுறுகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

அதிக ஆசை வேண்டாமெனும்
அந்த புத்தரை மறந்துவிட்டே
புதிதாய்ச் சிரிக்கும் புத்தரென்ற
பேரை வைத்துச் சிலைசெய்தே
அதிகமாய் விற்கும் மனிதர்தான்,
அளவிலாச் செல்வம் பெருகிடவே
துதிக்கக் குபேரன் எனச்சொல்லி
தொடர்ந்தார் ஆசையின் பாதையிலே…!

***
’குபரே பொம்மைகளைக் கொலுவைக்கும் வேடிக்கைமனிதரை எண்ணி வயிறுகுலுங்கச் சிரியுங்கள்!’ என்று விளம்புகின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம். 

கலகல சிரிப்பாய் பணமும்
கலகலக்கட்டுமென சீன பொம்மையும்
கல்வி கலைகளோடு கைநிறைய
கவனமாய் கொலுவில் அலங்காரம்.

வேடிக்கை மனிதரை எண்ணி
கூடி வயிறு குலுங்க
நீடித்துச் சிரியுங்கள்! பணமுடக்கம்
ஓட தேடுவார் மனிதர் உங்களை.

***
சிரிக்கும் புத்தர்களைக் கொலுபொம்மைகளாக்குவதை விட்டுவிட்டு அவர்கள் கற்பித்த சீரியவாழ்வை வாழத் தலைப்படுங்கள்! என்று நல்லுரை பகர்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

 

உழைக்கும் கைகளை நம்பாமல்
அடிவயிற்றைத் தடவி எடுத்தால்
அமோக செல்வம் பெற எண்ணும்
அதிமூட மனிதர்காள்……..

உள்ளங்கைகளை நம்பாமல்
மேலே விரிந்த கைகளில்
பணம் வைத்தெடுத்துப்
பணம் பண்ண நினைக்கும்
பகுத்தறியாச் செல்வங்காள்….

[…]

பணத்தைத் தேடி
வாழ்வை இழக்கும்
பயனிலாப் பொழுதாய்
தொலைத்தல் வேண்டாம்…..

சிரிப்பாய்ச்சிரிக்கும்
சீரற்ற வாழ்வில்
தொலைந்த கணங்கள்
திரும்ப மீளா……

அன்றைய பொழுதை
அன்றன்றே ரசிக்க
ஒவ்வொரு கணமும்
ரசித்து ரசித்து வாழும்
அர்த்தமுள்ள வாழ்வை
வாழ்ந்திடச் சொல்லும்
ஜென் மகிழ்வை போதிக்கும்
சிரிக்கும் புத்தர்கள்……
வெறும் பொம்மைகளல்ல…..
அன்றாட வாழ்வை வாழக்
கற்றுக் கொடுக்கும்
அற்புத குரு….ஆசிரியர்கள்!

வணங்குவீர்…..
வாழ்வைக் கண்டடைவீர்!

***
கவிஞர்களே! சிரிக்கும் பொம்மைகளை வைத்துச் சிறப்பான வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் உங்களுக்கு!

அடுத்து நாம் காணவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

நாம் வாழும் உலகு அறத்தைச் சார்ந்து இயங்குகின்றதா? அல்லது…பணத்தைச் சார்ந்து இயங்குகின்றதா? என்றொரு பட்டிமண்டபம் வைத்தால் பணத்தின் பக்கமே நீதிபதி சாயவேண்டியிருக்கும். காரணம்… ’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று பொய்யாமொழிப் புலவரே  விளம்பிவிட்டாரே! அறச்செயல்கள் செய்வதற்குக்கூடப் பொருளின் துணையைத் தேடவேண்டியிருக்கின்றதே!

’குபேர பொம்மையை விற்றே குபேரனானவர்கள் உண்டு; ஆயினும் உண்மைப் புதையல்களை உழைப்பால் கண்டடைவீர்!’ என்று எளிய சொற்களில் எதார்த்தம் பேசும் இனிய கவிதை ஒன்று என் இதயம் கவர்ந்தது.

அக்கவிதை…

உலகம் முழுதும்
உயிர்ப்பொருள் தெய்வம்
பணம் பணமே !
குபேரன் பொம்மைகண்டால்
குஷிகளில் உள்ளம்
குழந்தையாய் துள்ளும்
கீரிப்பிள்ளை
வீட்டிற்குள் வந்தால் கூட
குபேரன் வருவதாக
குறி சொல்லும்
அறியா மக்கள்
குறுக்கு வழியில்
குபேரன் ஆகத்தான்
குவலயமே விரும்புகிறது
குபேரன் பொம்மையை விற்றே
குபேரனானார்கள் பலர்
உண்மைப் புதையல்கள்
உழைப்பால்தான் வரும்
நம்புங்கள் குபேரனை
நம்பி உழையுங்கள்
உவகையுடன் வந்திடுவான்
குபேரனும்!

இந்தக் கவிதையை யாத்திருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

 ***

”பொம்மையே…! நீ ஏன் வயிறு குலுங்கச் சிரிக்கிறாய்? பணத்தைச் செலவுசெய்து உன்னை வாங்கியிருக்கும் என் ஊதாரித்தனம் கண்டா? இல்லை…உழைத்தால் வாராத செல்வம் உன்னை அழைத்துவந்தால் வந்துவிடும் என நம்பவைக்கும் வியாபாரியின் தந்திரத்தைக் கண்டா?” என்று அழகிய வினாக்களை நம்முன் அடுக்குகின்றது ஒரு கவிதை!

அக்கவிதை…

இருந்த பணத்தை செலவுசெய்து
உன்னை வாங்கி ஊதாரியாகிவிட்டதாக
சிரிக்கிறாயோ?

உழைத்தாலும் வாராத செல்வம்
உன்னை வாங்கினால் பெருகுமென்று
உன்னை உருவாக்கியவனின்
விற்பனை தந்திரத்தை எண்ணி
தொந்திக் குலுங்கச் சிரிக்கிறாயோ?

சிரி சிரி...
பொம்மைகளில் உயிரை வைத்திருக்கும்
விஷயத்தில் நானும் குபேரன் என்னும்
உண்மை புரியுவரை மட்டுமல்ல
அதை விளையாடி உடைக்கும்
குழந்தை செல்வத்தை பெருக்கிவிட்ட
உண்மையையும் புரிந்து சிரி.

திரு. மெய்யன் நடராஜின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியது என்று அறிவிக்கின்றேன்.

புகைப்படங்களுக்கும் புதிய புதிய கவிதைகள் எழுதி அசத்தமுடியும் என்று அழகாய் நிரூபித்துவரும் கவிஞர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள் பல! தொடர்ந்து கவிதைகள் எழுதுங்கள்! உங்கள் சிந்தனைத் திறனை வளப்படுத்துங்கள்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 35-இன் முடிவுகள்

  1. இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக எனது கவிதையை தேர்ந்தெடுத்த மேகலாராமமுர்த்திக்கும் ,வல்லமைக்கும் நன்றி==சரஸ்வதி ராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *