இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (177)

0

– சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள் !

அவசரமான வாழ்க்கை. அல்லோலப்படும் பரபரப்பு. எதையோ தேடிக் கொண்டு கண்முன்னே இயற்கை தந்த இனிய வனப்புகளை அனுபவிக்கக் கூட நேரமின்றி கையிலிருப்பதைத் தொலைத்துக் கொண்டு இந்த 2015ம் ஆண்டில் மனித இனம் எதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது ?

அன்று காடுகளில் வாழ்ந்த ஆதி மனிதனுக்கும் இன்று நவநாகரீக உடையணிந்து வசதிகளின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய மனிதனுக்கும் ஆகாயமளவிற்கு விரிந்து கிடக்கும் வித்தியாசம். ஆனால் இந்த வித்தியாசம் எமக்கு அளித்திருக்கும் அனுகூலத்தின் மூலம் நாம் எதைச் சாதித்துக் கொண்டிருக்கிறோம், அன்றி எத்தகையதோர் எதிர்காலத்தை எமது அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கிறோம் ?

மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கேள்விகள்.

தனிமனிதனாகத் தனது சுயதேவைகளுக்காக மற்றையோரின் உணர்வுகளை மிதித்து வாழ்ந்த ஆதி மனிதன் நாகரீகமடைந்தேன் என்று கூட்டமாக, சமூகமாக, சமுதாயமாக வாழ்ந்து இன்று மீண்டும் தனிமனித தேவைகளுக்காக அடுத்தவரின் உணர்வுகளை மிதித்து வாழும் நிலைக்கு வந்து விட்டானோ என்று எண்ணும் வகை எமைச் சுற்றிப் பல நிகழ்வுகள் நிகழ்கின்றன.

அதேநேரம் இயற்கையின் அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் போது சமுதாய உணர்வுகள் மேலோங்கப் பணியாற்றும் நிலைகளையும் பார்க்கின்றோம். நெஞ்சில் சிறிதாக ஓர் ஆறுதல். மனிதாபிமானம் ஆங்காங்கே பச்சையாக இருக்கும் நிலை கண்டு ஒரு தெம்பு உருவாகிறது. பின் எதற்காக உனக்கிந்த கேள்விகளும், தடுமாற்றமும் என உங்கள் கேள்வியில் தொங்கியிருக்கும் நியாயம் எனக்குப் புரிகிறது.

இயற்கை எம்மீது தொடுக்கும் போர்கள் ஒருபுறமிருக்கட்டும். அதற்கு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆனால் மனிதன், மனிதன் மீது தொடுக்கும் போர்களும், அப்போர்களினால் அல்லலுற்று அவதியுறும் சக மானிடரும், அப்போருக்கான காரணங்களை புரிந்து கொள்ள முடியாத ஒரு விரக்தியுமே எனது கேள்விகளுக்குக் காரணம்.

நாம் யாருமே யாராக, யாருக்கு குழந்தையாகப் போகிறோம் என்று கேட்டுப் பிறப்பதில்லை. அதே போல தமக்கு யார் குழந்தையாக வர வேண்டும் என்று எம்மைப் பெற்றவர்களும் கேட்டுப் பெறுவதில்லை. நிலத்தைப் பெற்றோர் பதப்படுத்த எமக்கும் மேலே எமக்கும் புரியாத ஒரு சக்தி விதையைத் தூவுகிறது. துளிர்த்துச் செடியாகி மரமாகி “நான்” வளர்ந்து விட்டேன் எனும் இறுமாப்புடன் செயல்படத் துவங்குகிறோம். அங்கேதான் நாம் எமது வித்தியாசங்களுக்குள் எம்மைப் புதைத்துக் கொள்கிறோம். ஒரு குழந்தையாக மண்ணில் விழும் போது எந்த அடையாளமும் இல்லாமல் அவதரித்து விட்டு நம்மை இனம், மதம், மொழி, நிறம் எனும் வேற்றுமைகளுக்குள் சிக்க வைத்து விடுகிறோம்.

மதம் என்பது மனிதனின் மன ஒட்டங்களைச் சீர்ப்படுத்தி ஓர் தெளிவான கண்ணோட்டத்துடன் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வைப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. எந்த ஒரு மதமுமே தம்முடைய மதமே உலகில் சிறந்தது என்றும் மற்றைய மதங்களைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்றோ போதிப்பதில்லை. அனைத்து மதங்களின் அடிப்படையும் அன்புதான். மதங்களின் வழி நடக்கும் சிலர் தமது மனதின் ஆக்ரோஷங்களை மதத்தின் அடிப்படையில் நியாயப்படுத்த முயல்வதினால் அம்மதங்களைச் சேர்ந்த அனைவரையும் குற்றவாளிகளாகக் கருத முடியாது. எமது மதத்தின் அன்றி மொழியின் பெருமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக மற்றொரு உயிரைக் காவு கொள்வது எவ்வகையில் மதத்திற்கோ அன்றி மொழிக்கோ பெருமை சேர்க்கும் ?

இன்றைய உலகில் பயங்கரவாதம் எனும் பெயரால் நாம் எமது மதத்திற்கோ அன்றி மொழிக்கோ பாதுகாப்பளிக்கப் போகிறோம் என்று எண்ணுவது என்றுமே எம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லாது. மாறாக மனிதர்களுக்கிடையில் வேற்றுமையையும், விரோத மனப்பான்மையையும், அமைதியின்மையுமே தோற்றுவிக்கும்.

சமீபத்தில் பிரான்ஸிலும், அமெரிக்காவிலும் நடைபெற்ற மனிதப் படுகொலைகள் அந்நாட்டு மக்களிடையே தேவையற்ற சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளது. தவிர நிறவெறி, மொழிவெறி, மதவெறி கொண்ட அந்நாட்டுத் தேசியவாதிகளின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையிலேயே இந்நிகழ்வுகள் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. பிரான்ஸில் வேற்றின மக்களுக்கெதிராகக் குரல் கொடுக்கும் தேசவாதக் கட்சி அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைக் கைப்பற்றியுள்ளது. இது அங்குள்ள மிதவாத அரசியல்வாதிகளை அச்சமடைய வைத்ததுடன் அந்நாட்டுப் பல்லின கலாச்சார வாழ்வுமுறையை குலைக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல அமெரிக்காவில் தீவிர வலதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளராகிய டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தைக் காரணம் காட்டி இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த எவரையும் ஐக்கிய அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

இத்தகைய மதவாதக் கருத்துக்கள் உலகை எந்த இலக்கை நோக்கி இழுத்துச் செல்லப் போகிறது என்பதே கேள்வி. மனதுக்கு ஆறுதல் தரும் செய்தி இவரது இந்த அர்த்தமற்ற வாதம் அமெரிக்காவில் இவரது கட்சியைச் சேர்ந்த பலராலும் வன்மையாகக் கண்டிக்கப் பட்டுள்ளது. பல உலக முன்னணி அரசியல் தலைவர்கள் இத்தகைய அர்த்தமற்ற கருத்துக்கள் எதுவித பலனுமளிக்காது என்று மிகவும் பலமான கண்டனங்களை இந்நபருக்கெதிராக முன்வைத்துள்ளார்கள். இங்கிலாந்தில் இவர் லண்டனுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது எனும் மகஜர் ஒன்றை அரசாங்கத்தின் இணையத்தளத்தினூடாக   500,000   கையெழுத்துக்களுடன் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

மதப்பிரிவினையைத் தூண்டி மக்களுக்கிடையே நிலவி வரும் புரிந்துணர்வுக்கு பங்கம் விளைவிக்கும் இம்மனிதருக்கெதிராக பல பாகங்களில் இருந்து பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களால் எதிர்ப்புக் கிளர்ந்துள்ளது. அனைத்து மதமும் அன்பின் அடித்தளத்தில் அமைந்தது எனும் கருத்தினை மக்கள் ஆதரித்து ஒன்றிணைவது இத்தகைய ஒரு அறிவிலியின் அர்த்தமில்லாக் கருத்து என்பது ஒருவகை நன்மை எனலாம்.

மனிதன் மனிதனாக வாழ்வது மற்றைய மனிதனையும் தன்னைப் போல எண்ணுவது ஒன்றின் மூலமே என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் !

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

Check for Updates >>> https://petition.parliament.uk/petitions/114003

Block Donald J Trump from England

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *