-மெய்யன் நடராஜ் 

இல்லையில்லை இங்கு மழையில்லை என்றழுத
தொல்லை தனைமாற்ற மண்மேலே – எல்லையற்றுப்
பெய்யும் மழைதந்து மக்கள் மனம்கழுவி
உய்விக்க விட்டான் இறை.

உய்விக்க விட்ட உயர்மழை நீண்டதால்
செய்வ தறியாது திண்டாடி – மெய்யுருகித்
தெய்வமே போதும் நிறுத்தி விடுஎன்று
பெய்தலில் சோர்ந்தார் பிணித்து.

பார்க்கும் இடமெங்கும் தண்ணீர்மயம் கொட்டித்
தீர்க்கும் மழையாலே திக்கற்று – நீர்க்குள்
திசைதேடி நிற்கும் சனம்கண்டு நெஞ்சம்
அசைவற்று நிற்கு ததிர்ந்து.

அரியா சனமமர்ந்து ஆட்சி தனையே
புரியும் அதிபதி  மார்க்கும் – சரியா
சனம்கொடுத்து நீரால் சமத்துவம் காட்டச்
சினம்கொண்ட வானின் சிதைப்பு.

வீடுகள் தம்மை விரைவாக மூழ்கடித்துக்
கேடு விளைவித்துத் துன்பத்தில் – போடும்
அடைமழை  மக்கள் இயல்பு நிலையைப்
புடைத்தெடுத்து  விட்டதுவே பார்.

கையில் பணமும் கடல்போல் நிலமிருந்தும்
மெய்யுறங்க மெத்தை மிருதிருந்தும்  –  வெய்யிலைச்
செய்ய பணத்தால் வழியற்று வீதிநின்றுக்
கையேந்த வைத்ததியற் கை.

தொடர்மழை வெள்ளம் துடிதுடிக்க வைக்க
இடர்ப்படும் மக்கள்  பலவாய் – இடம்பெயர்ந்
தாங்காங்கே நிர்க்கதியாய் நின்று தவிக்கின்றார்
தூங்குவதாய் இல்லை விசும்பு.

ஊரெங்கும் நீரிரிந்து மள்ளிக் குடிப்பதற்கு
நீரின்றித் நீர்மேலே தத்தளிக்கும் – பேர்கொண்ட
போராட்டம் மாறிப் புனர்வாழ்வு காண்பதற்கு
நீரோட்டம் சற்றே நிறுத்து.

தூர இருந்து துடிக்கின்றோம் நாமிந்த
நேரத்தில் நெஞ்சம்  பதைக்கிறோம் – சீரற்றக்
காலநிலை சீக்கிரம் சீராக் கியற்கைநீ
கோலமிடு வானின் சுடர்.

உழைத்துண்போர் கேட்டுத் தவமிருந்த பொன்செய்
மழைக்காலம் விட்டுவிட்டு வன்செய் – பிழைக்காலம்
தந்தினி என்செய்வோ மென்றேங்க விட்டாயே
நொந்தனர் நூலாய் நொடிந்து.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *