ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சரிதம்

மீ.விசுவநாதன்
( பகுதி: ஏழு )

5992c143-5360-4104-88fb-c99b331bb4a9

“நின்று செய்வாள் பூஜை”

பாட்டியின் வீட்டில்
கண்ணன்
நின்ற கோலத்தில்
படமொன்று கண்டாள்
அதுதான்
தனக்கு நித்தம்
பூஜைக்கான
இடமென்று கொண்டாள் !
அதன் முன்னின்று
அனுபவித்துப்
பாடுவாள் ! ஆடுவாள் !
ஆரும் அழைத்தாலும்
கேளாது காது
மூடுவாள் !
ஆனந்தக் கண்ணீர் பெருக
கன்னத்தில்
கோடு போடுவாள் !

கற்பூரம் ஏற்றி
கந்தர்வ கானத்தால்
கட்டிப் போடுவாள்
கண்ணனை !
அதனாலே
கரையுடைபடும்
கருணைக் கடலுள்ளக்
கல்லணை !

அவளது பாட்டின்
பொருளும், இசையும்
பக்கத்து வீட்டு
மனிதக் காதுகளில்
அமுதைப் பொழியும்
அதனால்
அனைவரின் மனமும்
அதுகேட்க இசையும் !

அவளின்
தாய்மாமா ஒருமுறை
இது கண்டு
அம்மா நீ அமர்ந்து
பூசைசெய் என்றார்
வாய்மகிழ்ந்து !
அவளோ அந்தப்
படத்தைக் காட்டி
“கண்ணனே நிற்கும்போது
நானும் நிற்கிறேன்”
என்றாள்
நல்பக்தி கொண்ட மாது !

ஓராண்டு ஓடியது
பாட்டியின் இல்லத்தில் !
ஊராண்டு விட்டாள்
நல்ல
பேராண்டு விட்டாள்
அகம் பக்கத் துள்ளத்தில் !

குவளை மலரான
குஷிமுக அழகான
அவளை அழைத்தாள்
தன்வீட்டு வேலைக்கு
சித்தி !
நதியின் போக்காக
நல்லதே நினைவாக
இருக்கும் அவளுக்கு
எப்போதும் காரியம்
ஸித்தி !

அவளுக்கோ
அதிகம் இறைபக்தி
சித்தியின்
அகத்திலோ குறைபக்தி !
சித்தியின்
குழந்தைகளை தினமும்
பள்ளிக்கு அழைத்துச்
செல்லுவதும் அவர்களின்
பாடங்களை
புத்திக்குள் செலுத்துவதும் வேலை !
அவர்களுடன்
காயலில் படகில்
போகையில் கண்ணனை எண்ணிப்
பாடுவதும் அவனோடு
கோபியராய்க் கொஞ்சி
ஆடுவதும் அவளுக்கு வேலை !

ஒருநாள்
வேலைமுடிந்து ஓய்வு இருந்ததில்
ஒருநாழி நினைத்தாள்
தன் நிலை
ஆலைக் கரும்பாய்
ஆளை வாட்டி
ஓலைத் துரும்பாய் இருந்ததில் !
காயலில் சென்று
படகில் போனாள் ! வானச்
சாயலில் முரளியின்
சாயலைப் பார்த்து
மூர்ச்சையாய்ப் போனாள் !
முழுவதும் மறந்து
வார்ச்சிலை யானாள் !
விசைப்படகொன்று
இவளின்
திசைபட வந்தது !
ஒன்றும் அறியாமால்
அசைவற்றுக் கிடந்தாள் !
கத்தினர் கரையில் நின்றவர்
இடிப்பது போல வந்து
சுத்திப் போனது அந்தப் படகு !

உயிரைக் கொடுத்தவன்
உடனே காத்தனன்
அமைதியாய் கரைவந்தது
சுதாமணி வாழ்க்கைப் படகு !

ஒருவருட காலம்
சித்தி வீட்டில் செய்த
வேலைக்குப் பரிசாய்
பெரிய மாமா வீட்டிலே வேலை !
அவளின் உழைப்பை
உறிஞ்சி எடுப்பதே
உறவுக்கென்றும் வேலை !

மாமாவின் வீட்டைச் சுற்றி
ஏழை முஸ்லீம் ஏராளம் !
ஆகாரம் கிடைக்காமலே
அவர்படும் அவதியும் ஏராளம் !
எப்போதும் போலவே
இரக்க குணத்தால்
வீட்டில் உள்ள
இரையைக் கொடுத்து
இறையை விஞ்சினாள் சுதாமணி !
மாமாவுக்கு அதுபிடிக்காமல்
போமாவுன் வீட்டிற் கென்று
போட்டார் ஓர் தடாலடி !

வீடும் , பேரும் ஓடியே நாட்கள்
வெட்டியாய்ப் போகுதே நம்திருநாட்கள்
என்றே எண்ணினாள் !
வீடு பேறுக்காய் விரும்பி உழைக்கும்
வேளையைத் தேடியே
வீடு திரும்பினாள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *