-மீனாட்சி பாலகணேஷ்

கண்ட கதை வேண்டா, நீலகண்டன் கதைசொல்!

bala

சிறுகுழந்தைகளைத் தாலாட்டுப்பாடி உறங்கவைப்பது தாய்மார்களுக்கு ஒரு இனிய அனுபவம். தால் என்றால் நாக்கு எனப்பொருள். நாவை அசைத்து, ‘ருலுலுலு வாயீ,’ என அவள் எழுப்பும் ஓசை குழந்தைக்கு என்ன மாயமோ மந்திரமோ, அது அந்தப் பொருளற்ற ஒலியினைக் கேட்டவாறே கண்ணயர்ந்து விடுகின்றது.

குழந்தை உளவியல் வாயிலாகக் காணப்புகுந்தால், இவ்வொலி, அச்சிறு மகவிற்குத் தாயின் அருகாமையைக் காட்டி உறுதி செய்கின்றது. கர்ப்பவாசத்தை விட்டு இவ்வுலகிற்கு வந்து சில மாதங்களே ஆன மகவு, தாயின் அரவணைப்பை அல்லும் பகலும் எதிர்நோக்குகின்றது. சில குழந்தைகள் தாயின் மடியை விட்டு இறங்கினாலேயே அமைதியின்றி அழவாரம்பிக்கும். அதனால் தான் கிராமப்புறங்களில், தாய் தன்னை அணைத்திருப்பதைப் போலவே குழந்தை உணரும் என்பதாலேயோ என்னவோ தாயின் பழைய புடைவையால், ஏணை எனும் தூளியைக் கட்டி அதில் மதலையைக் கண்வளர்த்துவார்கள்.

அதுபோன்றே தாயின் குரல் கேட்கும்போது, தன்னருகே தான் அவளிருக்கிறாள் எனும் பாதுகாப்பு உணர்வில் குழந்தை அமைதி கொள்கின்றது. இதற்காகவே தாய்மார்கள் தாம் குழந்தையின் அருகாமையில் இருக்கிறோம் என உணர்த்தும் வண்ணம் பலவிதமான பாடல்களை இயற்றிப் பாட ஆரம்பித்தனர். தாமாக இன்னும் ஓடியாட இயலாத சின்னஞ்சிறு குழந்தைகள் தாயின் குரல் கேட்டு அவளுடைய அரவணைப்பை உணர்கின்றனர்.

தாலாட்டுப் பாடல்கள் என்பன உலகின் அனைத்து நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் ஒரு தனி இலக்கியமாகவே வளர்ந்தது எனலாம். குழந்தை பசியால் அழும்போதில் தாய்ப்பால் இயல்பாகவே அன்னையிடம் சுரப்பதைப் போல, குழந்தையை உறங்கவைக்கவும் தாய்மையின் வெளிப்பாடாகவே தாலாட்டுப் பாடல்கள் உருப்பெற்றன.

தமிழில் தாலாட்டுப் பாடல்கள் என இருப்பினும், தமிழுக்கே உரிய தனிப்பெருமை வாய்ந்த பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் தாயர் தாலாட்டுப் பாடி மகவை உறங்கவைக்கும் தாலப்பருவம் மூன்றாவது பருவமாக அமைக்கப்பட்டு பத்துப்பாடல்களால் அழகுறப் பாடப்படுகிறது.

kannan

இதில் தாய் குழந்தையை உறங்கும்படி வேண்டுவாள், அக்குழந்தை அவளுக்கு எத்துணை அருமை என விவரிப்பாள், அக்குழந்தையின் விளையாட்டுகளை நினைவுபடுத்திக் கொண்டு மகிழ்வாள்; அவனோ அவளோ பெரியவர்களானதும் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் தனது உள்ளத்து ஆசைகளையும், கனவுகளையும் பற்றியும் பாடுவாள். இது மானிடக் குழைந்தைகட்குப் பொருந்தும்.

தெய்வக் குழவியாயிடின்…?

அந்த தெய்வத்தின் திருவிளையாடல்களைக் கூறி அவற்றை இக்குழந்தைப் பருவத்தோடு பொருத்திப் பாடி மகிழ்வாள்; செயற்கரிய செயல்களில் பெருமை கொள்வாள். இத்தகைய குழந்தை என்னுடையவள் என்று பூரித்து அன்பின் மிகுதியில், உணர்ச்சிப் பெருக்கில், பக்தியில், பாசத்தில் எல்லையில் நின்று களிப்பாள். குழந்தைக்காகவே பற்பல பாடல்களையும் இயற்றுவாள். இதனைத்தான் அடியார்களும், நல்லிசைப் புலமை வாய்ந்த சான்றோர்களும் செய்தனர்.

அன்பின் மிகுதியால் தாங்கள் குழந்தையாகக் கொண்டாடும் தமது தெய்வங்களை செல்லமாகச் சினந்து கொண்டும், அதன் குறும்புகளால் பொய்யாகச் சலிப்படைந்தும், மகிமைகளால் சிலிர்ப்படைந்தும் பலவாறு ஏத்துவர்; போற்றுவர்; பரவினர்.

கோவை கவியரசு நடேச கவுண்டர் அவர்கள் தமது ஆன்மநாயகராகக் கொண்டு வழிபட்ட சீர்காழி பிரம்மபுரீசுவரரின் நாயகியாம் திருநிலை நாயகியின்மீது சொல்நயம், பொருள்நயம், கற்பனைநயம், இன்னும் பல தமிழ்நயங்கள் மிகுந்த பாடல்களால் ஒரு பிள்ளைத்தமிழ் நூலினை இயற்றியருளியுள்ளார். அதன் தாலப் பருவத்திலிருந்து இரு பாடல்களைக் கண்டு களிக்கலாமா?

* * * * *

“அம்மா, காகம், நரி, பூனை, புலி போன்ற கண்ட கண்ட கதைகளெல்லாம் கூறாதே! நீலகண்டன் பற்றிய கதை சொல்! என்றாய் குழந்தாய்! நானும் உனக்காக அவர் கங்கையை எவ்வாறு அடக்கித் தன் சடையில் தரித்துக் கொண்டார் என்ற கதையைக் கூறினேன். கண்ணனாகிய திருமால் பெண்ணாகி மோகினி வடிவம் தரித்து வந்தபோது, அசுரர்கள் மட்டுமல்ல, அண்ணல் சிவபிரானும் அக்கண்ணப்பெண்ணின் அழகில் மயங்கியதைக் கூறினேன். நீ இவற்றைக் கேட்டுவிட்டு, ‘என் கொழுநன் மற்ற பெண்களுடன் குலாவிய கதையையா கூறுகிறாய்,’ என்று ஊடிச் சினம் கொண்டாய்! உன் கண்கள் சினத்தால் சிவந்தன; இமைக்காது உறங்கவும் மறுத்தாய் பார்!

“உலகத்து நியதி ஒன்றினை இங்கு உனக்கு நான் உணர்த்த வேண்டும்! ஒரு தடாகத்தில் மற்ற எத்தனை மலர்கள் மலர்ந்திருந்தாலும் தாமரை மலர் அதிலிருந்தால் அது தாமரைத் தடாகம் என்று தானே வழங்கப்படும்? அது போன்று கங்கையும், மோகினியான திருமாலும் இறைவனைக் கலந்தாலும் அவனை, அந்த மாதேவனை, உலகத்தோர் ‘பார்வதிபதி’ என்று தானே அறிவார்கள்? அந்த விமலனுக்கு இனிய மனைக்கிழத்தி உன்னையன்றி வேறு எவருமில்லையடி குழந்தாய்! ஆதலால் நீ ஊடல் கொள்ள வேண்டாம். நான்மறைகளும் கூட இதையே கூறுகின்றன; இன்னும் வேறு என்ன சான்று உனக்கு வேண்டும்? சினத்தை விட்டொழிப்பாயாக இமயக்கொடியே! காழித் திருநிலைப் பூங்கொம்பே! தாலோ தாலேலோ, துயில் கொள்வாய்,” என்று தாய் கூறுகிறாளாம்.

வேறெந்த பிள்ளைத்தமிழ் நூலிலும் காணாத அருமையான கற்பனை இது! உவமை நயமும் வியக்கத்தக்கது.

ஊடும் குழந்தை உமையும், அருகிலொரு தாயும் தொட்டிலை ஆட்டியவாறு நம் கண்முன் தோன்றும் காட்சி சித்திரமாக விரிகின்றது அல்லவா?

கண்ட கதைவேண் டாநீல
கண்டன் கதைசொ லென்றாய்க்குக்
கங்கை சடைமேற் கரந்தகதை,
கண்ணப் பெண்ணைக் கலந்தகதை
விண்டோம்; ஊடல் கொண்டாய்கொல்;
விழிகள் சிவந்தாய் இமைக்கில்லாய்;
விமலர்க் கினிய மனைக்கிழத்தி
விளம்பி லுன்னை யலதுண்டோ?
வண்டு மொய்க்கும் பிறமலர்கள்
மலர்ந்த தடந்தா மரைத்தடமே
மாதே வன்பார் வதிபதியே;
மறையும் இதற்குச் சான்றாமே
கொண்ட முனிவா றுகவிமயக்
கொடியே தாலோ தாலேலோ!
குளிர்பூங் காழித் திருநிலைப்பூங்
கொம்பே தாலோ தாலேலோ!
(திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

குழந்தை சமாதானமாகி விட்டாள்; ஆனால் உறங்கவில்லை; வாய் ஓயாது என்னவெல்லாமோ பேசிக்கொண்டும், கேள்விகளைக் கேட்டுக் கொண்டும், கண்மூடாது கிடக்கிறாள். தாய் சலிப்பு (பொய்யானது தான்! எந்தத் தாய் குழந்தையை உண்மையாகச் சினந்து கொள்வாள்?) மீதூரக் கூறுகிறாள்:

“அம்மா குழந்தாய்! உன்னை வாகீசுவரி- வாக்குசாதுரியம் மிக்கவள்- எனப் பெருமைப் பட்டுக் கொண்டோம். அதற்கேற்ப நீயும் இடைவிடாது பேசுகின்றாய்; மூகேசுவரி எனவும் ஏத்தினோம் (மூகாம்பிகை என ஒரு பிரபலமான அம்பிகை கோவில் உண்டு) அதற்கேற்பவும் நீ சில பொழுதுகள் நடந்து கொள்ள வேண்டாமோ? (அதாவது வாய்பேசாது மௌனமாக இருக்க வேண்டும்); தற்சமயம் சிறிதே கண் துயிலாயோ? நீரில் குதித்து நீந்தி விளையாடும் கயல்மீன் போன்ற கண்கள் கொண்ட மீனாட்சி எனப் பெருமைப்பட்டோம். நீயும் அதற்கேற்ப இரவும் பகலும் உறங்காது விழித்திருக்கிறாய்! (தாய்மீன் தனது குஞ்சுகளைக் காக்க வேண்டிக் கண்ணிமைகளை மூடாது இருக்குமாம்; அதுபோன்று அன்னை மீனாட்சியும் குழந்தைகளாகிய நம்மை அனவரதமும் காக்க வேண்டி கண்களை மூடுவதில்லையாம்!). பதும (தாமரை) விழியாள் என்றோம்- அதற்கேற்ப (தாமரை மலர் இரவில் குவிந்து மூடுவது போல) நீயும் கண்மூடி உறங்க வேண்டாமோ? பாவை போன்ற பெண்ணே! வாய் திறந்து பேசிக் கொண்டே இராது, பட்டால் கட்டிய இந்த ஏணையில் உறங்குவாயாக! சண்பை நகர்த் தலைவியே! திருஞான சம்பந்தருக்குப் பாலமுதம் அளித்த தாயல்லவோ நீ! தாலோ தாலேலோ!” என உறங்க வைக்கிறாள் அன்னை.

திருமாளிகையில் ஓர் அறையில் நிகழும் இந்தச் சிறு வாக்குவாதத்தை நாமும் மனக்கண்ணில் கண்டு களிக்க, குழந்தையின் குறும்பை எண்ணி நம் இதழ்களில் நம்மையறியாமலே புன்னகை மலர்கின்றது.

மதுர வாகீ சுவரியென்றோம்
மலர்வாய் மழலை மொழியாயால்
மாமூ கேசு வரியாகி
மணியே சிறிதே துயிலாயோ
குதிகொள் கயற்கண் ணாளென்று
குறித்தே மிரவு பகலுறங்காய்
குவளைக் கண்ணா யென்றாலும்
கூடாய் துயிலிவ் விரவெல்லாம்
பதும விழியா யென்றின்னே
பகர்ந்தோ மிரவு விழிமூடிப்
பாவாய்! தூவாய் திறவாமல்
பட்டே ணையினி லுறங்குகவே
சதுர மறைசேர் சண்பைநகர்த்
தலைவீ தாலோ தாலேலோ!
சம்பந்தர்க்குப் பாலளித்த
தாயே தாலோ தாலேலோ!
(திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

இந்தத் திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் எனும் நூல் கற்பனை வளம் நனி சொட்டச் சொட்ட எழுதப்பட்டுள்ளது. பயிலுந்தொறும் பரவசமூட்டும் இனிமையான நயமிகுந்த பாடல்கள். இனிய தமிழ்ச் சித்திரங்களான இன்னும் சிலவற்றைப் பிறிதொரு சமயம் காணலாமே!

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *