க. பாலசுப்பிரமணியன்

குழந்தையின் மனநலத்தில் ஒலியின் தாக்கங்கள்

education

 ஒலி அதிர்வுகள் எவ்வாறு ஒரு குழந்தையின் மன நிலையையும் மன நலத்தையும் பாதிக்கின்றன என்பதைப் பற்றி நாம் பார்த்தோம். சில நேரங்களில் சில அதிர்வுகள் ஒரு குழந்தையுன் மனத்தில் பயத்தையோ அல்லது வேறு விதமான பாதுகாப்பின்மையையோ ஏற்படுத்தக் கூடும். உதாரணமாக ஒரு உலோகத் தட்டு கீழே விழும் பொழுதோ அல்லது ஒரு கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கும் பொழுதோ அல்லது ஒரு சைரனின்  ஒலி குறிக்கிடும் பொழுதோ ஏற்படும் ஒலி அதிர்வுகள் குழந்தையின் கவனத்தை திடீரெனறு ஈர்ப்பது மட்டுமின்றி ஒருவிதமான அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தலாம்.

இந்த மாதிரி சூழ்நிலைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி குழந்தைகளை இதை ஏற்றுக்கொள்ள தகுந்த நிலைக்கு தயார் செய்வதில் பெற்றோருக்கு மிகப் பெரிய பங்குண்டு.

சில நேரங்களில் வீடுகளில் ஏற்படும் தகராறுகளின் போது குழந்தைகளை அருகிலோ அல்லது மடியிலோ வைத்துக் கொண்டு பெற்றோர்கள்  அலறவோ, கத்தவோ அல்லது வெறுப்பும் நெருப்பும் கக்கும் வார்த்தைகளைக்  கூறுதல் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டிய செயல். இந்தச் சூழ்நிலைகள் குழந்தையின் மன உணர்வுகளையும்   மனத்தின் சமத்துவ நிலையையும் பாதிக்கின்றன.

அடிக்கடி இப்படிப்பட்ட சூழ்நிலைகளைப் பார்த்து வளரும் குழந்தைகளின் பேச்சுத் திறன்களில் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி பேசுவதில் தயக்கம், பொறுமையின்மை மற்றும் தான் பார்த்த பேச்சு வழிகளைப்போலவே பேசுகின்ற திறன்களையும் குழந்தைகள் பெறுவதாகக் கூறப்படுகின்றது.  பொதுவாக குழந்தைகளை முன்னிறுத்தி பெற்றோர்கள் வாக்குவாதங்களிலும் உணர்வு மிஞ்சிய சொல்லாடல்களையும் தவிர்த்தல் அவசியம்.

இதே போன்ற சூழ்நிலைகளை உருவாக்கும் தொலைகாட்சிப் படங்கள், உரையாடல்கள் மற்றும் நிகழ்சிகள் குழந்தைகளின் மனதை மிகவும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மனோதத்துவ வல்லுனர்கள் சொல்லுகின்றனர். மேலும் தொலைக்கட்சிகளில் வரும் சண்டைகள், கோபக்கனல்களை வெளிப்படுத்தும் காட்சிகள், வன்மையைத் தூண்டும் காட்சிகளால் குழந்தைகளின் மனத்தில் ஏற்படும் தாக்கத்தைப் பற்றிய அளவற்ற ஆராய்ச்சிகள் இவைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி விவரித்துள்ளன. இதை உடன் ஏற்படும் தாக்கங்கள் என்றும் நீண்ட காலத்தில் ஏற்படும் தாக்கங்கள் என்றும் பிரித்து விளக்கியுள்ளனர்.

பேச்சுத் திறன்களைப் பற்றியும் அவைகளால் மூலையிலும் மனந்திலும் ஏற்படும் தாக்கத்தைப் பற்றியும் ஆல்பர்ட் மெஹ்ராபியன் செய்த ஆராய்ச்சியில் வெறும் 7 விழுக்காடுகள் வார்த்தை தருகின்ற பொருள்களாலும், 38 விழுக்காடுகள் குரல், உணர்வுகள், குரலின் ஏற்ற தாழ்வுகள் ஆகியவற்றாலும், மீதி 55 விழுக்காடுகள் அந்த நேரத்தில் ஒருவர் காட்டும் உடல் மொழிகளாலும் அறியப்படுகின்றன என்று கூறுகின்றார். ஆகவே ஒரு குழந்தை ஒலிகளைக் கேட்கும் பொழுது அதைச் சொல்பவரின் குரல் ஏற்ற தாழ்வுகள் மற்றும் நோக்கங்களையும் அவருடைய உடல் மொழியையும் மிகுந்த ஆர்வத்தோடும் கவனத்தோடும் நோக்குகின்றது.

உதாரணமாக 5 முதல் 7 ஆண்டு வயதுள்ள சிறார்கள் ஒரு திரைப்படத்தில் வருகின்ற சண்டைக்காட்சிகளைப் பார்க்கும் பொழுது தாங்கள் அமர்ந்துள்ள இடத்திலிருந்து எழுவதும் அருகிலுள்ள பொருள்களைக் கைகளால் குத்துவதும் அல்லது ஒரு காதல் காட்சியைப் பார்க்கும் பொழுது வெட்குவதும் அடிக்கடிப் பார்க்கபடும் ஒரு நிகழ்வு, ஆகவே ஒலியும் ஒளியும் நம்முடைய மனத்திரையில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

எவ்வாறு இந்தத் திறன்களை ஆக்கபூர்வமாக மனநலத்தின் வளர்ச்சிக்கும் அறிதல் மற்றும் கற்றல் ஆகிய திறன்களை மேன்மைப் படுத்துவதற்கும் நல்ல ஒரு உபகரணமாக பயன்படுத்தலாம் என்பதை நாம் பின் வரும் தொடர்களில் பார்ப்போம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *