கலித்தொகை: கருத்தும் காட்சியும்

1

–முனைவர் துரை. குணசேகரன்.

கலித்தொகை

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள் ஆகும். இவற்றுள் எட்டுத்தொகையில் இடம் பெற்றிருக்கும் படைப்புகளில் பாவால் பெயர்பெற்றவை இரண்டு. அவற்றுள் ஒன்று கலித்தொகையாகும். கடவுள் வாழ்த்துப்பாடலுடன் அகப்பொருளமைந்த கலிப்பாவால் இயன்ற நூற்றைம்பது பாடல்கள் கொண்டது. பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் முறையால் முறையே பெருங்கடுங்கோன், கபிலர், மருதனிளநாகன், நல்லுருத்திரன், நல்லந்துவனார் ஆகியோரால் 35,29,35,17,33 என்னும் நிலையில் பாடப்பெற்ற நூலின் தொகுப்பாகும். அனைத்தும் நல்லந்துவனாரால் பாடப்பட்டவையே என்னும் கருத்தும் நிலவுகின்றது.(1)

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டாயிரு பாங்கினும்
உரிய தாகு மென்மனார் புலவர் (தொல் பொருள்.56)

என்னும் நூற்பாவால் புலனெறி வழக்கில் பாடுதற்கு ஏற்ற பாவகையில் கலிப்பாவும், பரிபாடலும் ஏற்றவை என்பது புலனாகும். “தரவு, தாழிசை, முதலிய கலியுறுப்புகள் புலனெறி வழக்கிற்கூற்று நிகழ்த்துதற்குரியார் மற்றொருவர்க்கு நன்று கட்டுரைக்குமிடத்து, அக்கருத்தினைத்தொகச்சொல்லியும் தூவாதநீக்கி வகுத்துரைத்து வலியுறுத்தியும் முடிவின்கண் பயனால் நகச்சொல்லியும் நன்றி பயத்தற்கேற்ற வெவ்வேறோசையும் அமைப்பும் உடையவாகத்திகழ்தலும் இதனது சிறப்புரிமைக்கு ஏதுவாதல் வேண்டும்” என்னும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கூற்றும் இதனை மெய்ப்பிக்கும். சிறப்புகள் பலகொண்ட கலித்தொகை கூறவந்த அடிக்கருத்துகளுக்கேற்ப காட்சியமைப்புகள் அமைந்திருக்கும் சிறப்புகள் குறித்து ஆராயுமுகத்தான் அமைகிறது இக்கட்டுரை.

நான்கில் ஐந்து:
இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்தியவன் சங்கத்தமிழன். தமிழகத்தை நான்கு நிலமாகவும் அவற்றுள் வாழும் மக்களின் ஒழுக்கத்தை ஐந்தாகவும் பாகுபடுத்தினர். தொல்காப்பியர் நிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முறைப்படுத்தி அதற்கேற்ப திணையை அமைத்தார். நிலமில்லாப்பாலைக்கு கடைசி இடமளித்தார். ஆனால் கலித்தொகை பாலைத்திணைக்கு முதலிடமளித்ததுடன் தொல்காப்பியர் அளித்த முறைவைப்பை குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்றும் மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

“கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஒழுக்கங்களைக்கூறி உள்ளடக்கத்தில் புரட்சி செய்த கலித்தொகை, உருவத்திலும் அகநானூற்றைத்தவிர எந்த நூலிலும் முதலிற்கொள்ளாத பாலையை முதலிற்கொண்ட திணைவைப்பு முறையிலும் புரட்சிக்கோலத்தைக் கொண்டிலங்குகிறது” என்பார் ஆய்வாளர்.(2) பாலைக்கு நிலத்தை தமிழின் முதல் காப்பிய ஆசிரியர் இளங்கோவும் நம்பியகப்பொருள் ஆசிரியரும் வெளிப்படுத்துகின்றனர் என்றாலும் முல்லையும், குறிஞ்சியும் வறட்சியின் காரணமாக பாலை நிலமாகத்தோன்றும் என்ற குறிப்பினால் தழிழகத்தில் பாலைக்கு நிலமில்லை என்பது பெறப்படும். “கற்றறிந்தார் ஏத்தும் கலியில்” ஐந்து திணையிலும் இடம் பெறும் பாடல்களில் ஒரு சிலவற்றின் கருத்துக்கேற்ற காட்சிகளை ஆராயும் நோக்கில் அமைகிறது இக்கட்டுரை.

பாலைத்திணை – சுரத்தின் கொடுமை:
தலைவியைப் பிரிந்து பொருளீட்டத்தலைவன் செல்லும் காட்டின் தன்மையை,

வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வம்போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி
யார்கண்ணு மிகந்துசெய் திசைகெட்டா னிறுதிபோல்
வேரொடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலி
னலவுற்றுக் குடிகூவ வாறின்றிப் பொருள்வெஃகிக்
கொலையஞ்சா வினைவராற் கோல்கோடி யவனிழ
லுலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம் (கலி. 10:17)

என்று வருணிக்கின்றார் சேரமன்னன் பெருங்கடுங்கோ. இதில் வறிய இளையவனின் கொடுமை, பெருந்தன்மையில்லாதவனிடத்துள்ள பயனில்லா செல்வம், வரம்புமீறி வம்பு செய்வானுக்கு வரும் கேடு, கொடுங்கோலன் ஆட்சியில் வாழும் மக்களின் பொலிவிழப்பு முதலியவற்றை எடுத்துக்காட்டி இவற்றைப்போன்று நிழலில்லா மரங்களின் கிளைகள் மட்டுமன்றி வேர்களும் வெம்பிநிற்கும் காட்சியை அழகுடன் படம்பிடித்துக்காட்டுகின்றார்.

ஆரளைக்கள்வர்களின் அறமற்றசெயல்:
தலைவன் குறிப்பிட்ட பாலை நிலத்தின் கொடுமையை எடுத்துரைத்து, துணையாக எம்மையும் அழைத்துச்செல் என்று தலைவி கூறுகின்ற நிலையில்,

“மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உண்ணீர் வறப்பப் புலவர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்”(கலி.6:1-6)

என்று குறிப்பிடும்பொழுது பாலைநிலத்து ஆரளைக்கள்வர்களின் கொடுஞ்செயல் நெஞ்சை பதைபதைக்கச்செய்கிறது. திருமணமான சூழலில் பொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்துவரும் தலைவன் ஈட்டிய பொருளுடன் விரைந்து இல்லம் திரும்புகிறான். அவனுடைய பயணநேரத்தைவிட பிரிவின் கொடுமையினால் அவனுடைய மனம் விரைந்து தலைவியை அடையும் நிலை. இந்தச்சூழலில் பொருளீட்டிவரும் தலைவனை வழிமறித்து ஆறளைக்கள்வர்கள் பொருளை வழிப்பறி செய்கின்றனர். பொருளை அளிக்க மறுக்கும் தலைவன் மீது அம்புமழை பொழிகின்றனர். யாருடைய அம்பு எய்தபின் குருதிமிகுந்த வேகத்துடன் பீறிட்டு அடிக்கின்றது என்று பார்த்து கும்மாளமிடுகின்றனர். மிகுதியான குருதிவெளியேறியதால் வறட்சி ஏற்படுகிறது. வறட்சியினால் நீர் கேட்டு கீழே விழுகிறான் தலைவன். அவன் படும்துன்பத்தைப்பார்த்து மகிழ்கின்றனர் கள்வர்கள். இதனால் வருகின்ற கண்ணீரை நாவால் நக்கி ஒரு சிறிய நேரம் உயிர்வாழும் நிலை. தலைவன் பொருள் கொண்டு வரவில்லை என்றாலும் அவன் உயிருக்கு இறுதிதான். (கலி.பா.4:4-5) இப்படிப்பட்ட கொடுமையுடைய காட்டுவழியில் செல்லுகின்ற தலைவனுடன் தலைவியும் வருகின்றேன் என்று கூறுவதால் செலவழுங்கும் நிலை உருவாகும்.

காட்டுக்குச் செல்லவிருக்கும் இராமனுடன் செல்லவிழையும் சீதையிடம், காட்டின் கொடுமையை எடுத்துரைக்கின்றான் இராமன். அப்போது சீதை, “நின்பிரிவினும் சுடுமோ பெருங்காடு”
என்று குறிப்பிடும் நிகழ்வு இவண் ஒப்பு நோக்கத்தக்கது. பாலைநிலத்தின் கொடுமையைப் பளிச்சிடச்செய்ததில் கலித்தொகை முதன்மை வகிக்கிறது எனலாம்.

உலக இயல்பு:
தலைவனின் பிரிவு குறித்து ஆற்றாளாய தலைவியிடம் தோழி,

“உன்னுடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங்
கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல்
பண்டுமிவ் வுலகத் தியற்கை யஃதின்றும்
புதுவதன்றே…….” (கலி.22:1-4)

என்று உலக நடப்பு குறித்து எடுத்துக்காட்டி ஆற்றுவித்தது. இதேபோன்று பொருளீட்ட தலைவியைப் பிரிந்து செல்ல விழையும் தலைவனிடம், ஒரேயாடையை இருவரும் போர்த்திக் கொள்ளும் நிலை வந்தாலும் ஒருவரையொருவர் பிரியாதிருப்பவருடைய வாழ்க்கை,

“ஒரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை
ஒன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” (கலி.18:9-11)

என்று இளமை நிலயாமையை முதன்மைப்படுத்தி சேர்ந்திருப்போர் வாழ்வின் சிறப்பினை எடுத்துக்கூறி தோழி தலைவனின் செலவழுங்குவித்த நிகழ்வு குறிப்பிடத்தக்கது.

