மாதா அமிர்தானந்த மயி 

ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சரிதம் – பகுதி: ஒன்பது 

மீ.விசுவநாதன்

கிருஷ்ண பாவம்

பாகவதக் கதாமணி கண்ணனை
எண்ணி எண்ணியே
சுதாமணி சத்குருவாய் உயர்ந்தாள்!
உலகோர் இதுபற்றி
உரைக்கவேண்டிப் பணிந்தார்!

“சிறுவயது முதலே
சிந்தித்தேன் கண்ணனை
மறுபொழுது அறியாமல்
மனமொன்றிப் போனதால்
சந்தித்தேன் அந்தக்
கார்முகில் வண்ணனை!

அப்பொழுது முதலே இந்தக்
கார்முகில் நிறப்பெண்ணை
ஊக்கினான்பக்திக்கிரை
ஆக்கினான்! உலகோர்க்கு
அவளாலே உண்டாக்கினான்
ஆன்மிகப் பெரும்பண்ணை!

விடாது நாமும் நினைத்தால்
விடாது இறையின் அன்பு!
கெடாது வாழ்வில் பண்பு!”
என்று சொன்னாள்
சுதாமணி என்ற
இறைவாக்குப் பொன்னாள்!

1975ம் ஆண்டு செப்டம்பர் மாதம்
வீட்டில் உள்ள பசுக்களுக்குப்
புல்லெடுக்கச் சென்றாள்
இந்த
நல்லொழுக்கப் பெண்ணாள்!

தலையில் புல்லுக்கட்டும்
தலைக்குள்ளே கண்ணனின்
புகழ்பாடும்
சொல்லுக்கட்டும் கொண்ட பண்ணாள்!
வரும் வழியில்
ஒருவீட்டில் பாகவதம்
பாராயணம் செய்யும் ஒலிகேட்டாள்!
நாராயணன் கண்ணணின்
பிறப்பின் நேர
தாய் தேவகியின் வலிகேட்டாள்!

தன்னை மறந்து
தன்னிலையை பலிபோட்டாள்!
அந்த வீட்டில் நுழைந்து
பாகவத மழையில் நின்றாள்!
கண்ணனின் மகிமை
கேட்கக் கேட்கக்
கண்கள் குளமானாள்!
கண்ணன் குலமானாள்!

அவனே ஆனாள் அவள்!
அது அந்த இறையின்
அன்பில் தெளித்த துகள்!

அவள்
அகத்தின் ஒளியும்
முகத்தின் அழகும்
கண்ட
அங்கிருக்கும்
அனைவர் மனத்திலும்
உள்ள அழுக்கெலாம் ஒளியும்!

அது
கிருஷ்ணபாவ நேரம்
அவளை அந்த நேரம்
வணங்கினால்
வந்த பாபம் போகும்!

ஊரே அந்த வீட்டில்
உடன்கூடி
நேரே பார்த்தது!
ஆத்திகம் நாத்திகம்
அதிசயித்து வேர்த்தது!

“சும்மா” என்றது நாத்திகம்!
“அம்மா” என்றது ஆத்திகம்!

சித்து செய்தால் நம்புவோம்
இல்லையேல்
பித்தென்று தள்ளுவோம்
என்றனர் நாத்திகர்!
எங்கள் ஆன்மீகச்
சொத்தென்று கொள்ளுவோம்
என்றனர் ஆத்திகர்!

அடுத்த மாதம் இதே நாளில்
பார்க்கலாம் வாருங்கள்
என்று சுதாமணி
தொடுத்த பாணத்தை
எடுத்துச் சென்றனர்
அங்கிருந்த இரண்டு மனத்தினர்!

தன்னிலை திரும்பிட
தன்வீடு புறப்பட்டாள்!
அவள்
முன்னிலை வந்து
வணங்கினர் ஊர்ப்பட்டார்!

(நம்மோடு இன்னும் தொடர்வாள் அம்மா)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *