க. பாலசுப்பிரமணியன்

dc77a786-9d2c-47a6-9e0e-192df1a79fbb

பல்லாண்டு நல்லோர்தம் மனமாண்ட மணிவண்ணா !

நல்லாண்டு எல்லோர்க்கும் அருள்வாயே நாராயணா !

நலமான மனதோடும் வலிவான உடலோடும்

நூறாண்டு வாழ்ந்திடவே வரம் தருவாய் வைகுந்தா !

 

திருவடி பெருவடி வைகுண்ட விண்வழி

ஒருவடி எடுத்தவன் உலகையே அளந்து

மறுவடி தூக்கி விண்ணையும் அளந்து

ஒருவடி வைத்திட ஒருவிரல் தூக்கினான் !

 

வலக்கை நீட்டினான் தானம் பெற்றிட

இடக்கை விரலால் இடமும் கேட்டே

தலைமேல் காலைத் தூக்கியே தாளாளன்

தருமம் காத்திடத் தரணியை அளந்தான் !

 

அரக்கனின் ஆணவம் அழித்திட வந்தவன்

அரங்கத்தில் அன்று வாமனின் வேடம் !

அரியவன் சீரடி அகந்தையில் துறந்தவன்

அடியினில் தலையை அறிந்தே வைத்தான் !

 

மூவடி தூக்கிய வாமன-விக்கிரமன் கால்வலி

முற்றிலும் மறைந்திட மார்பினில் வைத்தாள்

மாதவன் இதயத்தில் மலர்ந்திடும் மங்கை

மன்னவன் தன்னை இதயத்தில் அணைத்தாள் !

 

குறளாக வந்தவன் குறையின்றி நின்றான்

குனிந்தவன் நெஞ்சில் கனிவுடன் அமர்ந்தான்

திருத்தாள் எடுத்தே தலையினில் வைத்திடத்

திருவோணம் தன்னில் மாபலிக்கும் திருவிழா !

 

கனவென்பார் கண்ணா! நீ வெறும் கற்சிலையென்பார்

கற்பனையில் கனிந்து வந்த நல்லதோர் கபடமென்பார்

மன்னுயிரை மயக்கிவிடும் மாயையின் உருவென்பார்

மனக்கோயிலில் உருவான அருவான என் அற்புதமே !

 

பகல்பத்து இராப்பத்து பலமுறை பார்த்துவிட்டேன்

பல்லக்கில் உனைவைத்துத் தூக்கிவிட்டேன் !

வில்லங்கம் இல்லாத வாழ்வென்றும் வேண்டும்

வில்லோனே குழலோனே வினைகள் தீர்ப்பாய் !

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *