ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சரிதம்

 
மீ.விசுவநாதன்
( பகுதி: ஆறு )

பாட்டி வீட்டில் வேலை

வீட்டுவேலைகளை
பாட்டுப்பாடியே செய்வாள் !
மாட்டுக் கொட்டிலிலே
பசுமடியின் காம்பினை
மெதுவாகப்
பிசுக்கியே பால்கறப்பாள் !
பால்நிலவாய்ப் புன்னகைத்து
ஆட்டுக் குட்டியையும்
அணைத்தபடி “பால்”மறபாள்!
அதிலே கண்ணனின்
அருளென்ற தேன்குடிப்பாள் !

சுதாமணியின்
பாட்டியும் கிருஷ்ண பக்திப்
பதாகையைப் பிடித்திருப்பாள் !
பேத்தியின் பக்தியை
கேட்டு, அவளைத் தன்வீட்டு
வேலை செய்யக்
தன்மகள் தமயந்தியின்
மனத்தினை
நச்சரித்துப் பிடித்திழுப்பாள் !

அதனால் ஒருநாள்
அம்மாவின் கட்டளை ஏற்று
ஆறு கிலோமீட்டர்
தொலைவிலுள்ள பாட்டியின்
ஊருக்குச் சென்றாள்
படகிலே
அவளுக்குப் பதிமூன்று
வயதிலே !

பயணத்தின் போது
தானே துடுப்பிட்டுப்
படகைச் செலுத்துவாள் !
நயனத்தில் கண்ணன்
நினைவு நீலக் கடலாய்த்
தெரிய, நீல வானாய்
விரிய திடுக்கிட்டு
உடலம் சரிவாள் படகுள் !
சடலம் போலக் கிடந்து
சமயம் செல்லத் தெளிவாள் !
இமயம் போல எழுந்து
இதயம் முழுக்கக் கனிந்து !

இப்படியான படகுப் பயணம்
இவளுக்கோர் அடகுப் பயணம்
என்றே ஆனது
தினந்தினம் நேரமானது !
ஆனாலும்
கண்ணனாலே கண்கள் ஈரமானது !

பாட்டியின் வீட்டிலே
வேலை அதிகம்
வாட்டி எடுத்த போதும்
வசவுப் பதிகம்
பாட்டிசைத்த போதும்
பாட்டியின் கண்ணன்
பக்தியானது
அவளுக்கோர் சக்தியானது !

ஒருநாள் நெல்லினைச்
சுமந்து சென்று
அரிசி யாக்கினாள் நன்று !
வரும்வழியில்
ஏழைக் குடிசையில்
பசித்து நிற்பதைப் பார்த்தாள் !
உடனே ஒருபை
அரிசி எடுத்துச் சேர்த்தாள் !
குடிசையில் நுழைந்து
குழதைகளைக் கொஞ்சினாள்!
கண்ணா இவர்களின்
குறைதீரெனக் கெஞ்சினாள் !
குடும்பமே சுதாமணியை
இடும்பைத் தீர்த்தாய் எனக்
கொண்டாடியது !
பாட்டியின் கண்கள்
படியரிசி குறைந்ததெனக்
கண்டாடியது !
பேத்தியிடம் சந்தேகம்
கொண்டு ஆடியது !
அரிசியை விற்று ஏதும்
பண்டம் தின்றாளோ
என்று கண்டித்தது !
உண்மையைச் சொன்னால்
ஒருஏழைக் குடும்பம்
வன்மையாகப் பாட்டியால்
தண்டிக்கப் படுமென்று
ஊமையானாள் !
அதனாலே உள்ளத்தால்
பூமியானாள் !
எளியோர்க்கெல்லாம்
உதவிடும் சாமியானாள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *