– புலவர் இரா. இராமமூர்த்தி.

மனிதனின் வாழ்க்கை ஏற்றம், இறக்கம், வலிமை, மென்மை, வளம், வறுமை என்ற நிலைகளை இயல்பாகப் பெற்று விளங்கும். இவற்றைத் திருவள்ளுவர் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, முதலிய நிலைகளை விளக்கும் ” நிலையாமை” என்ற அதிகாரத்தால் விளக்குகிறார். இவ்வுலகில் பிறப்புகளும் இறப்புகளும் ஒரு சமன்பாட்டில்தான் நிகழ்கிறது. சான்றோர் அழிவைக் கண்டும் வருந்தார்; ஆக்கத்தைக் கண்டும் மகிழார்!

இந்த இயற்கைச் சமநிலையை அறிவியலும் உணரும். ஆன்மிகமும் அறியும். இப்போது இவ்வாரத்தின் திருக்குறளைப் பார்ப்போம். நிலையாமை அதிகாரத்தில் உள்ள,

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.”(336)

என்ற குறள் மூலம் நேற்றிருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இவ்வுலகு பெற்றுள்ளது என்று வள்ளுவர் கூறுகிறார். இக் குறட்பாவின் பொருள் நமக்குப் புதிய ஐயத்தை உண்டாக்குகிறது. நேற்றிருந்தவன் இன்றில்லை என்பது இவ்வுலகின் பெருமைக்கு உரிய நிகழ்ச்சியா? இன்று ஒருவன் இல்லை என்பதை எவ்வாறு உலகின் பெருமையாகக் கொள்ள முடியும்? தீயவன் ஒருவன் மரணமடைந்தால், உலகையே அழிக்கும் கொடுமைகளைச் செய்தவன் அழிந்தான் என்று வேண்டுமானால் நாம் மகிழலாம். ஆனால் பொதுவாக அனைவருக்கும் நிகழும் மரணத்தையே வள்ளுவர் கூறுகிறார். இத்திருக்குறளுக்குப் பரிமேலழகர், “உலகில் இறப்பு என்பது மிகுதியாக நிகழ்வதாகத் தோன்றுகிறது. ஆதலால், அளவு கடந்த மரணம் என்பதே உலகில் நிகழ்கிறது” என்று உரை கூறுகிறார். அளவால் பெரியது பெருமை எனப்பட்டது என்று விளக்கம் தருகிறார்.

ஓருயிரின் அழிவில் மற்றோருயிர் உருவாகும் என்ற இயற்கைச் சமநிலையைப் புறநானூறு, “யாதும் ஊரே” என்ற பாடலில்,

“வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்
இன்னா தென்றலும் இலமே”

என்ற பகுதியில் கூறுகிறது. அதுவே இயற்கை விதி என்பதை அப்பாடலின்,

“ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெரிந்தனம்”

என்ற பகுதி தெளிவிக்கின்றது. இந்த இயற்கை விதியைப் பெருமை என்று கூறாமல் எல்லாரும் இயற்கை என்றே கூறுகின்றனர். ஆகவே, பெருமை என்பதன் புதிய பொருளை நாம் இங்கே காணுதல் நல்லது.

உலகிற்குப் பெருமை தரும் பல நிகழ்ச்சிகள் உண்டு. ஒருவன் இறப்பதனாலும், அவன் பிறப்பதனாலும் உலகிற்குப் பெருமை உண்டாகுமா? சற்றே சிந்திப்போம். ஒருவன் வாழுங்காலத்திலேயே மரணமடைந்து பிறத்தல் நிகழுமா? ஆம்; ஒருவன் தனது வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வினால் இறந்து, பிறக்கிறான்! அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சம்பவம் நிகழ்ந்தால் மறுநாளே, அவன் மாறி விடுகிறான். இதற்கு உதாரணங்கள் உள்ளன. ஆல்ஃபிரட் நோபல் அணு ஆயுதங்களின் உற்பத்தியால் பொருள் ஈட்டியவர்; அதன் தீமையை உணர்ந்த மறுநாளே அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் அறக்கட்டளை ஆக்கி, உலக சமாதானம், நல்லிணக்கம், ஆக்கபூர்வமான அறிவியல், கல்வி, கலை, இலக்கியங்களுக்கு ஆதரவு காட்டி, நோபல் பரிசுகளை உருவாக்கினார். அதற்கு முதல்நாள் வரை வேறுவிதமான மரண வியாபாரியாய் இருந்த அவர் மறுநாளே அன்பைப் பரப்பும் அருளாளர் ஆனார்.

“வெட்டு, குத்து, கொல்லு!” என்றே விலங்குகளை வேட்டையாடிய அறிவற்ற திண்ணன் என்பவர், சிவபெருமான் பால் தாயன்பு கொண்டு, உடனே மாற்றம் அடைந்து சிவஞானத்தில் சிறந்து, உயர்ந்து கண்ணப்பர் என்ற சிவனடியாராக விளங்கினார். பேரறிஞர் இராஜாஜியின் பேச்சைக் கேட்டு, மதுவிலக்குக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, தம் வீட்டில் இருந்த தென்னந்தோப்பில் வளர்ந்தோங்கி விளங்கிய ஐநூறு தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் பெரியார். ஈ,வே.ரா! “கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?” என்று எல்லாரையும் கேட்டுக் கொண்டிருந்த நரேந்திரன், குருதேவர் இராமகிருஷ்ணரால் முழுமையாக மாறி சுவாமி விவேகானந்தர் ஆனார். தென்னாப்பிரிக்க அடிமை களுக்காகப் போராடிய காந்தி அதன் விளைவாக ‘சத்தியாக்கிரகி’ ஆனார்.

பாண்டிய மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்துடன் திருப்பெருந்துறை வந்த திருவாதவூரர், அங்கே குருந்த மரத்தடியில் குருவாக வந்த இறைவனைக் கண்ட மறுநாள் முழுமையான மாற்றம் அடைந்தார்; அவர்

“எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள்கண்டு”இன்று” வீடுற்றேன்.”

என்று பாடுகிறார். அரண்மனை வாழ்வு, அரசபோகம், அமைச்சுப்பதவி, கோடிக்கணக்கில் இருந்த பொன், அனைத்தையும் துறந்து , சிவனடியாராக மாதரம் பெற்று, “மாணிக்க வாசகர் ” ஆனார். அவரே, “நேற்று அப்படி இருந்தேன்; இன்று விடுதலை பெற்றேன்”, என்றார். ஒரு முதியவர், ஒரு நோயாளி, ஒரு பிணம் இவற்றைப் பார்த்த சித்தார்த்தர், மறுநாளில், “புத்தர்” ஆனார்!

இத்தகைய நிகழ்ச்சிகள் உலகின் பெருமைக்குக் காரணங்கள் ஆயின! ஆகவே, நெருநல் அதாவது நேற்று, உளன் ஒருவன், அதாவது வேறோருவனாக இருந்தவன், இன்று இல்லை, அதாவது இன்று அவனாக இல்லை மாறிவிட்டான் என்று இந்தத் திருக்குறள் அடிக்குப் புதிய பொருள் கண்டால், இவ்வுலகம் பெருமை உடையதாக விளங்கிய காரணத்தையும் கூறி மகிழலாம்! இனி அந்தத் திருக்குறளை மீண்டும் கூறி அதன் புதிய பொருளையும் சிந்தித்து மகிழ்வோம்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.” (336)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *