நாகேஸ்வரி அண்ணாமலை

மனிதனுக்கு மதம் தேவையா இல்லையா என்ற வாதம் எப்போதுமே நடந்துகொண்டிருக்கிறது.  இப்போது பல மதங்களைச் சேர்ந்தவர்களும் தாங்கள் செய்யும் அராஜகச் செயல்களுக்குத் தங்கள் மத நூல்களில் கூறப்பட்டிருக்கும் அறவுரைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு தங்களுடைய செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

1995 நவம்பர் மாதம் நான்காம் தேதி இஸ்ரேல் பிரதம மந்திரியாக இருந்த இட்சக் ரபீன் என்பவரை யூத மத வெறியன் இகால் அமீர் சுட்டுக் கொன்றான்.  இந்தக் கொடிய சம்பவம் நடந்து இருபது வருடங்கள் ஆகின்றன.  அவனுக்கு அந்தக் கொலையில் உடந்தையாக இருந்த அவனுடைய சகோதரன் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை ஆகியிருக்கிறான்.  அவனோ அவனுடைய சகோதரனோ இன்றளவும் தாங்கள் செய்த தவறுக்கு மனம் வருந்தவில்லை.  தங்கள் யூத மத வேதமான தோராவின் விளக்க உரையான டால்முடில்  (Talmud)  யூதர்களுக்குத் தீங்கு செய்பவர்களின் உயிர்களைப் பறிப்பதற்கு யூதர்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறதாம்.  ஆஸ்லோ ஒப்பந்தத்தில் ரபீன் கையெழுத்திட்டதால் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான வெஸ்ட் பேங்கில் குடியமர்த்தப்பட்ட இஸ்ரேலிய யூதர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதன் மூலம் கஷ்டத்திற்கு உள்ளாவார்களாம்.  அதனால் அதற்குக் காரணமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரபீன் இந்த மதவாதிகளால் கொல்லப்படுவது தவறில்லையாம்!  இது இந்த இரண்டு சகோதரர்களின் வாதம்.  அதே தோராவில்தான் ‘நீ மற்றவர்கள் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ அப்படி மற்றவர்களை நீ நடத்த வேண்டும்’ என்று கூறியிருக்கிறது.  இந்த இரண்டு சகோதரர்களும் அதை மறந்துவிட்டார்கள்.  தோராவின் விளக்க உரையான டால்முடில் அப்படிக் கூறியிருக்கிறதா என்று தெரியவில்லை.  விளக்க உரை எழுதுபவர்கள் மூலத்தில் உள்ளதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம்.  அந்த விளக்க உரைகளை எப்படி அப்படியே எடுத்துக்கொள்ள முடியும்?  யூத மத வெறியர்களின் குருட்டுப்புத்திக்கு இது ஒரு உதாரணம்.

சிரியாவிலும் ஈராக்கிலும் சுன்னி பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு ஒரு ராஜ்ஜியம் உருவாக வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். பலரைப் பலிவாங்கிக்கொண்டிருக்கிறது.  அல்லாவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் நிரீஸ்வரவாதிகள் என்று கூறிக்கொண்டு இஸ்லாம்மதத்தைச் சேராதவர்களைக் கொல்லுவதுதான் அந்த மதத்திற்குத் தாங்கள் செய்யும் சேவை என்று நினைக்கிறது.  மதத்தின் பெயரால் இவர்கள் செய்யும் அராஜகச் செயல்களுக்கு மதத்தைக் காரணம் காட்டுகிறார்கள்.  டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி கலிஃபோர்னியாவில் கொலைவெறியில் ஆடிய இருவரில் மனைவி ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு சமூக வலைதளம் ஒன்றில் தன் விசுவாசத்தைத் தெரிவித்து எழுதியிருக்கிறார்.  அவர்களுடைய மதத்திற்கு அவர்கள் இப்படிச் சேவை செய்கிறார்களாம்.  இது எவ்வளவு பெரிய மத மடமை!

சென்ற நவம்பர் மாதக் கடைசியில் அமெரிக்க மாநிலமான கொலராடோவில் உள்ள கொலராடோ ஸ்ப்ரிங்க்ஸ் (Colorado Springs) என்னும் நகரிலுள்ள ‘திட்டமிடும் பெற்றோர்’ (Planned Parenthood) என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு கட்டடத்திற்குள் நுழைந்து ஒருவன் சரமாரியாகச் சுட்டதில் மூன்று பேர் உயிர் இழந்திருக்கிறார்கள், ஏழு பேர் காயமடைந்திருக்கிறார்கள்.  காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவர்களிடம் சரணடைந்திருக்கிறான்.

இவனுக்கு ஏன் அந்த அமைப்பின் மீது அத்தனை கோபம்?  இந்த அமைப்பு பெண்களுக்குத் திட்டமிட்டுக் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனைகள் வழங்குவதோடு பெண்கள் விரும்பினால் அவர்கள் கருச்சிதைவு செய்துகொள்வதற்கும் உதவுகிறது.  இந்த அமைப்பு கிறிஸ்தவர்களின் வேதப் புத்தகமான பைபிளில் கூறப்பட்டிருப்பதற்கு மாறாகப் பெண்களுக்குக் கருச்சிதைவு செய்வதாகவும் அப்படிச் செய்த கருக்களின் பகுதிகளை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கு விற்பதாகவும் கூறி ‘இனி சிசுக்களின் உடல் பகுதிகள் விற்பனைக்கு கிடைக்காது’ என்று கூவியிருக்கிறான்.  பைபிளில் தடைசெய்யப்பட்டிருக்கும் விஷயங்களை ஆதரிப்பதாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் இவன் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் மூன்று பெண்களை மணந்திருக்கிறான்; அவர்களைப் பல வகையாகத் துன்புறுத்தியிருக்கிறான்; அவர்களோடு குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும்போதே மற்றப் பெண்களோடு உறவு வைத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறான்.  உலகம் சீக்கிரமே அழியப் போவதாகவும் தான் யேசுவின் மேல் அழியாத பற்றும் நம்பிக்கையும் வைத்திருப்பதால் உலகம் அழிந்த பிறகு தான் எப்போதுமே யேசுவின் அருகில் இருக்கப்போவதாகவும் கூறிக்கொண்டிருந்திருக்கிறான்.  என்னே இவனுடைய அறியாமை!

இந்தியாவில் இந்து மத சாமியார்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் இந்து மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள்தான் மோட்சம் பெறுவார்கள் என்பதுபோல் பேசுவதைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இதில் பசுவைக் கும்பிடுவதும் ஒன்று.  பசுவைக் கொல்லக் கூடாது என்று கூறுபவர்கள் எருமைகளைக் கொல்வது பாவம் இல்லை என்கிறார்கள்.  எருமை என்ன பாவம் செய்தது?  அதைக் கொல்லும்போது அதற்கு மட்டும் வலிக்காதா?  அதுவும்தானே மனிதனுக்குத் தேவையான பாலைக் கொடுக்கிறது?

எல்லா மதங்களும் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்றுதான் கூறும்.  மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை என்றுதான் எல்லா மதங்களும் போதிக்கும்.  ‘அடித்துப் புசி’ என்று பைபிளில் கூறியிருப்பதாக என்னுடைய கிறிஸ்தவப் பள்ளித்தோழி ஒருத்தி கூறுவாள்.  அன்பே உருவானவராக, இடையனாகச் சித்தரிக்கப்படும் யேசு மிருகங்களை அடித்துப் புசிக்கச் சொல்லியிருப்பாரா?  நிச்சயமாகச் சொல்லியிருக்க மாட்டார்.

அமைதி தவழும் புத்தர் சிலையைப் பார்த்தாலே அவர் கற்பித்த கொல்லாமைதான் நம் நினைவிற்கு வருகிறது.  அவர் பெயரில் வழங்கும் மதத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டு மியான்மாரில் அங்கு  வாழும் முஸ்லீம்களுக்கு எதிராகச் செய்யும் வன்முறைச் செயல்களும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அங்கு வாழும் புத்த மதத்தைத் தழுவும் சிங்களர்கள் செய்யும் அராஜகச் செயல்களும் புத்தரை உண்மையிலேயே பின்பற்றுகிறார்களா என்று நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

மத போதனைகள், மதக் கோட்பாடுகள், மதச் சடங்குகள் இல்லாமலேயே இறைவனை வழிபடலாம்.  மனிதர்களிடையே நல்லிணக்கத்திற்கு உதவாத மதங்களை மனித இனம் தூக்கி எறிந்துவிட்டு இறைவனை வழிபடலாம்.  ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பார்கள்.  அந்த தேவனை வழிபடுவதற்கு மதங்கள் ஏன், மதச் சடங்குகள் ஏன்?,

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “மனிதனுக்கு மதம் தேவையா?

  1. நல்லதொரு கேள்வியை வைத்துள்ளீர்கள்.  
    அதற்குரிய பதில் ….தேவையில்லை என்பதுதான்.  
    சிந்திக்க வைக்கும் பகிர்வை வழங்கியமைக்கு நன்றியும் பாராட்டுகளும். 

  2. சுமார் நாலாயிரம் ஆண்டுகட்கு முன் காட்டுமிராண்டியாக இருந்த மக்களை நாகரீக, ஒழுக்கமுள்ள, மனித நேயக் கட்டுப்பாடுள்ள மாந்தராக்க மதங்கள் தோன்றின என்பது என் கருத்து. மதங்கள் அக்குறிக்கோளில் தவறித் தோற்றன என்பது உண்மையே.

    மதங்களைப் புரிந்தும், புரியாத சிறுபான்மையோர் தொடர்ந்து மானிடருக்குத் தவறிழைத்து வருகிறார். மாறிப்போகும் மதங்களில் தொடர்ந்து குறைபாடுகள் களைகளாய் முளைக்கின்றன.  தொடர்ந்து களைகளை மதக்குருமார்கள் நீக்க முன்வருவார்களா ???  

    உலகப் பெரும் மதங்களான கிறித்துவ மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம் போன்றவை ஆண்டு தோறும் வளர்ச்சி அடைந்து வருவதால், குற்றங்களும் பெருகி வருகின்றன.  அரசாங்கச் சட்ட மன்றங்கள் குற்றவாளிகளைப் பிடித்துத் தொடர்ந்து தண்டிக்க முன்வருமா ???

    உலகிலே ஆழமாய் ஊன்றி விழுதுகள் விடும் மதப் பூதங்களை நம்மால் ஒழிக்கவே முடியாது.  ஆனால் நேர்மையான முறைகளில் நாம் தொடர்ந்து அவற்றைச் சீர்ப்படுத்த முடியும்.  21 ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து மதக் குருமார்கள் தம்தம் மதங்களைச் செம்மைப் படுத்த முன்வருவார்களா ???

    சி. ஜெயபாரதன். 

  3. மதங்களின் வழி  தமது புகழ் பரப்பும் மட்டமான சிந்தனைகள்.உள்ளுர் அரசியல் போலஇல்லையா? கடவுள் என்பது யார்? நம்முள் வாழ்ந்து மடிந்தவர்களைத்தான் கடவுளாகப்போற்றுகிறோம்.அவர்கள் பிறர் வாழ வகுத்துக் கொடுத்த நற்கருத்துகளை நாம் பின்பற்றுகிறோம்.இதில் அம்மன்தான் அல்லா,மேரி-எல்லாம்…அது புரியாதவர்கள்தான் உலகில் நிறைய பேர் உள்ளனர்.மொழி போலத்தான் இதுவும்.ஏற்றுக் கொள்ள மனம் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறதல்லவா? மனம் இதற்கு மிகுந்த பண்படவேண்டும்.

Leave a Reply to சி. ஜெயபாரதன்

Your email address will not be published. Required fields are marked *