உடன்போக்கை அறமெனல்:
தலைவனைப்பிரிந்த தலைவியை ஆற்றுவித்தல், தலைவனை செலவழுங்குவித்தல் இவைமட்டுமன்றி தலைவனுடன் உடன்போக்கு சென்ற தலைவியைத்தேடிச்செல்லும் செவிலித்தாய்க்கு முக்கோட்பகவர் உரைக்கும் அறநிலை தத்துவம் நிறைந்ததாக உள்ளது. பாலைத்திணையிலுள்ள முப்பத்தைந்து பாடலில் பின்வரும் ஒரே ஒரு பாடலே களவுத்துறையிலமைந்த பாடல் என்பது குறிக்கத்தகுந்தது.

முக்கோலையும் குடையையும் கொண்டு செல்லும் அந்தணர்களைப்பார்த்து செவிலி இச்சுரத்திடை,

“என்மக ளொருத்தியும் பிறன்மக னொருவனுந்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியை
ரன்னா ரிருவரைக் காணீரோ பெரும”(கலி.9:6-8)

என்று வினவ, கண்டோம்; மாணிழை மடவரலாகிய தலைவிக்குத் தாய் போன்றீர் என்று வினவலுடன், பின்வரும் அறிவுரையை அளிக்கின்றார்:

‘சந்தனம் பூசிக்கொள்பவர்க்கன்றி பிறந்த மலைக்கும், வெண்முத்து அணிபவர்க்கன்றி நீருக்கும், இன்னிசை கேட்பவர்க்கன்றி யாருக்கும் பயனில்லை. இவையொத்தே நும்மகளும் தலைவற்கன்றி நுமக்குப் பயன்படாள். உடன்போக்கு சென்ற இணையருக்கு எவ்வித துன்பமும் தராதீர். அவர்கள் சென்றவழி அறவழியின் பாற்பட்டதே”(கலி.9:9-23)

திருமணமான பெண்ணைப்பார்த்து வயிற்றில் ஏதாவது புழுப்பூச்சி உண்டா என்று கேட்பது இன்னும் வழக்கமான ஒன்று. “புழு” என்றால் ஆண்பிள்ளை என்றும் “பூச்சி” என்றால் பெண்பிள்ளை என்றும் குழுஉக் குறி முறையில் வினவுவதாகும். இதற்குக்காரணம் புழுவானது வாழுங்காலம் வரை அதே இல்லத்தில் வாழ்ந்து மறைவதும், பூச்சியெனில் தக்ககாலத்தில் வேறொரு இடத்திற்குப்பறந்து சென்று வாழ்க்கை நடத்துவது என்றும், மறைபொருளை உணர்த்துவதாகும். ‘நாத்தனார்” என்று வழங்கும் உறவும் இதனை ஒத்ததே. ‘நாற்று அன்னார்” என்பதே இதன் இலக்கிய வழக்காகும். அதாவது விதைக்கப்பட்ட நாற்றங்காலுக்கு நாற்று பயன்தராது. அது பிடிங்கி நடப்படும் வேறொரு வயலுக்கே பலன்தருவதைப் போன்று தமிழ்ப்பண்பாட்டில் பிறந்தகத்தில் பெண்பிள்ளை பலன்தருவதில்லை. வாழ்க்கைப்பட்டுச் செல்லும் இல்லத்திற்கே பயன் என்னும் இன்றைய நிலை இவண் ஒப்பு நோக்கத்தக்கது.

கொடியகாட்டில் இளகிய உள்ளம்:
பொருள்வயிற்பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வருவான் என்பதற்குத் தலைவி, தலைவன் முன்பு உரைத்த பின்வரும் நிமித்தங்களைத் தோழியிடம்கூறி அமைதி கொள்கிறாள். தலைவன், செல்லும் வழியில்,

துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே:
………..
அன்புள் மடப்பெடை யசைஇய வருத்தத்தை
மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே:
……….
இன்னிழ லின்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்னிழயைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே (கலி.11:8-17)

என்று தலைவன் முன்பு கூறிய காட்சிகளைத் தோழிக்கு எடுத்துக் காட்டுகின்றாள். இதன்படி …
கன்று கலக்கிய சிறுதண்ணீரைப் பிடிக்கு ஊட்டிப்பின் களிறு உண்டது;
வெயிலின் கொடுமையால் வருந்திய பெண்புறாவின் வருத்தத்தை ஆண்புறா தன் சிறகால் போக்கியது;
நிழலின்றி வருந்திய பெண்மானுக்குத்தன்நிழலை அளித்தது ஆண்மான்.

இக்காட்சிகள் பொருளீட்டச்சென்ற தலைவன் மனத்தைமாற்றும். அவன் திரும்பி வருவான். இது குறித்துப்பல்லியும் பலன் கூறியுள்ளது என்று தலைவனின் வரவுகுறித்து ஐயுற்ற தோழிக்குத் தலைவி பதிலளிக்கிறாள். மிருகங்களின் மேற்காணும் செயல்குறித்து ஐயுறத்தேவையில்லை. “இன்னும் இத்தன்மைகளை மிருகங்கள் பலவற்றிடம் காணலாம். மீன்களுள் “போத்து” என்னும் ஒருவகை மீன் தன் பெடையிட்ட முட்டைகளைத்தன் வாயிலேயே தாங்கிக்கொண்டு பொரிக்கு மனவிற்கு உணவு கொள்ளுவதில்லை என்று ஞானாம்பாள் அம்மையார் குறிப்பிடுவது சிந்தனைக்குரியது.(3)

குறிஞ்சிக்கவி:
கபிலர் பாடியதாகக்கருதப்படும் குறிஞ்சிக்கலியில் நாடக அமைப்பில் காணப்படும் பாடல்கள் சில உள்ளன. அவற்றுள் தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்கும் நிலையில் பாடப்பட்ட ‘சுடத்தொடீ கேளாய்” எனும் பாடல் (51) குறிப்பிடத்தகுந்தது.

தோழி அறியாமல் தம் மனத்தில் குடிக்கொண்ட தலைவனின் செயல்குறித்து தலைவி குறிப்பிடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. சிறுவயதில் தோழியுடன் தாம் கட்டிய மணல் வீட்டைக்கலைத்தும் கூந்தலில் சூடிய பூவினைப்பறித்தும் வரிப்பந்தினைக்கவர்ந்தும் சென்ற பட்டித்தனமான சிறுவன், தலைவி பருவம் எய்தியபின் அவளைக்காணவியலாமையால் அவள் இல்லம் நோக்கி வருகிறான். தலைவன் இல்லத்தில் தாயும் மகளும் இருக்கின்றனர். தலைவன் தண்ணீர்கேட்க தாய் மகளிடம் பொறுப்பை ஒப்படைக்க வந்திருப்பவன் யார் என்று அறியாது நீர் கொண்டுவந்து கொடுக்கிறாள். கொடுத்த தண்ணீரை வாங்காமல் அவளின் வளை முன்கையைப் பற்றுகிறான். எதிர்பாரதா நிகழ்வு என்பதால் தலைவி பெண்ணுக்கே உரிய நாணாத்தினால் “இவன் ஒருவன் செய்தது காண்” என்று அலற, ஒடிவருகிறாள் தாய். அப்போதுதான் வந்திருந்தவன் தன்மனத்தில் இடம் பிடித்தவன் என்பதை அறிகிறாள். இப்போது தாயிடமிருந்து அவனைக்காப்பாற்ற வேண்டியசூழல் உண்மையைச்சொன்னால் தலைவனின் நிலை பரிதாபமாகிவிடும். எதுவும் சொல்லவில்லை என்றால் தாய்க்கு ஐயம் வந்துவிடும். இக்கட்டான சூழலில் “உண்ணுநீர் விக்கினான்” என்று ஒரு பொய்யைச் சொல்லி, தலைவனைக்காக்கிறாள். தாயும் உண்மையென்று நம்பி அவளின் “முதுகைப்புறம் பழித்து” நீவிவிட, அவனோ தலைவியைக் “கொல்வான் போல் கடைக்கண்ணால் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்” என்று தோழியிடம் தலைவி நடந்த கதையைக் கூறுகிறாள்.

மேற்காணும் நிகழ்வு மூவரைக் கொண்ட ஓரங்க நாடகம் போன்று அமைந்திருப்பது சிறப்பாகும். இயல்பாக நடக்கும் கதைபோன்று இருப்பினும் அதன்வழி தலைவி தோழிக்குத்தம் உள்ளக்கருத்தை வெளிப்படுத்துகிறாள். தலைவன் தலைவி இருவரும் நேருக்கு நேர்பார்க்க, தலைவியின் தாய் தலைவனின் பின்புறம் தலைவியின் முகத்தைப்பார்க்கும் நிலையில் நிற்கிறாள். அவனுக்குத் தலைவனின் முகம் தெரிய வாய்ப்பு இல்லை. தலைவனோ தலைவி அலறியதால் அவளைக் கொல்வது போல் நோக்கினாலும் தன்னைக் காப்பாற்றியதால் காதல் நகையைத் தொடர்ச்சியாக வீசுகிறான். அதனால் “நகைக்கூட்டம்” என்ற தலைவி, நிறைவாக “அக்கள்வன் மகன்” என்று சொல்லும் பொழுது இயல்பான மக்களின் பேச்சு வழக்கில் அமைவது போன்று “திருட்டுப்பயபிள்ளை” என்று பெற்றெடுத்த தந்தையைத் திட்டுவது போன்று இருந்தாலும், தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஆடவன் என்பதை உள்ளுறையாகத் தோழிக்கு உணர்த்தி, அறத்தொடு நிற்கிறாள். இது நாடகப்பாங்கில் அமைக்கப்பட்ட ஒரு சிறுகதையாக அமைந்து சிறைக்கிறது. தலைவியின் தாய் அருகில் இருந்தாலும் அவள் அறியாத நிலையில் இந்நிகழ்ச்சி அரங்கேறுவது பண்பாட்டுச் சிறப்புமிக்க பாடலாசிரியரின் தனித்திறமாகும். விரும்பிய அடிக்கருத்திற்கேற்ற காட்சியமைப்பு சிறக்கிறது என்பது வெளிப்படை. இதுபோன்று கலித்தொகையில் பலபாடல்கள் உள்ளன.

காமர்கடும்புனல்:
குறிஞ்சிக்கலியின் முப்பத்தொன்பதாம் பாடலின் தொடக்கமாக இடம் பெறுவது இத்தொடர். புனலில் குளிக்கும்பொழுது அடித்துச்செல்லப்பட காப்பாற்றிய ஆடவனை விரும்புகிறாள் தலைவி. தாய் கேட்கும் கேள்விகளுக்குப்பதில் சொல்ல வேண்டிவரும் என்பதற்காகத்தோழி தாம் குறித்த புனலின் தன்மையை இவ்வாறு கூறித்தொடங்குகிறாள். தொடக்கமாக புனலுக்குக் கொடுத்த அடைமொழிகளே காட்சியமைப்பில் சிறப்புடன் தாயைச்சமாளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

ஆடவன் காப்பாற்றவேண்டிய நிலைக்கு ஏன் சென்றீர்கள்? அந்தச்சுனையில் ஏன் குளித்தீர்கள்? நீர்நிலையில் அடித்துச் சென்றதற்கு என்ன காரணம்? என்றெல்லாம் தாய்கேட்பாள் என்பதற்காக அந்தப்புனல் காண்பாரை ஈர்க்கக்கூடியது என்பதால் அது “காமர் புனல்” என்று சொல்லுகின்றாள். அதுமட்டுமன்றி அப்புனலில் ஏன் தடுமாற்றம் ஏற்பட்டது என்பதற்காக “கடும்புனல்” என்னும் சொல்லைப்போட்டாள் தோழி. புனலில் அடையாக வரும் “காமர்” “கடும்” என்னும் பெயரடைகள் தோழியின் பேச்சுத்திறத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இக்காட்டுகள் வழி தாயின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்வதற்கும் தலைவியைக் காப்பாற்றிய அவனே அவளின் உள்ளத்தைக் கவர்ந்தவன் என்று அறத்தொடு நிற்றலுக்கும் இத்தொடரின் வழி உணர்த்தும் காட்சிகள் வலிமை வாய்ந்தவையாகும். இங்குச் சொற்செட்டுடன் காட்சியமைப்பும் படிப்போரை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

மருதம் – ஊடல் தீர்க்கும் உவமைகள்:
கலித்தொகையில் சற்றொப்ப முந்நூற்றைம்பத்தாறு உவமைகளுக்குமேல் பயின்று வந்துள்ளன. அவை பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் அமைப்பில் முறையே 113:59:30:40:11 என்றும், கடவுள் வாழ்த்தில் மூன்றும் ஆகும் என்று விளக்குவார் தெசிணி.(4) இவ்வகையில் உவமை நலத்தால் சிறந்திருக்கும் கலித்தொகையின் மருதக்கலியில் தலைவியின் ஊடலால் தலைவன் கூறும் உவமை மனங்கொளத்தக்கது.

“யாரிவன் எங்கூந்தல் கொள்வான்…..” என்று ஊடி “வாரல் நீ வந்தாங்கே மாறு” என்று வாயில் மறுத்த போது தலைவன், உடலும் உயிரும் ஒன்றாக, தலை இரண்டாகிய புள்ளின் இருதலையில் ஒன்று மற்றொன்றுடன் போர்செய்வதைப்போல உன் செயல் இருப்பின் என்னுயிர் நிற்கும் வழியாது? என்று உருக்கமாக எடுத்துரைக்கிறான்.

இதனை,

“…………ஒருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று
போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறினென்
ஆயருயிர் நிற்குமா றியாது” (கலி.89:4-6)

என்று கலித்தொகை காட்டும். இவ்வினவலில் உள்ள உவமை தலைவியில் ஊடல் தீர்வதற்கு ஏற்றவாறு அமைந்து சிறக்கிறது. சங்க இலக்கியத்தின் வேறொரு படைப்பில் “இருதலைப்புள்ளின் ஓருயிர் அம்மே” என்று தலைவி தோழியைக்குறிப்பிடல் இவண் ஒப்பு நோக்கத்தக்கது.

தந்தைபோலிரு – தந்தையாயிராதே:
தலைவன் மீது ஊடல் கொண்ட தலைவி தன் மகனிடம் தந்தையின் குணத்தில் எதை ஒத்திரு, எதை ஒவ்வாதே என்று குறிப்பிடுமிடங்கள் நெகிழ்ச்சிக்குரியனவாக உள்ளன. பகைவெல்லும் திறத்தில் தந்தையாயிரு, ஒன்று கலந்த தோள் நெகிழச்செய்யும் கொடுமை நிலையில் அவராயிராதே என்னும் பொருள் பட,

கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும்
வென்றி மாட்டொத்தி பெருமமற் றொவ்வாதி
ஒன்றினேம் யாமென் றுணர்ந்தாரை நுந்தைபோல்
மென்தோள் நெகிழ விடல் (கலி.86:13-16)

என்று மகனுக்குத்தாய் உரைக்குமிடம், ஈன்று புறந்தருதல் மட்டுமின்றி சான்றோனாக்குவதிலும் சங்ககாலத்தாய்க்கு இருந்த பங்களிப்பு புலனாகும். இக்காட்சி தலைவியின் பிரிவுத்துயரத்தைப் படம்பிடித்துக்காட்டும் சிறந்தகாட்சியாகும்.

முல்லைக்கலி:
கலித்தொகை பாடியோரில் இருவர் அரசர்கள் அவர்களில் முல்லைக்கலியின் ஆசிரியரான சோழன் நல்லுருத்திரனும் ஒருவர். இப்பகுதியில் சங்கவிலக்கியங்களில் வேறெங்குமே இடம்பெறாத ஏறுதழுவல் பகுதி குறிப்பிடத்தகுந்தது. பிற கலித்தொகைப்பிரிவினின்னும் மிகக்குறைந்த பாடல்களாக இப்பிரிவில் பதினேழு பாடல்கள் அமைந்திருப்பினும் ஒவ்வொரு பாடலும் மிகுதியான அடிகளைக்கொண்டவை. வீரத்தின் விளைநிலமாய் சங்கத்தமிழர் விளங்கினர் என்பதை, புறப்பாடல்கள் மட்டுமன்றி அகப்பாடல்களும் சிறப்புறக்காட்டுகின்றன என்பதற்கு இம்முல்லைக்கலியே சான்று. கலித்தொகை காலத்தால் பழமை வாய்ந்ததாக இருப்பினும் புதுக்கவிதை போன்று.
ஏறுதழுவும் காட்சியை,

எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்புக்
கலங்கிணர் பலர் (கலி.102:21-24)

என்று படம்பிடிக்கிறது. “ஏறு தழுவலில் வெற்றிபெறாத ஆடவரை ஆயர்மகள் புல்லாள்” என்பது பெண்டிரும் வீராங்கணைகளாக விளங்கியமைக்குச் சான்றாகும்.

தாயின் நெஞ்சம் தோழியாக….:
ஏற்றிணை வெற்றிகொள்ளும் ஆயனை உள்ளத்தில் ஏற்றிக்கொள்ளுகின்றாள் ஆயர்மகளொருத்தி. ஆயன் சூடியிருந்த கண்ணியைக்கொம்பிலே ஏந்தி வீசியது ஏறு. அது ஆயர் மகளின் கூந்தலிலே வந்து விழுந்தது. வீழ்ந்த கண்ணியைத்தலையிலே சூடிக்கொண்ட அவள், தான்சுற்றிக்கொள்ள ஏற்றகொழுகொம்பாக அவனை ஏற்றுக்கொண்டாள். இச்செயல்கண்டு தாய் கோபம் கொள்வாளோ என்று ஏங்கிய தலைவிக்குத் தோழி,

ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின்
நின்வெய்யனவனாயின் அவன்வெய்ய நீயாயின்
நின்னைநோ தக்கதோ இல்லைமன்

என்று கூற, அது கேட்ட தலைவி,

…………. நின்நெஞ்சம்
அன்னை நெஞ்சாகப் பெறின் (கலி.107:20-23)

என்று வேண்டுகிறாள். ஐப்பான் நாடு அளவிலே சிறியதாக இருப்பினும் அங்கு வாழும் மக்களின் மனமே விரிந்து பரந்தது என்பார்கள். காரணம் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் முன், முதலாளியாக இருந்து இது நம்முடைய தொழிலகமாயின் பணியாளர் கேட்கும் உரிமையைத்தருவோமா என்று எண்ணிச்செயல்படுவர். தொழிலதிபராயின், இத்தொழிலகத்தில் நாம் தொழிலாளியாக இருந்தால் இப்போராட்டத்தைச் செய்வோமா என்று என்று எண்ணிச் செயல்படுவார்களாம். அதனால் போராட்டமே நடைபெறாது; நடைபெற்றால் அது நடைபெற வேண்டிய ஒன்றாகவிருக்கும் என்பார்கள். காரணம் தாம் எதிரியின் நிலையில் இருந்து எண்ணிச் செயல்படுவதே காரணம். அது போன்று முல்லைக்கலியில் காதல் வயப்பட்ட தலைவிக்கு உடன்பாடான பதிலை அளிக்கும் தோழியின் நெஞ்சு, தாயின் நெஞ்சாக ஆகவேண்டும் என்னும் எதிர்பார்ப்பில் நிகழ்த்தப்பெறும் உரையாடல் எண்ணி வியக்கத்தக்கது. இக்காட்சிகளை அடிக்கருத்துக்கேற்ப நயமாகவும் வலுவாகவும் ஆசிரியர்கள் அமைத்திருக்கும் திறம் பாராட்டத்தக்கது. இதுபோன்று கருத்திற்கேற்ப காட்சிச் சிறப்புடைய பாடல்கள் பல உள்ளன.

நெய்தற்கலி:
பாலைக்கலியை அடுத்து மிகுதியான உவமைகள் கொண்ட பகுதியாக நெய்தற்கலி விளங்குகின்றது. காட்சியைக்கற்போர் மனத்தில் எளிதின் உணர்த்த இவ்வுவமைகள் பெரிதும் பயன்படுகின்றன. பிரிவிடை ஆற்றாது மாலைப் பொழுது கண்டு வருந்திய தலைவி அவன் வரவு கண்டு மகிழும் காட்சியைக் கண்டோர் கூறுவதாகக் கலித்தொகையின் நூற்றியிருபதாம் பாடல் அமைந்துள்ளது. மருட்சி மெய்ப்பாடு மிகுந்துள்ள இப்பாடலில் “வெந்ததோர் புண்ணில் வேல்கொண்டு நுழைப்பான் போல்” காதல் நோய் கொண்டவரை கலக்கமுறவந்த மாலையோ என்று வினவுதல் போன்று, ஏழு உவமைகள் வந்து சொல்லவந்த கருத்தினை, பசுமரத்தாணி போல் நெஞ்சில் காட்சிகள் வழி பதிய வைக்கின்றன. சங்க காலத்திற்குப் பிறகு தோன்றிய காப்பியங்களுக்கு உவமையளவில் கொடைகள் பல நல்கியமையும் புலனாகும். வரைவுடம்படாத்தலைவனுக்கு அறிவுரை கூறி வரைவுகடாயவிதத்தில் அமைந்திருக்கும் பாடலின் உள்ளுறைக் கருத்தும் வாழ்வியலின் விளக்கமும் எக்காலத்தும் எவரும் ஏற்றுப் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் பெட்டகமாகும்.

ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை உள்ளிட்ட ஒன்பது குணங்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேண்டும் என்னும் உயரிய நோக்கில் அவற்றிற்கு சொற்கட்டுடன் தரப்பட்டிருக்கும் வரையறை மனங்கொள்ளத்தக்கது. இப்பாடலில் இடம் பெறும்,

நீர்மலி கரகம்போல் பழந்தூங்கு முடத்தாழை
……
தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைதல்(கலி. 133:4, 17)

உவமைகள் அடிக்கருத்தின் உள்ளுறையாய் அமைந்து காட்சிச்சிறப்புடன் கருத்தைக்கவருகின்றன. “ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்” தொடங்கி “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்பது வரை தலைவனுக்கு உரைக்கப்படும் அறிவுரை மனித இன உயர்விற்கு வரையறுக்கப்பட்ட வாழ்வியல் சிந்தனைகளாகும்.

இவ்வகையில் கருத்தைக்கற்பவர் நெஞ்சில் பதிய வைப்பதற்கேற்ற காட்சியை அமைத்ததில் கலித்தொகை முதன்மையான இடம்பெறுகின்றது. அதனாற்றான் இது கற்றோர் ஏத்தும் கலியாகி மற்றவரையும் கற்கச்செய்யும் மாசற்ற படைப்பாகிறது. இதனை ஆய்ந்ததன் வழிப் பின்வரும் முடிவுகள் பெறப்படுகின்றன:

• உலக வழக்கு, நாடக வழக்குடன் புனைந்துரையும் கலந்த புலனெறி வழக்கிலும் காட்சிகள் அமைந்து வெளிப்படுத்த வேண்டிய கருத்துகளைத் தெற்றெனப் புலப்படுத்தல்.

• நிலம், திணை முறைவைப்பில் வெளிப்படுத்தும் கருத்தின் இன்றியமையாமைக்கேற்ப மாற்றம்.

• ஓராடைக்குள் இருப்பதால் மட்டுமே ஒற்றுமை என்பதைவிட இருவரின் ஒருமித்த எண்ணத்தில் ஒருங்கிருத்தலில் நடைபெறும் வாழ்க்கையே வாழ்க்கை என அறிவுறுத்தல்.

• பிறறறியா தம்முளே புணர்ந்த புணர்ச்சியாம் காதல் மணத்தைத்தாமறி புணர்ச்சி என்று பெயர் சூட்டியதுடன் அறவழிகளில் அதுவுமொன்று எனல்.

• கருத்துப்புலப்பாட்டில் ஓரங்க நாடகவமைப்பில் அமைந்த பல பாடல் காட்சிகள் சிறப்பிடம் பெறல்.

• செதுக்கிச் சேர்ப்பது போன்று சொற்செட்டுடன் அமைந்துள்ள சொல்லாட்சிகள் பல கருத்துப் புலப்பாட்டில் வெற்றிபெற்றுள்ளமை.

• உவமைகளுடன் வெளிப்படுத்தும் காட்சிகள் உள்ளம் கொள்ளை கொள்ளும் வகையில் பசுமரத்தாணியாய் பதியவைப்பதில் முதன்மை பெறல்.

• ஈன்று புறந்தந்த தாய்க்குப் பிள்ளையைச் சான்றோனாக்குவதிலும் பங்குள்ளமை வெளிப்படல்.

• தமிழிலக்கியங்களில் தனித்ததொரு நிலையில் ஏறுதழுவும் காட்சியைப் படம்பிடித்தல், வெளிப்படுத்தலில் பழமைக்குப் பழமையாய், பாவகையில் கலிப்பாவென்றாலும் எளிய, புதிய சொல்லாட்சியையும் புதுக்கவிதை போன்று பயன்படுத்தியமை.

• ஒருவர் தாமாக இருந்து எண்ணுதல் மட்டுமன்றி, பிறராக இருந்து எண்ணும் சூழலும் இடம் பெற்றுள்ளமை.

• உள்ளுறை, இறைச்சி முறையில் அடிக்கருத்து காட்சி அடிப்படையில் சொற்செட்டு, தத்துவ வரையறைகளைத் தந்து வாழ்வியல் பெட்டகமாக அமைந்துள்ளமை.

• இவையும் இவை போன்ற பிறவும் இக்கட்டுரையின் வாயிலாகப் பெறப்படுகின்றன.

 

 

குறிப்புகள்:-
1.ந.மு.வேங்கடசாமி நாட்டார் (க.ஆ) கலித்தொகை மாண்புகள், கலித்தொகைச் சொற்பொழிவுகள் (சென்னை : கழகம், ம. பதி.2001).

2.நா. ஆறுமுகம், கலித்தொகை : ஓர் ஆய்வு, (சென்னை : பாரிநிலையம், 1985), ப. 21.

3.கே. ஞானாம்பாள் அம்மையார் (க.ஆ), ஷபாலைக்கலி| கலித்தொகைச் சொற்பொழிவுகள், ப.93.

4.தெசிணி, கலித்தொகையும் முத்தொள்ளாயிரமும்: ஒரு திறனாய்வு (சென்னை: அருணா விஜயநிலையம், 2002) பக்.20-73.

 

 

 

 

 

முனைவர் துரை. குணசேகரன்
தலைவர், தமிழாய்வுத்துறை
ஏ.வி.சி.கல்லூரி (தன்னாட்சி)
மயிலாடுதுறை – 609305.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கலித்தொகை: கருத்தும் காட்சியும்

  1. அய்யா, துரை.குணசேகரனார் அவர்களின் கலித்தொகை:கருத்தும் காட்சியும் சங்கத்தமிழர் மாண்பை புலப்படுத்தியும் தொல்காப்பியர் வைப்புமுறையிலிருந்து வேறுபட்ட தன்மையையும் எடுத்துக்காட்டியதையும் காட்சியின் அடர்த்தியுணர்த்தும் வேறொரு தன்மையையும் சுட்டிக்காட்டிய விதம் மிக அழகுபொருந்தியதாக உள்ளது. அய்யா அவர்களுக்கு நன்றி….
    அன்புடன்
    சு.விமல்ராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *