நிர்மலா ராகவன்

வீட்டைவிட்டு ஏன்ஓடிப்போகிறார்கள்?

உனையறிந்தால்12

கேள்வி: விவரம் புரியாத வயதில் பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போவது ஏன்?

விளக்கம்: எந்த நாடாக இருந்தால் என்ன, சிறுவர், சிறுமிகளின் மனநிலை ஒத்ததாகத்தானே இருக்கும்!

ஓர் அறிக்கையின்படி, மலேசியாவில் ஒரு நாளைக்கு பத்திலிருந்து பதினெட்டு வயதானவர்களில் நான்கு பெண்களாவது வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார்கள். பிடிபட்டவர்கள் புனர்வாழ்வு இல்லங்களில் ஒரு வருடம்வரை வைக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஓர் இடத்திற்கு (பலத்த சிபாரிசுடன்) நான் போயிருந்தேன். சாதாரணமாக வெளிமனிதர்கள், அதிலும் ஆண்கள், இங்கு நுழையவே முடியாது. அவசர புத்தியுடன், அடுத்து என்ன செய்வது என்று புரியாத இளம்பெண்கள்! அவர்களைத் தீய வழிக்கு ஆசைகாட்டி இழுத்துச் செல்ல பிறருக்கு எத்தனை நேரமாகும்!

பொதுவாகப் பேசப்படுவதுபோல், காதலுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் இல்லை இந்த இல்லத்தில் இருப்பவர்கள் என்று அறிய முடிந்தது. என்னுடன் மிகவும் அன்புடன் பழகினார்கள். பிறகுதான் புரிந்தது காரணம்: வீட்டில் இவர்களுக்கு அன்பு கிடைக்கவில்லை என்று ஏங்கியிருக்கிறார்கள்! நான் பல மணி நேரம் அவர்களுடன் உரையாடிவிட்டுக் கிளம்பும்போது, `போகாதீர்கள்,’ என்று என் கையைப் பிடித்துக் கொண்டார்கள்.

அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்ட மனக்குறைகள்:

`வீட்டில் ஓயாமல் என்னைத் திட்டிக்கொண்டே இருப்பார்கள். (இதுதான் முக்கியக் காரணம்).

`நான் எங்கும் போகக்கூடாது. எவருடனும் பேசக்கூடாது’ — உணர்ச்சிபூர்வமான வதை.

`என் பெற்றோருக்கு என்னுடன் பேச நேரமில்லை. வேலைதான் அவர்களுக்கு முக்கியம்!’

முதலில் கோபத்துடன், `அவளுடைய நன்மைக்காகத்தானே உழைக்கிறோம்? காலம் இருக்கிற இருப்பில், வயதுப்பெண்ணை வெளியில் அனுப்பிவிட்டு, வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்க வேண்டுமா?’ என்றெல்லாம் தம்மேல் குற்றம் வராமல் பார்த்துக்கொள்வார்கள் பெற்றோர். ஆனால், தவறு என்னவோ அவர்கள்மேல்தான்.

உண்மைக் கதை:

அவ்விடத்தில் என் பழைய மாணவிகள் இருவர் இருந்ததாக தலைவி கூறினார். அப்பா, அம்மா இருவரின் பெயரையும் இணைத்து, புதிய மாதிரிப் பெயர்களாக இருந்ததால், நான் உடனே இனம் கண்டுகொண்டேன். அடுத்தடுத்த வருடங்கள் என் வகுப்பு மாணவியாக இருந்தவர்கள்.

பதினான்கு வயதில் ஆண்களைப்போல் கிராப்புத்தலை! வகுப்பில் ஆசிரியையின் கவனம் முழுவதும் தன்னிடமே இருக்க வேண்டும் என்று நினைத்து, ஓயாத எதிர்ப்பு. (`அவளைக் கவனிக்காதீங்க, டீச்சர்,’ என்று பிற மாணவிகள் எனக்குப் புத்தி சொல்லும்வரை நான் அதைப் புரிந்து கொள்ளவேயில்லை).

பள்ளியில் பொறுக்க முடியாத நடத்தையுடன், அவளைக் கவுன்சிலரிடம் அனுப்பியபோது, நான் முகம் கொடுத்துப் பேசாதது மிகவும் வருத்துகிறது என்றாளாம். என்ன பிரச்னை என்று யாருக்கும் புரியவில்லை.

`உன் அப்பாவை என்னை வந்து பார்க்கச்சொல்லு!’ என்று நான் மிரட்டியதும், அம்மாவிடம் கெஞ்சி, `அப்பா அடிப்பார். நீங்களே வந்துவிடுங்கள்,’ என்றிருக்கிறாள். அந்த இளம் தாயே இதை என்னிடம் சொன்னாள்.

சகோதரிகள் இருவரும் பதினைந்து வயதில் வீட்டை விட்டு ஓடி, தெருக்களில் ஐம்பது காசுக்குத் தங்களை விற்றுக் கொண்டிருந்தபோது, காவல் துறையினரிடம் பிடிபட்டிருந்தனர். `பரீட்சை எழுதப்போகிறோம்,’ என்று காவலுடன் சென்றவர்கள், மீண்டும் தப்பியோடிவிட்டனர் என்றெல்லாம் இல்லத்தலைவி விவரித்தபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ராணுவத்தில் இருந்த அவர்களுடைய தந்தை எம்மாதிரியான கொடுமைக்கு அவர்களை ஆளாக்கியிருந்தால், இரு பெண்களும் இப்படிச் சீரழிந்து போயிருப்பார்கள் என்று யோசித்தேன். `பாலியல் வதை என்றில்லை. அவர்களால் பொறுக்க முடியாத எதுவாகவாவது இருக்கலாம்,’ என்றார் நான் சந்தேகம் கேட்ட ஒரு உளவியல் நிபுணர்.

குழந்தைகளுடன் பேசுவது என்பது, `சாப்பிடு,’ `குளி’ என்பதுடன் நின்றுவிடுவதில்லை. எந்த வயதினருக்கும் அவர்களுக்கே உரிய தனிப்பட்ட பிரச்னைகள், கவலைகள் இருக்கும். அவர்களுடன் பேசாவிட்டால், பிரச்னைகளை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தை இடியோசை கேட்டு நடுங்கும். `இதில் பயப்பட ஒன்றுமில்லை. சும்மா, பட்டாசு!’ என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை, `பட்டாஸ்!’ என்று கைதட்டி ஆர்ப்பரிக்கும்.

`சிறுவர்களுடன் அப்படி என்ன பேசுவது!’ என்று அலுத்து, பல குடும்பங்களில் சிறுவர்கள் அருகில் இருப்பதைப் பொருட்படுத்தாது, வெட்டிப் பேச்சிலும், தமக்குச் சம்பந்தமே இல்லாத பிறரைப்பற்றிய வம்பிலும் பொழுதைக் கழிப்பார்கள். குழந்தைகளுக்கும் அதே குணம்தானே படியும்? வயதுக்கு மீறிய எண்ணங்கள் எழ, நல்லது, கெட்டது புரியாது குழப்பம் அடைகிறார்கள். பெரியவர்கள் பேசும்போது, சிறுவர்களை அங்கிருந்து விலகச் சொல்ல வேண்டும் என்கிற விதி இதற்குத்தான்.

சிறுவர்களுடன் பேச எவ்வளவு சமாசாரங்கள் இருக்கின்றன! ஓர் அல்ப உதாரணம்: நீங்கள் சிறுவயதில் செய்த அசட்டுத்தனங்களைப் பகிர்ந்துகொள்ளலாமே! அதனால் அவர்களுக்குச் சிரிப்பு வருமே தவிர, உங்களை மட்டமாக எடைபோட மாட்டார்கள். உண்மையே பேசக் கற்பார்கள்.

`என் பேத்திக்கு மரியாதையே கிடையாது,’ என்று ஒரு மூதாட்டி என்னிடம் குறையாகச் சொன்னார். கோயிலில், ஒரு சிறுமி தானே வந்து என் காலைத் தொட்டு ஆசி பெற்றதைப் பார்த்து வந்த வார்த்தைகள். மரியாதை கற்றுக்கொடுக்கும் வழியா இது!

உடனே , `உங்கள் பேத்தி நல்ல பெண்தான். அவளிடம் அப்படிச் சொல்லி விடாதீர்கள்,’ என்றேன். பாட்டி தன்னைப்பற்றிப் பிறரிடம் மட்டமாகச் சொல்லி விட்டார்களே என்று அந்த பத்து வயதுச் சிறுமி வருந்துவாள். தான் அப்படித்தானோ என்று அவள் எண்ணம் போகும்.

சற்றுப் பொறுத்து, அந்தச் சிறுமியின் தாய் விடைபெறும்போது, `பெரிய டீச்சருக்கு நமஸ்காரம் பண்ணு. காலைத் தொட்டு நல்லா பண்ணணும்,’ என்று விரிவாக விளக்க, அவள் அப்படியே செய்தாள்.

ஞாபகமாக, `இவள் செய்ததை உன் அம்மாவிடம் சொல்!’ என்று அந்தத் தாயிடம் சொன்னேன்.

தம் குடும்பத்தினரைப்பற்றிப் பிறரிடம் குறையாகச் சொன்னால், தான் அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்கிறோம் என்று நினைப்பார்கள் பலர். இதனால் இளையவர்களை உசுப்பி நல்வழிப்படுத்தலாம் என்று நினைப்பது தவறு. வேறு ஒருவருடன் ஒப்பிடப்படும்போது, குழந்தைகள் ரோஷம் அடைந்து, முன்னேறுவது கிடையவே கிடையாது. இன்னும் அதிகமாக ஒடுங்கிப்போவார்களே!

வேடிக்கைக் கதை ஒன்று;

`அந்தப் பிள்ளையைப் பாருடா. எவ்வளவு நல்லா படிக்குது!’ என்று தன் தந்தை அடிக்கடி சொன்னதில், முதல் வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, எதிர்வீட்டுப் பெண்ணை பார்க்கப் பார்க்க, காதல் வசப்பட்டாராம். `வேறு சாதி’ என்று தந்தை ஆட்சேபிக்க, `நீங்க சொன்னதைத்தானே செய்தேன்!’ என்ற இவர் மடக்கினாராம்! அவளையே கல்யாணமும் செய்துகொண்டு விட்டதாக ஒரு நண்பர் சொல்லக் கேட்டபோது, அடக்கமுடியாது சிரித்தேன்.

நாம் ஒவ்வொருவரும் ஒரு தனி ஆத்மா. ஒருவரைப்போல் இன்னொருவர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயலாத காரியம். இது புரியாமல், அடித்தோ, ஓயாது ஏசிப் பேசியோ ஒரு சிறுவனை இன்னொருவனைப்போல மாற்ற நினைப்பது அவனைச் சிறுமை உணர்ச்சிக்குத்தான் ஆளாக்கும்.

முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை என்று ஒவ்வொரு எண்ணுக்கும் (ORDINAL NUMBER) பிரத்தியேகமான குணங்கள் உண்டு. பொதுவாகவே, முதல் குழந்தை நிதானமாக, பொறுமையாக இருக்கும். பெற்றோர்கள் பார்த்துப் பார்த்துச் செய்வதில், எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற தீவிரம் இருக்காது. பொறுப்புள்ள தலைவனாக இருக்கும் தகுதி கொண்டிருக்கும்.

இரண்டாவது குழந்தையின்போது, பெற்றோருடைய ஆர்வம் சற்றுக் குறையலாம். அதனால், போட்டி உணர்வு மிகுந்திருக்கும். துணிச்சலாக எதையும் அடித்துப் பிடித்து வாங்கும். அதிகப் பொறுமை இல்லாததால், சண்டைபோட அஞ்சாது. பத்து மாதக் குழந்தையே அக்காளின் முடியைப் பிடித்து இழுக்கும்!

பிறப்பிலேயே இவ்வளவு வித்தியாசங்கள் கொண்ட குழந்தைகளை `ஒரே மாதிரி இருங்கள். அண்ணா எவ்வளவு சாந்தமாக இருக்கிறான். நீயும் இருக்கிறாயே, பிடாரி!’ என்றோ, `உன்னைவிடச் சின்னவள்! எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறாள்!’ என்றோ ஒப்பிடுவது ஒருவரை வருத்தும்; மற்றவரை கர்வியாக, அல்லது குற்ற உணர்வு கொண்டவராக மாற்றும்.

தாவர வர்க்கத்தை எடுத்துக் கொள்வோம். மல்லிகைச் செடியில் இலைகளை மட்டும் களைந்தால், செடி மீண்டும் துளிர்த்து, நிறைய மொட்டுக்கள் விடும். இப்படி ரோஜாச் செடியில் செய்து பார்த்திருக்கிறீர்களா? நான் செய்துபார்த்தேன். செடி செத்துவிட்டது. ரோஜாவின் கிளைகளை மட்டும்தான் வெட்ட வேண்டும் என்று புரிந்தது. (இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை: ஒரு சிறு மொட்டைக் கிள்ளி எடுத்துவிட்டால், அந்த இடத்தில் நிறைய மொட்டுக்கள் கட்டும்).

தாவரங்களிலே இத்தனை வித்தியாசங்கள் இருக்க, உணர்ச்சிகள் நிரம்பிய மனித இனத்தில் மட்டும் வெவ்வேறு குணங்கள் கொண்ட இருவரை ஒரே மாதிரி நடத்துதல் சரியா?

நம் எதிர்பார்ப்பை ஒட்டியே குழந்தைகள் வளர்கிறார்கள். தகுதிக்குட்பட்ட வேலையை ஒரு சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு, `உன்னால் இது முடியும்!’ என்று ஊக்குவித்துப் பாருங்களேன். உங்கள் நம்பிக்கை பொய்க்காது. நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும், முயற்சி செய்ததையாவது பாராட்ட வேண்டும். அடுத்த முறை, நீங்கள் இட்ட பணியை உற்சாகத்துடன் செய்ய முன்வருவான்.

ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னபின், அதைச் சிறுவர்களிடமே விட்டுவிடுதல் சிறந்தது. `அப்படிச் செய், இப்படிச் செய்,’ என்று அடிக்கடி குறுக்கிடுவது பெரியவர்களின் குறைவான தன்னம்பிக்கையைத்தான் காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் சுயமாகச் சிந்திக்க விடாது குறுக்கிடுவதால், குழந்தைகளுக்குத் தம் திறமையிலேயே சந்தேகம் எழாதா!

பெரியவர்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறோமா? இல்லையே! பின், சிறுவர்கள் மட்டும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? அவர்களுக்கு இயற்கையாக எதில் திறமையோ, ஆர்வமோ இருக்கிறது என்றறிந்து, அதில் முன்னேற ஊக்கமளித்தால், `வீடே சொர்க்கம்!’ என்று உணர மாட்டார்களா!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *