புலவர் இரா. இராமமூர்த்தி.

செல்வம் பலவகைப்படும். ஒருவன் சேர்க்கும் செல்வம் பொன்னாகவோ, பல்வகைப் பொருளாகவோ, உறைவிடமாகவோ, உணவுப் பொருளாகவோ, நில புலங்களாகவோ இருக்கும். இக்காலத்தில் பற்பல வகைகளில் பணத்தை முதலீடு செய்து பெருஞ் செல்வமாகச் சேர்க்கின்றனர்! செல்வப்பெருக்கமே மக்களின் நோக்கமாகிவிட்டது. அச்செல்வத்தைச் சேர்ப்பவன் வந்ததைச் செலவு செய்ய மாட்டான்; வருவதை எண்ணி ஏங்கி யிருப்பான்; இதனைப் பரிமேலழகர் கடும்பற்றுள்ளம் என்பார்.

அறிவுடையாரால் கடியத்தக்க குற்றங்கள் காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் ஆகிய ஆறாம். இவற்றை அரிஷட்வர்க்கம் என்பர்! அதனை வடமொழியில் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் என்பர். இவற்றுள் லோபம் என்பது செலவு செய்யவேண்டிய செயலுக்குச் செலவிடாமல் பொருளின் மேல் மிகுதியான பற்று வைத்து இறுகப் பிடிப்பதாகும். இவ்வாறு இறுகப் பிடிப்பதால் வரும் செல்வம் நில்லாமல் நீங்கி விடும்! இதனைத் திருவள்ளுவர்,

“இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு !”(432)

“செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது இன்றிக் கெடும்!”(437)

என்ற குறட்பாக்களில் கூறுகிறார். இதற்கு உரை வகுத்த பரிமேலழகர் செயற்பால என்ற தொடருக்கு, பொருளால் பொருள் செய்தல் என்று பொருள் கூறுகிறார். செல்வத்தால் வரும் சிறப்புகள் பற்றி சிந்தாமணி,

“பொன்னின் ஆகும் பொருபடை, அப்படை
தன்னின் ஆகும் தரணி, தரணியிற்
பின்னை ஆகும் பெரும்பொருள் அப்பொருள்
துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே!”

என்ற பாடலில் விளக்குகிறது. அடுத்து இவறல் என்னும் பற்றுள்ளம் எல்லாக் குற்றங்களுக்கும் மேலாகி ஒருவனை அழித்தே விடும் என்பதைத் திருக்குறள்,

“பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று !”(438)

என்று பாடுகிறது. ஆகவே, ஒருவன் சேர்த்து வைக்கும் பெரும்பொருள், நன்மை செய்வதைவிடத் தீமையே செய்து கெடுக்கும் என்பது புலனாகின்றது! செல்வத்தைச் சேர்த்து வைக்க ஒருவன் செய்யும் முயற்சிகள் அவனுக்கு நன்மை தராமல் தீய முயற்சிகளாகி அவனை அழித்துவிடும்! இப்படி மிகமிக முயன்று, கெட்டபெயர் வாங்கிச் செல்வம் சேர்த்தலை விட, உள்ளதே போதும் என்று அடக்கத்துடன் வாழ்வதே நல்லது. இதனையே “செல்வம் என்பது சிந்தையின் நிறைவு” என்ற பழமொழியும், “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற பழகு மொழியும் குறிக்கின்றன. செல்வத்தை அளவின்றிச் சேர்ப்பதால் அடையும் துன்பமும், அதனைக் காப்பாற்றப் படும் துன்பமும் மனிதனின் மகிழ்ச்சியைக் கெடுத்து விடும்!

இப்படிக் கடும்பற்றுள்ளத்துடன் ஒருவன் சேர்க்கும் பெருஞ்செல்வம், சிறிய குறைகளைக் கருதாமல் வாழப் பழக்கும்! சற்றுப் பெரிய குற்றங்களைச் செய்வதில் ஈடுபாடு கொள்ளச் செய்யும்; செல்வச் செருக்கு, பிறர் துன்பத்தைப் பொருட்படுத்தாமல் ஒருவனை வாழச் செய்யும்! ஆகவே செல்வத்தைப் பெருக்குவதே நோக்கம் என வாழும் ஒருவன் தன் செயலின் விளைவாக அடுத்தவர் அடையும் துன்பத்தையும், அத்துன்ப மிகுதியினால் அழுவதையும், நேரில் கண்டும் காணாதவன் ஆகிவிடுகிறான்.

இங்கே திருவள்ளுவர் அரசனின் கொடுங்கோன்மை பற்றிக் கூறிய பாடல் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்! இது பொருட் பாலில் அரசனின் ஆட்சிக் குறைபாட்டைப் பற்றிச் சிந்திக்கும் பாட்டு. ஆனால் நாட்டை ஆளும் மன்னன் புறத்தில் தேசத்தை ஆள்வதை விட அகத்தில் ஆன்மாவை ஆளக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற அரிய செய்தியைக் கூறுகிறது! அந்தப் பாடல் என்னவென்றால்,

“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை!”(555)

என்ற பாட்டாகும்! நமக்குள், நம்மை இடித்துரைக்கும் மனச்சாட்சி ஒன்று உண்டு. இதனை வள்ளுவர் “தன்நெஞ்சு” என்பார். தன்னெஞ் சறிவது பொய்யற்க என்ற குறளில் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்பார். மேலும் “உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் ” என்ற குறட்பா வில் உள்ளம் என்பது மனச்சாட்சியைக் குறிக்கிறது. அடுத்து “மனத்தொடு வாய்மை மொழியின்” என்ற குறட்பாவிலும் மனத்தோடு பொருந்த என்ற பொருள் உள்ளது. ஆகவே நம்முள்ளே இருந்து நம் நடவடிக்கைகளைக் கண்காணித்து, தவறுகளை இடித்துரைப்பது மனச்சாட்சி என்பது புலனாகிறது. அந்த மனச்சாட்சி நம் ஆன்மா ஐம்புலனாசைப்பட்டுத் தடுமாறும்போது, அல்லற்பட்டு ஆற்றாது தவிக்கிறது. இதனால் நம் தவறுகளை மனச்சாட்சி உணரும்போது அழுகிறது! கண்களில் கண்ணீர் பெருகுகிறது. அந்த ஆன்மா இறை நெறியில்ஈடுபடும் பொழுது மகிழ்கிறது; அப்போது ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது.

“உள்ளம் தளிர்ப்ப உரோமம் சிலிர்த்துரையும்
தள்ளவிழி நீரரும்பத் தன்மறந்தாள் – புள்ளலைக்கும்
தேந்தா மரைபுனல்சூழ் தில்லைத் திருநடம்செய்
பூந்தாம ரைத்தொழுத பொன்!”

என்ற பாடல் மகிழ்ச்சிக் கண்ணீரைக் குறிக்கிறது. இந்த இருவகை அழுகைகளில் நம் மனச்சாட்சி உறுத்தும் தவறுகளை நாம் புரியும் போது, வரும் அழுகை நம் மாசுகளைக் கழுவுகிறது.

இந்த அழுகை அடியார்கள் தம் மனத்தில் இருந்த பொய்முதலான பாதகங்களை எண்ணி அழுத அழுகை என்பதை மாணிக்க வாசகரின் வாழ்க்கை உணர்த்துகிறது. அவர் பாடுகிறார்,

“யானோ பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே “

இப்பாடலில் உள்ளம், அன்பு, உடல் ஆகிய பொய்களையே செல்வமாகக் கருதியிருந்த வலிமையான பாவம் என் அழுகையால் கரைந்து இறைவன் திருவருளைப் பெறலாமே என்கிறார். இப்போது கொடுங்கோன்மை என்ற அதிகாரத்தில் உள்ள குறட்பா! அந்த அதிகாரத் துக்குள் அமைந்துள்ள புறவயமான தீமையைக்கண்டு சமூகம் அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர், அந்தத் தீமையை அழிப்பது போலவே, அகவயமான பொய்முதலான தீமையைக்கண்டு அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அகம்பாவத்தினைக் கழுவி அழித்து இறையருளாகிய செங்கோன்மையை அளிக்கும் என்ற புதுப் பொருளைத் தருகிறது. இப்போது அந்தகக் குறட்பாவை அந்தக் கருத்துடன் படித்துப் பார்ப்போம்!

“அல்லற்பட் டாற்றா தழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை!”(555).

ஓர் இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன்னால் தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் நடந்த விவாதத்தில்,” திருக்குறளின் கொடுங்கோன்மை அதிகாரத்தில் உள்ள இந்தப் பாடலில் ஆன்மிகம் உண்டா?” என்று ஒருவர் கேட்ட வினாவுக்கு விடையாக அன்று இந்தக் கட்டுரை ஆசிரியர் உள்ளத்தில் தோன்றிய புதிய விளக்கமாகும்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *