-ரமணி

05. கேடுநீக்கும் கேசவன்

(குறும்பா)

கேசியெனும் தானவனைக் கொன்றேநீர்
கேசவனாம் பேர்தன்னைக் கொண்டீரோ?
. குழலழகர் கூந்தலதே
. அழகெல்லாம் ஏந்துவதே
நேசமுடன் போற்றுவமே இன்றேநாம்!… 1

[தானவன் = அசுரன்]

சடைமுடியே ராகவனின் தலையினிலே
பிடரிமயிர் நரசிம்மம் கலையெனவே
. சிக்கமெலாம் மும்மூர்த்தி
. சக்தியென இம்மூர்த்தி
இடையூறு நீக்கும்தாள் தலையிதுவே!… 2

[சிக்கம் = உச்சி மயிர்]

கண்ணனுக்கோ வண்ணமயில் கேசந்தான்
எண்ணமெலாம் மாயவனின் நேசந்தான்
. காதலிப்பர் கோபியரே
. ஆதுரத்தில் பாபியரே
கண்ணன்மேல் நம்நெஞ்சில் பாசந்தான்!… 3

[ஆதுரம் = பரபரப்பு, வியாதி]

ககரமெனில் பிரமனவன் பேராமே
அகரமதோ விட்டுணுவின் பேராமே
. ஈசனுரு கொண்டவரும்
. நேசமுடன் ஒன்றுவரே
பகவனிவர் பரம்பொருளாம் சீராமே!… 4

தண்ணுலவும் கேசமெனும் கிரணமிதே
மண்டலத்தில் உள்ளுறையும் அருணமிதே
. கொண்டிடிவார் அவதாரம்
. விண்டிடுவார் பவரோகம்
கொண்டல்வண் ணன்போற்றத் தருணமிதே!… 5

கேசவனே கேடுகளை நீக்குபவர்
கேசவனே கேசரியாய்த் தாக்குபவர்
. பண்ணுறுமே பூவுறுமே
. கண்நிறுத்த நாவறுமே
கேசவனின் கேசம்தாள் நோக்குவமே!… 6

*****

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *