மணமகளே உன் மணவறைக்கோலம் – 1

1

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே …

 

— வைதேகி ரமணன்.

 

எதைப்பற்றி எழுத என்று யோசித்தபோது, ஏன் திருமணத்தைப் பற்றி எழுதக்கூடாது என்ற சிந்தனைதான் முதலில் தோன்றியது. திருமணம் செய்யாதவள் எப்படி திருமணம் பற்றி எழுதலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் கூடாது?

நான் பார்த்த, செய்து வைத்த திருமணங்களைப் பற்றி எழுதலாமே என்ற எண்ணத்தில் எழுதத் துணிந்துவிட்டேன்.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் மூத்த அக்காவின் திருமணம் நடந்தது நான் பிறந்து வளர்ந்து இப்போது பிரிந்திருக்கும் ஊரில்தான். அதன் பேர் என்ன என்றுதானே யோசிக்கிறீர்கள்? அது எதுக்கு இப்ப??? பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாதுதானே!!!

விடிய காலையில் சூரியோதயத்திற்கு முன்னர் நடந்தது. புதுச்சட்டை போட்டிருந்ததும், அக்கா மணவறையில் உட்கார்ந்திருந்ததும் லேசாக நினைவில் இருக்கு. அதன் பின்னர் பக்கத்து வீடு மாமா பெரிய அண்டாவில் சோறு, குழம்பு, காய்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒரு கையில் பெரிய கரண்டியும் மறுகையில் பெரிய கழியும் வைத்து குறவன், குறத்தி, பிச்சைக்காரர்களை வரிசைப்படுத்தியும், அடித்தும் அந்தச் சோறு முழுவதையும் பகிர்ந்து அளித்ததும் லேசாக நினைவில் வருது.

அந்த மாமாவின் திருமணம்தான் அடுத்து நான் பார்த்தது. அது எதுவும் நினைவில் இல்லை. அதில் மீந்து போன சாம்பாரை மறுநாள் சூடாக்கியது மட்டும் நினைவில் இருக்கு. அதன் சுவை இன்னும் நாவில் இருக்கு. நாங்கள், சிறுவர்கள் எல்லாம் புதுச்சட்டை போட்டு நேரம் காலம் தெரியாமல் விளையாண்டதும் நினைவில் இருக்கு.

அப்படியே பதினோராம் வகுப்பிற்கு வந்துவிட்டேன். என் தோழிக்குத் திருமணம் பேசினார்கள். பள்ளியில் செய்தி பரவத் தொடங்கியது. ஆசிரியர்கள் அவளைக் கேட்டால் உடனே அழத் தொடங்கிவிடுவாள். நாங்கள் கேட்டாலும் அப்படித்தான். இத்தனைக்கும் நானும் அவளும் ஒரே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், பிறகு ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை பெண்கள் பள்ளியிலும் ஒன்றாகவே படித்தோம். நான்கு தெரு தள்ளியிருந்தாலும் ஒன்றாகவே பள்ளி முடிந்து திரும்புவோம். மதிய சாப்பாட்டிற்கு அந்த நாட்களில் வீட்டிற்கு வருவோம். அத்தனை நெருக்கமான நான் கேட்டாலும் கூட உடனே அழுது விடுவாள். நானும் அவளும் ‘திக்’ தோழிகள் என்றாலும் பக்கத்தில் உட்கார முடியாது. அவள் நல்ல உயரம். அந்தக் காலத்தில் உயரப்படிதான் வரிசையாக வகுப்பில் உட்கார வைப்பார்கள்.

அவளின் திருமண நாளும் வந்தது. பக்கத்துத் தெருவில் என் அக்காவிற்கு நடந்த அதே கல்யாண மண்டபத்தில்தான் திருமணம் நடந்தது. விடுமுறை நாள்தான் அது. நாங்களும் போகலை. அவளும் கூப்பிடலை. வீட்டில் ஒருமுறை, ஒரே ஒருமுறை அம்மாவிடம் அவள் திருமணம் பற்றிக் கூறியபோது… ம்ம்… ம்ம்… போதும் போதும்… திருமணம் பற்றியெல்லாம் சிறுவர்கள் பேசக்கூடாது என்று கூறிவிட்டார்கள். பிறகெங்கே வீட்டில் வாயைத் திறப்பது. அதே வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணமே நடக்கிறது. ஒருத்திக்கு அதைப்பற்றிப் பேசக்கூட அனுமதியில்லை. எதிர்த்து பேசத் தெரியாத சூழலில் வாழ்ந்த காலகட்டம் அது.

திருமணம் முடிந்து பள்ளி திரும்பினாள். கழுத்தில் கறுப்பு மணி இருந்தது தவிர வேறு மாற்றம் ஏதும் இல்லை. அப்போதும் ஏதாவது சிறிய கேள்வி கேட்டால் உடனே அழுவாள். திருமணம் ஏன் செய்து கொள்கிறார்கள் என்பது கூடத் தெரியாத வயது, சூழல், குடும்பம் இப்படிப் பல காரணங்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் அக்கா அவளைப் பார்த்துப் பேசியிருக்கிறார்கள். அவள் மகளை அவளது தம்பிக்கே கொடுத்ததாகவும், அவளது கணவர் இறந்துவிட்டதாகவும், நான் சென்னை வந்தபிறகு அவளைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்கள். நானும் வந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் சந்திக்க நேரம் வரவில்லை.

அவள் தம்பியும் என் தம்பியும் ஒரே வகுப்பு. அவள் தம்பி அவனுடைய பெயரை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டிச் சொல்லுவான். காரணம், அவன் பெயர் நாலே எழுத்து R–A–V–I. என் தம்பியால் முடியாது. அந்தக் காலத்தில் ஆங்கிலப் பாடப்புத்தகங்களில் ‘ரவி’ அல்லது ‘ராமா’ என்ற பெயர்தான் அதிகம் இருக்கும். என் தம்பியின் நீளமான பெயரெல்லாம் புத்தகத்தில் வராது. எனக்கு என் பெற்றோரின் பெயரில் கோவமாக வரும். ஏன் இப்படி இவனுக்குப் பெரிய பெயர் வைத்தார்கள் என்று. பெயரை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி உச்சரிப்பதெல்லாம் , பெரிய ….. திறமையாக மதிக்கப்பட்ட காலம் அது.

அதன் பிறகு கல்லூரி. அப்போதெல்லாம் யார் திருமணத்திற்கும் போக வீட்டில் அனுமதியில்லை. எனவே போனதாக நினைவுமில்லை. பிறகு, பல்கலைக்கழகம். அப்போதும் போனதில்லை. நான் மாஸ்டர்ஸ் டிகிரிக்குப் படிக்கும் போது என் இரண்டாவது அக்காவின் திருமணம் நடந்தது. நானும் என் தம்பியும் போகலை. அதனால் எப்படியிருந்தது என்று சொல்ல முடியலை. ஆனால் அவர்களுக்கு நடந்த ரிசப்ஷனுக்கு என் தோழிகள் எல்லாம் வந்தார்கள். பரிசளித்தார்கள். கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

பின் ஆராய்ச்சிப் படிப்பில் என் தோழியாக ஒரு ‘டுயூட்டர்’ வந்தார். அவரும் அதே வகுப்பில் ஒன்றாகப் படிக்கவே, ‘கம்பைன் ஸ்டடி’ என்று இருவரும் நெருங்கிப் பழகினோம். அவருக்குத் திருமணமாகவில்லை என்பது அவருடைய பெரிய கவலையாக இருந்தது. உண்மையாகவே மிகவும் கவலைப்பட்டார்கள். யார் யாரெல்லாமோ மாப்பிள்ளை பார்த்தும் கடைசியாக எங்கள் பேராசிரியரின் மாணவன் ஒருவரைத் திருமணம் செய்தார்கள்.

அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள். கொஞ்சம் நஞ்சமல்ல. என் சகோதரிகள் இருவரும், அவருடைய பழைய நண்பர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கோவைக்குப் பயணப்பட்டு சிலபல பிரச்சனைகளை மணமகன் வீட்டாரோடு பேசி சரிசெய்த பிறகு நடந்த திருமணம் அது. அதற்குப் போக வீட்டில் அனுமதி கிடைத்தது. திருமண மேடையிலேயே மணமகனும் மணமகளும் நண்பர்களும் அரட்டை. திருமணமே ஏதோ டிப்பார்ட்மென்ட் மீட்டிங் போல நடந்தது. பதினைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து, இரண்டு பிள்ளைகளையும் பெற்ற பிறகு, இப்பொழுது பதினைந்து ஆண்டுகளாகப் பிரிந்து தனித்தனியே வாழ்கிறார்கள். இன்னமும் அவர்கள் இருவருக்கும் தோழி நம்பர் ஒண்ணு நான்தான்.

அதன்பிறகு எனக்கு சீனியரான தோழி சாந்தியின் திருமணம் நடந்தது. நண்பர்கள் எல்லோரும் தஞ்சைக்குப் போனோம். அதிகாலையில் திருமணம், மாலையில் ரிசப்ஷன். எனவே இடையில் கல்லணை, கோவில் என்று செம்ம சுற்றல். நன்றாக என்ஜாய் செய்தோம். மற்றதெல்லாம் அவ்வளவாக நினைவில் இல்லை. எப்படிப் போனோம்; வந்தோம் என்பதெல்லாம் தெரியவில்லை.

அதன்பிறகு, எங்கள் துறை டைப்பிஸ்ட் அலமேலு திருமணம் உள்ளூரில் நடந்தது. அதற்கும் கும்பலாகப் போய் மகிழ்ச்சியாக இருந்தோம். இவ்வாறு தோழிகளின் திருமணங்களில் கொண்டாட்டம் போட்டதற்கும் ஒருபடி மேலே சென்று எனது தோழிகளின் திருமணங்களை நானே நடத்தி வைத்த அனுபவங்களும் உண்டு.

________________________

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மணமகளே உன் மணவறைக்கோலம் – 1

  1. திருமணங்களுக்குப் போவது ஒரு அனுபவம் தான். பழைய உறவுகளைப் புதுப்பிக்க, புது நண்பர்களைப்பெற, என விதம் விதமான அனுபவங்கள். அழகாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *