ஒரு எளிய மனிதனின் சுயசரிதை

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 38

சென்னையில் அவனுக்குக் கிடைத்த முதல் வேலை

அவனுக்கு மாமா வீட்டில் பெரியம்மா, தாத்தா, பாட்டி என்று அருமையான உறவுகள் இருந்தனர். அவன் மீது அன்பு பொழிந்தனர். இருப்பதை வைத்துக் கொண்டு எப்படி வாழ வேண்டும் என்பதை அங்கும் அவன் கற்றுக்கொண்டான். விருந்தோ, பத்திய உணவோ எதிலும் அன்பு நிறைந்திருக்கக் கண்டான். அவன் வேலைதேடி சில பத்திரிக்கை அலுவலகங்களுக்குச் சென்று வந்தான். ஆனால் அவனுக்கு மாமாவுக்கு அதில் விருப்பம் இல்லை. அவனுக்கு வேறு நல்ல வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்து வந்தார். அவனை மாம்பலம் ரயில் நிலையம் சாலையில் இருந்த “மாம்பலம் டெக்நிக்கல் இன்ஸ்டிடூடில்” சேரச் செய்து தட்டச்சும், சுருக்கெழுத்தும் மேலும் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்த்தார். அவன் அதையும் நன்கு கற்றான். ஆனாலும் அவனுக்குள் இருந்த கவிஞன் அவனை மத்திய நூல் நிலையம் சென்று நிறைய இலக்கிய நூல்களைப் படிக்கத் தூண்டிக் கொண்டே இருந்ததால் மாலை வேளைகளில் அவன் நூலகத்தில் சிறந்த நூல்களைத் தேடித் படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் அவனுக்கு அம்மா வழிப் பாட்டி, அவனை அழைத்துக் கொண்டு இராயபேட்டையில் அப்பாக்கண்ணு முதலித்தெருவில் 13ம் எண் இல்லத்தில் வசித்து வந்த பாட்டியின் சகோதரியின் பெண் இராஜம்மாள் வீட்டிற்கு அவனை அழைத்துக் கொண்டு சென்றாள். இராஜம்மாள் அவனுக்கு ஒன்று விட்ட பெரியம்மா. அவனுக்குப் பாட்டியும், இராஜம்மாப் பெரியாம்மாவின் தாயாரும் கேரளாவில் திருச்சூரில் வெள்ளிநெழி என்ற இடத்தில் வசித்து வந்தனர். இராஜம்மாப் பெரியம்மாவின் கணவர் எஸ். ராமகிருஷ்ணன். அவருக்கு அவனது பாட்டியின் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் உண்டு. அவர் சென்னையில் ஓபராய் ஹோட்டெல்ஸ், ஈஸ்ட் இந்தியா ஹோட்டெல்ஸ் நிறுவனங்களுக்கு ஜாயின்ட் செகரட்ரி (Joint Secretary) என்ற உயர்ந்த பதவியில் இருந்தார். அந்த நிறுவனம் மவுண்ட் ரோடில் (இப்பொழுது அண்ணா சாலை) ஆனந்த் தியேட்டருக்கு எதிரில் உள்ள ஹமிட் பில்டிங்”ல் இருந்தது.

அவனது பாட்டியும், அவனும் இராஜம்மாப் பெரியம்மாவின் வீட்டிற்குள் நுழையும் வேளையில் எஸ்.ராமகிருஷ்ணன் தனது அம்பாசிடர் காரில் அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவனது பாட்டியைப் பார்த்ததும் காரில் இருந்து இறங்கி , ” சித்தி…வாங்கோ…எப்படி இருக்கேள்” என்று விசாரித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் சென்ற உடனேயே மிகுந்த உரிமையுடன் ,” இராமகிருஷ்ணா… இவன் பாப்பாவின் (அவனுக்கு அம்மாவை அப்படித்தான் அவர்கள் அழைப்பார்கள்) புள்ளை..விஸ்வநாதன். டைப், ஷார்ட்ஹென்டு படிச்சிருக்கான். இவனுக்கு ஒன்னோடு கம்பெனில ஒரு வேலை போட்டுக் கொடு…அப்பறம் அவனே முன்னுக்கு வந்துடுவான்..இப்போதே அவனையும் ஒன்னோட கூட்டிண்டு போ .” என்று அவனைக் காட்டி வேலைக்கு சீபாரிசு செய்தாள். ஒரு ரோஸ் நிறத்தில் சட்டையும், சட்டைப் பையில் ஒரு பேனாவும், நாலுமுழ வேட்டியுமாக பாட்டியின் அருகில் நின்று கொண்டிருந்த அவனை ராமகிருஷ்ணன் பார்த்து, ” விஸ்வநாதா…வா என்னோட… என்று காரின் பின்பக்கம் தன்பக்கத்தில் அவனை அமர்த்திக் கொண்டு,” சித்தி…இங்கே இருங்கோ…நான் ஆபீஸ்ல இருந்து வந்தப்பரமா போய்க்கலாம்” என்று சொல்ல அந்த அம்பாசிடர் கார் புறப்பட்டது.

அலுவலகம் சென்றதும் இராமகிருஷ்ணன் தனது உதவியாளர் P.A. கிருஷ்ணன் என்பவரை அழைத்து,” கிருஷ்ணன் …இந்தப் பையன் பேரு விஸ்வநாதன்…இவன் டைப், ஷார்ட்ஹென்டு படிச்சிருக்கான். இவனுக்கு நம்ம ஆபீஸ்ல டெலிவரி செக்ஷன் தொடங்கி எல்லா வேலைகளையும் கற்றுக் கொடு…ஆபீஸ்ல மத்தபேர்களோட அறிமுகப் படுத்திவை…வேலைய நல்ல கத்துக்கொடு…” என்று சொன்னார்.

P.A. கிருஷ்ணன் அவனை அழைத்துக் கொண்டு வெளியில் உள்ள வேறு ஒரு அறையில் அவனை அமரச் செய்து, விபரங்கள் அறிந்து கொண்டார். டைப் செய்து காட்டச் சொன்னார். “நன்னா வேகமாத்தான் அடிக்கறே”.. என்று பாராட்டினார். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராமச்சந்திரன், சுப்பிரமணியன், சிதம்பரம், மணிவண்ணன், கே.தண்டபாணி, கணேசன், ஆறுமுகம் அனைவருக்கும் அவனை அறிமுகம் செய்து வைத்தார். அந்த அலுவலகச் சூழ்நிலை அவனுக்குப் பிடித்திருந்தது. P.A. கிருஷ்ணன் அவனிடம் அவனது கல்விச் சான்றிதழ்களை மறுநாள் கொண்டுவரும்படிச் சொன்னார். மேலும் அவனுக்கு மாதம் Rs. 144/- சம்பளம் என்றும் வேலை நாட்களில் தினமும் ஐம்பது பைசாக்கள் “டீ அலவன்ஸ்” எல்லாம் சேர்த்து Rs. 157/- மாதச் சம்பளம் என்றும் மூன்று மாதங்கள் கழித்து வேலையை நிரந்தரம் செய்வார்கள் என்றும் சொன்னார். அவனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டது. அந்த அலுவலகத்தில் “டெஸ்பேச்” (dispatch) கிளார்க்காகப் பணிசெய்து வந்த மணிவண்ணன் அவனிடம்,” விஸ்வநாதன் …இங்க வாங்க.. இன்னிக்கு இதச் சொல்லித்தரேன்…நாளைக்கு ராமச்சந்திரன் அக்கௌண்ஸ் சொல்லித்தருவார். “செக்” டைப் செய்றத நாயர் சொல்லித் தருவார் என்று அன்போடு சொல்லி அவனது வேலைக்கு பிள்ளையார்ச் சுழி போட்டார். உனக்கு வேறு எதிலும் ஈடுபாடு உண்டா என்று மணிவண்ணன் கேட்டார். “கவிதைகள் எழுதுவேன்” என்றான். “அப்படியா. எனக்கு சினிமாவில் விருப்பம். என்னுடைய மாமாதான் ஆர்.கே.சண்முகம்” என்றார். “யாரு?” என்று அவன் கேட்க,” ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வசனம் எழுதினாரே அந்த ஆர்.கே.சண்முகம்” என்று மணிவண்ணன் சொன்னார். அப்படியாக அந்த முதல்நாள் வேலையும், நண்பர்களின் அறிமுகமும் அவனுக்குக் கிடைத்தது. மாலையில் ஐந்தரை மணிக்கு இராமகிருஷ்ணன் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். அவனுக்குப் பாட்டியிடம்,” சித்தி.. விஸ்வநாதன் வேலைக்குச் சேந்தாச்சு…அவனுக்கு மாசம் எல்லாமாச் சேர்த்து “Rs . 157 ” கிடைக்கும் என்றார். “ரொம்ப சந்தோஷம்” என்றாள் பாட்டி. அவனும், பாட்டியும் இராயப்பேட்டையில் இருந்து பஸில் புறப்பட்டு வீட்டிற்கு வந்தனர்.

மறுநாள் முதல் அவன் தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து “11”ம் நம்பர் பேருந்தில் அலுவலகம் செல்லத் துவங்கினான்.

13.11.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அவன்,அது,ஆத்மா (38)

  1. கடந்த கால சம்பவங்கள் சுவையனவைதான் திரும்ப(பி) பார்க்கும் பொழுது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *