தெய்வ தரிசனம்: 06. நாராயணா என்னும் நாமம்

தெய்வ தரிசனம்

06. நாராயணா என்னும் நாமம்

images
(குறும்பா)

நாராய ணாவென்னும் பேரினிலே
வேராக உள்ளிருக்கும் சீரினிலே
. ஏறிநிற்கும் பொருளெல்லாம்
. ஊறிநிற்கும் அருளெல்லாம்
ஆராயப் புகுவோமிப் பாவினிலே. … 1

நரவென்னும் சொற்பொருளாய் ஆன்மாவாம்
நரத்தினின்று வருவதெலாம் நாராவாம்
. அயனமெனில் இருப்பிடமாம்
. வியனுலகின் பிறப்பிடமாம்
உருவத்தின் உள்ளீடாய் நாரணனாம். … 2

நரம்தந்த வெளியீடே வான்வெளியாம்
விரிகாய வெளியீடாய்த் தான்வளியாம்
. காற்றதுவே தீயாகி
. நீராகி நிலமாகும்
நரம்விளைத்த பேரதுவே நாராவாம். … 3

நாரமதே நாரணனின் உறைபொருளாம்
காரணோத கம்சொல்லும் மறைபொருளாம்
. அஞ்சுபூதம் இயல்தனியே
. அப்புவெனும் பெயரிலினிலே
பேரணவும் படைப்பாகும் இறைபொருளாம். … 4

[பேர்-அணவும் = பெயர் பொருந்தும்]

உயிருள்ள உருவுள்ளே நாரணனே
உயிரற்ற உருவுள்ளே நாரணனே
. உயிருள்ளதோ இல்லாததோ
. பெயருள்ளதோ இல்லாததோ
பெயரற்ற உள்ளமைதி நாரணனே. … 5

நீராடும் போதினிலே நாமமென
நாராய ணன்நாமம் சேமமென
. எட்டெழுத்து மந்திரமே
. கட்டுமனம் தந்திடுமே
வேரோடும் செய்கையெலாம் ஏமமென. … 6

[ஏமம் = களிப்பு, இன்பம்]

நாரணனின் நினைவுவரும் இறுதிமூச்சே
வேரறுக்கும் பிறப்பென்றே உறுதியாச்சே
. கருமமுறும் சோதனையோ
. கருமமறு சாதனையோ
சீரிதுவே உயிரொன்றின் அறுதியாச்சே. … 7

ஓம்நமோ நாராய ணாயவென்றே
போம்வினைப் பாராய ணமாமென்றே
. எட்டெழுத்து மந்திரமே
. உட்டுளையாய் வந்துறினே
நாம்மேன்மை கொள்வதற்கா தாயமென்றே. … 8

[உட்டுளை = உள்+துணை]

–ரமணி, 12/11/2015, கலி.26/07/5116

*****

 

About the Author

has written 11 stories on this site.

திரு. ஜி.குருநாதன், ‘ரமணி’ என்னும் புனைப்பெயரில் 1986 வருடம் கதைகள் எழுதத் தொடங்கியவர். அப்போது எழுதிய ஐந்து சிறுகதைகளில் மூன்று, ‘சிறுகதைக் களஞ்சியம்’, ‘இதயம் பேசுகிறது’, ‘அமுதசுரபி’ இதழ்களில் வெளிவந்தன. ‘அமுதசுரபி’யில் வந்த கதை, அவர்கள் 1990 வருடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல்பரிசைப் பகிர்ந்துகொண்டது. அதன்பின், கணினித் துறையில் ஈடுபாடு காரணமாக, இத்தனை வருடங்கள் கதை எழுதுவதை விட்டுவிட்டவர், இப்போது பணிஒய்வு பெற்ற நிலையில் மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளார். இப்போது எழுதிய சிறுகதைகளில் மூன்று ‘இலக்கிய வேல்’ மாத இதழில் வெளிவந்துள்ளன. கதை எழுதுவதுடன், ‘சந்தவசந்தம்’ கூகிள் மரபுக்கவிதை குழுமத்தில் சேர்ந்ததனால் மரபுக்கவிதைகள் புனைவதிலும் தேர்ச்சிபெற்று, ஆன்மீகம், உலகியல் போன்ற துறைகளில் மரபுக்கவிதைகள் எழுதி அவற்றைச் ‘சந்தவசந்தம், முகநூல்’ மற்றும் பிற இணையக் குழுமங்களில் பதிந்து வருகிறார்.

Write a Comment [மறுமொழி இடவும்]


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.