நல்ல உள்ளங்கள் வாழ்க!

0

பவள சங்கரி

தலையங்கம்

பேரிடர் சமயங்களிலும் பேரிழப்பு ஏற்படும் காலங்களிலும், தமிழன் தலை நிமிர்ந்து நிற்கும் வகையில் செயல்படுவது நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு உடன் பிறந்தோர்களாக எண்ணி சேவை செய்யும் நல்லுள்ளங்களை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை. சென்னை மேட்டுப்பகுதி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை போன்ற பல பகுதிகளிலிருந்து தன்னார்வ சேவை மையங்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள், போர்வைகள், மருந்துப் பொருட்கள், மருத்துவக் குழுக்கள் என மனமுவந்து அள்ளி வழங்கும் நேசமிகு நெஞ்சங்களைக் காணும்போது நாட்டில் மனிதம் மீதமிருக்கிறது என்ற நம்பிக்கை ஒளிர்விடத்தான் செய்கிறது.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
மதுரந்தே மொழி மாதர்களெல்லாம்
வாணி பூசைக்குரியன பேசீர்
எதுவும் நல்கியங் கெவ்வகையானும்
இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்

என்றானே பாரதி. எண்ணித்தான் இருக்கிறோமோ அதை.

சென்னை நகரிலேயே உயர்வான பகுதியில் வாழக்கூடியவர்கள் தாங்கள் முன்பின் அறிந்திராதவர்களைக் கூடத் தங்கள் இல்லங்களில் தங்கவைத்து உணவு, உடை என முடிந்ததைக் கொடுத்து நலிந்தவருக்கு ஆறுதலாய் இருக்கிறார்கள். நடுவர் பரிந்துரையின் பேரில் நகரில் பேருந்தில் பயணம் செய்வதற்கு இலவச அனுமதி அளித்திருப்பது வெளியூர் மக்கள் மற்றும் உறவினர் வீடு செல்பவர்களுக்கு ஆறுதலளிக்கக்கூடியது.

பால் தட்டுப்பாடு குழந்தைகளை பெரிதும் பாதித்துள்ளது. எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் என்ற நோக்கில் வியாபாரிகள் கொள்ளை இலாபம் அடித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியிருக்கிறார்கள். ஈரோடு, கோவை , நீலகிரி மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய ஆவின் பால் கொள்முதலை அதிகப்படுத்தி முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை முன்னரே சரியாகச் செய்திருந்தால் குழந்தைகளின் பசியையாவது போக்கியிருந்திருக்கலாம். போர்க்கால நடவடிக்கைகளுக்குரிய பணிகளும் காலந்தாழ்த்தி செய்திருப்பது வருந்தத்தக்கது. ஆம்னி பேருந்துகளில் பயணச்சீட்டு ரூ.3000 முதல் 5000 வரை விற்பதாகச் செய்திகள் வருகின்றன. அரசின் தீவிர கண்காணிப்பின் தேவைகள் அதிகரித்துக்கொண்டிருப்பதை அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டியதும் அவசியம்.

ஒரு பிரச்சனை என்று வரும்போதுதான் புதைந்து கிடக்கும் மர்ம ஊழல்கள் வெளிவர ஆரம்பிக்கின்றன. இது போன்ற பேரிடர் சமயங்களில் உயிர் காக்கவேண்டிய முக்கியப் பொறுப்பில் இருக்கும் மருத்துவமனையே 18 உயிர்களின் இழப்பிற்கு காரணமாகியிருப்பது பெருங்கொடுமை. மிகப்பெரிய மருத்துவமனைகளுக்கு உரிமம் கொடுக்கும்பொழுது அதற்குரிய குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளாவது பூர்த்தியாகியுள்ளதா என்ற சோதனைகூட செய்யாமல் உரிமம் கொடுத்ததன் விளைவே இந்த 18 உயிரிழப்புகளுக்குக் காரணமானது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விசயமாகிறது. மியாட் மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் கண்டிக்கத்தக்க ஒன்று. இறந்தவர்களின் உடல்கூட இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்ற செய்திகளும் வருத்தத்திற்குரியது.

உதவிகள் செய்வதிலும் அரசியல் ஆதாயங்கள் தேடுபவர்களின் செயல்பாடுகள்தான் வேதனையின் உச்சம்.

 இலகுவான மண் உள்ள மலைப்பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் கட்டப்படாமல், நீரோடைகளையும், குளங்களையும், ஆக்கிரமித்து பலமாடிக் கட்டிடங்களைக் கட்டுவதும், மனைப்பகுதிகளாகப் பிரித்து விற்பனை செய்வதும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல் இருந்துவிட்டு, இது போன்ற பேரிடர் வரும்போது செய்வதறியாது திகைத்து நிற்பதும் பல நேரங்களில் நமக்கு வாடிக்கையாகிவிடுகிறது.

கார்பன் வெளியேற்றத்திற்குரிய மாற்று ஏற்பாடுகளைப் பற்றி கொள்கை அளவில் அதனைக் குறைப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்து பேச்சு வார்த்தையின் முடிவில் குறைப்பது என்று முடிவெடுத்து மாற்று ஏற்பாடுகள் செய்யத் திட்டமிட்டிருக்கும் இவ்வேளையில் இந்தப் பேரிடருக்கு சுற்றுச்சூழல் மாசுதான் காரணம் என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளதும் கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

இதுவரை நடந்தததைக்காட்டிலும் இனி வரப்போகும் கொடுமையைச் சமாளிக்கத் தயாராக இருக்கவேண்டும். மழை நின்று முற்றிலுமாக வெள்ளம் வடிந்த பிறகு ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுப் பரவும் அபாயத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம். மத்திய அரசு இந்த கடும் மழையை தேசியப் பேரிடராக அறிவிப்பதும் அத்தியாவசியமாகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *