நிர்மலா ராகவன்

குடும்பத்துள் ஏன் போட்டி?

உனையறிந்தால்

கேள்வி: `நீ அப்பா பிள்ளையா, அம்மா பிள்ளையா?’ என்று யார் கேட்டாலும், என் இரண்டு வயது மகள், `அப்பா பிள்ளை!’ என்று பளிச்சென்று சொல்கிறாள். அப்படியானால், அம்மா முக்கியமில்லையா?

விளக்கம்: அப்பாவுக்கும், அம்மாவுக்கும் குழந்தையின் அன்பில் போட்டியா, இப்படி ஒரு கேள்வி எழ! இருவருடைய பராமரிப்பு, அன்பு, அறிவுரை — இவை எல்லாமே குழந்தைகளுக்கு அவசியம்தானே!

சிறு வயதிலேயே குழந்தை புரிந்து கொள்கிறது, அப்பா தூக்கிக் கொண்டிருந்தால், `அப்பா பிள்ளை,’ என்றும், அம்மா வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தால், `அம்மா பிள்ளை,’ என்றும் சொல்ல வேண்டும் என்று. (அப்போதுதானே தன்னையும் வெளியே அழைத்துச் செல்வார்கள்!)

அம்மா வேலையாக இருக்கும்போது விஷமம் செய்தால், திட்டுகிறாள். அதனால், அப்பாவின் பக்கம் சாய்கிறது. தானே இன்னும் இரண்டு வயது போனால், அம்மாவைப்போல் தானும் ஒரு பெண்தான் என்று புரிய, அவளைப்போல் நடக்க முயலும். விடுங்கள். குழந்தைகள் செய்வது, சொல்வது எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் சுயமாகவா சிந்திக்கிறார்கள்!

சிறு வயதில், உடன்பிறந்தாருடன் போட்டி போடுவது பிறவிக்குணம். அது வேறு விஷயம். ஆனால், போட்டி மனப்பான்மை இருந்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணத்துடன், தம்மையுமறியாது, சிறு வயதிலிருந்தே அக்குணத்தை வளர்க்க முற்படுகிறார்கள் பலரும்.

`தம்பி பாத்தியா, எவ்வளவு சமர்த்தா சாப்பிடறான்! இத்தனைக்கும் ஒன்னைவிடச் சின்னவன்!’ என்று நான்கு வயதான பையனிடம் சொல்லிப் பாருங்கள்.

அவனால் தன் போக்கை மாற்றிக்கொள்ள முடியாது. பதிலுக்கு, தம்பியின் முதுகில் ஒன்று வைக்கிறான், `நீ ஏன் சமத்தா இருக்கே? என்னை மாதிரி இரேன்!’ என்று!

போட்டி மனப்பான்மையால் விளையும் தீமை — பொறாமை. எல்லாக் குழந்தைகளையும் சமமாகப் பாவிக்காது, பாரபட்சத்துடன் நடத்துவதால் வரும் வினை இது.

தான் எப்படியாவது எல்லாரையும்விட, எப்போதும், உயர்த்தியாகவே இருக்க வேண்டும் என்ற வெறியாலும் போட்டி வருகிறது.

இதுவே பழக்கமாகப் போய்விட, பெரியவர்களான பின்பும், பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் பொறாமை கொண்டு, அவர்களை வார்த்தைகளால் தாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள் இப்படிப்பட்டவர்கள். இவர்களுக்குத் தங்களுடைய வெற்றிகளால் திருப்தி அடைந்துவிட முடிவதில்லை. பிறரைத் தாழ்த்தினால்தான் சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சி.

ஒரு குடும்பத் தலைவன் இப்படி போட்டி மனப்பான்மையோடு வளர்ந்திருந்தால், தன் மனைவி, குழந்தைகளுடன் எப்போதும் போட்டி. சிலர் அவனது குணம் புரிந்து விட்டுக்கொடுக்கலாம். அனேகமாக, குடும்பத்தில் பிளவுதான் வரும்.

எனக்குத் தெரிந்த ஒருவர் அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க உத்தியோகத்தில் இருந்தார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் மனைவியை, `முட்டாள்’ என்று பழிப்பார். அவள் பட்டதாரி. முதல் வகுப்பில் தேறியவள். ஆனால், அவரைப்போன்று மூன்று பட்டங்கள் பெற்றிருக்கவில்லை. தான் அவரைவிடத் தாழ்ந்தவள்தான் என்று அவர் எவ்வளவு மட்டம் தட்டியபோதும் பொறுத்துப்போனாள். இம்மாதிரியானவர்களின் தாம்பத்திய உறவு எவ்வளவு லட்சணமாக இருக்கும்!

இன்னொரு குடும்பத்தில் மனைவி ஏதோ சிறப்புப் பெற்றிருக்கிறாள். `இவன் நம்மைவிட மேலானவன் என்று நினைத்துவிடப் போகிறானே!’ என்று கணவனின் நண்பர்கள் அச்சம் கொண்டு, காரியத்தில் இறங்குவர்:

`இனிமேல், நீதான் அவள் பெயரை உன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள வேண்டும்!’

`எப்படித்தான் இப்படி ஒரு மனைவியை பொறுத்துப் போகிறாயோ! இப்படியே விட்டால், உன்னை மதிக்க மாட்டாள், பார்!’
`நம் மனைவியைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ள முடியவில்லையே!’ என்ற பொறாமையால் அப்படிப் பேசுகிறார்கள் என்று அவன் புரிந்துகொண்டால் போயிற்று. இல்லையேல், தாழ்வு மனப்பான்மையுடன் மனைவியை எதிர்த்துக்கொண்டே இருப்பான்.

கணவனது பக்கபலம் இல்லாது, அவனுடைய எதிர்ப்பையும், ஏளனத்தையும் தாங்க வேண்டியிருந்தால், ஒரு பெண் ஆக்ககரமாக ஏதாவது செய்யவே துணியாது, யோசிக்கும் நிலை வந்துவிடக்கூடும். பல பெண்கள், `கல்யாணத்துக்குமுன் நிறைய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது நேரமில்லை,’ என்று சொன்னாலும், உண்மைக் காரணம் அதுவாக இருக்காது. உள்ளுக்குள் புழுங்குவாள்.

ஆக, கணவன் தான் மனைவியைவிட உயர்வு, அல்லது தாழ்வு என்று நினைப்பதால் குடும்பத்தில் கண்ணுக்குப் புலனாகாத விரிசல்தான் உண்டாகும்.

பேரும், புகழும் கொண்ட ஒருவனிடம், `உங்கள் மனைவியின் ஊக்குவிப்பால்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்களா?’ என்று யாரும் கேட்பதில்லை. ஏனெனில், அவன் ஆண். அவனுடைய திறமை, உழைப்பு போன்றவை இயல்பானது என்று கருதப்படுகிறது.

என்னை ஒரு வானொலி பேட்டியின்போது, `உங்கள் கணவரின் ஒத்துழைப்பால்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்களா?’ என்று கேட்டபோது, `நான் இதற்குப் பதில் சொல்ல மாட்டேன். எந்த ஆணையாவது நீங்கள் இப்படிக் கேட்டிருக்கிறீர்களா?’ என்று திருப்பிக் கேட்டேன்.

`யாருமே ஊக்குவிக்காம நீங்க இந்த அளவுக்கு மேலே வந்தீங்களா?’ என்று இரைந்தார் பேட்டி எடுத்தவர். (ஒரு பெண்ணின் வெற்றியைக் கண்டு அச்சம் அடைகிறவரோ? )

`உங்கள் கேள்வியைச் சற்று மாற்றி,` யார் உங்களை ஊக்குவித்தது?’ என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்,’ என்றேன்.

பிறர் மகிழ்ச்சியடைவார், பாராட்டுவார் என்று ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கினால், தொடர்ந்து அதைச் செய்யும் ஆர்வம் குன்றிவிடும். நம் திருப்திக்காக, மனநிறைவுக்காகச் செய்யும்போதுதான் முழுப்பலன் கிடைக்கிறது.

`என் மனைவி வாழ்வில் உயர்ந்தால், அது எனக்கும் பெருமைதானே! இதில் என்ன போட்டி!’ என்று ஒருவர் எண்ணி நடந்தால், அக்குடும்பத்தில் பரஸ்பர அன்பும், மரியாதையும் நிலவும். அவர்களது குழந்தைகள் பெற்றோரைவிட இன்னும் மேலான நிலைக்குப் போவார்கள். இவர்களுக்கு, `அம்மாவா, அப்பாவா?’ என்ற பாகுபாடு, அதனால் விளையும் குழப்பங்கள் இராது.

மனித உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்கே உரிய பயன்பாடு உண்டு.
கண் முக்கியமா, கால் முக்கியமா?
எது உயர்வு, எது மட்டம்?

இதேபோல், தாய், தந்தை, மகன், மகள் எல்லாரும் குடும்பத்தின் வெவ்வேறு அங்கங்கள். அனைவரும் இணைந்து செயல்பட்டால், ஒவ்வொருவரின் தனித்தன்மையும், பலமும் மற்றவருடையதுடன் இணைந்து, மேலும் வலுப்படும்.

சில குடும்பங்களில் எல்லா உறுப்பினர்களுமே பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்று விளங்குவதன் ரகசியம்: போட்டியின்மை, ஒத்துழைப்பு.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *