– முனைவர் சீ. இளையராஜா.

ஆங்கில ஆண்டின் நிறைவு மாதமாக விளங்கக்கூடிய டிசம்பர் மாதத்திற்கு நிறைய சிறப்புகள் காணக்கிடைக்கின்றன. அவற்றில் மிகச்சிறப்பான ஒன்றாக அனைவராலும் கருதப்பெறுவது, யேசு கிறிஸ்துவின் பிறப்பு. இந்த மாதத்தில்தான் பாரதியாரும் பிறந்தார். அவர், தன்னை சக்திதாசனாகக் கருதிக் கொண்ட போதிலும் அவர் ஒருபோதும் தன்னைப் பிற மதத்துவேசியாகக் காட்டி வாழாத மகாகவியாகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியுள்ளார். சமயச்சார்பின்றி ஒரு சமய நல்லிணக்கவாதியாக விளங்கியுள்ளார். அதை அவரின் பல்வேறு பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.

பாரதியார் கவிதைகள் என்னும் பெருந்தொகுதியில் விநாயகர் நான்மணி மாலை முதலாகவும், தோத்திரப் பாடல்கள் இரண்டாவதாகவும், வேதந்தப் பாடல்கள் மூன்றாவதாகவும் காணப்படுகின்றன. இம்மூன்றாம் பகுதியாக உள்ள வேதாந்தப் பாடல்களில் முப்பது தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. இவை யாவும் 1930ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பெற்றன. இதிலுள்ள சில பாடல்கள் 1910ஆம் ஆண்டில் வெளிவந்தவையாகும். இம்முப்பது கவிதைகளில் ஒன்பதாவது கவிதையாகக் காணக்கிடைப்பதுதான் இந்த யேசு கிறிஸ்து என்னும் கவிதையாகும். இதில் யேசுவைப் பற்றிப் பாரதியார் குறிப்பிடும் செய்திகள் பற்றி இக்கட்டுரை ஆய்கிறது.

மகாகவி பாரதியார் தம்முடைய புதிய ஆத்திசூடியின் காப்புப் பாடலைப் பரம்பொருள் வாழ்த்து என்னுந் தலைப்பிட்டுப் பாடியுள்ளார். அதில், யேசுவைப் பற்றி, “ஏசுவின் தந்தை” என்ற வரியைக் குறிப்பிடுகின்றார். இதற்கு யேசு ஓர் இறைத்தூதர். அவரை இயக்கும் ஒரு பிதாவே கடவுளாகக் கொள்ளப்படுகின்றார் என்று பாரதி குறிப்பிடுகின்றார். அதாவது, யேசு இறைத்தூதர் என்ற கருத்து வெளிப்படுகிறது. காணப்பெறும் யேசு கிறிஸ்து என்னும் கவிதைக்கு முதலில் ஒரு முன்னுரை போன்று ஒரு பகுதி, ”தீய ஒழுக்கத்தில் நின்ற மேரி மக்தலேன் என்பாள் யேசு கிறிஸ்துவை அடைந்து, தனது ஒழுக்கத்திற்காகப் பரிதபித்து, தன்னைக் கடையேற்ற வேண்டுமென்று வேண்டினாள். யேசுவும் அவளுக்கு அருள் புரிந்தார். யேசு புதைக்கப்பட்ட மூன்றாம்நாள் அவர் உடம்புடன் எழுந்து விண்ணேகியதை மேரி மக்தலேன் கண்ணால் கண்டு பிறருக்கறிவித்ததாய் கிறிஸ்து புராணம் கூறுகிறது. இக்கதையையே இங்கு விளக்கியிருக்கிறது” என்று காணக்கிடைக்கிறது. இதில், மேரிமக்தலேன் என்ற பெண் தீய ஒழுக்கத்தில் நின்று, பின்பு மனம் வருந்தி நின்ற அவளுக்கு அருள் வழங்கி, யாருக்கும் கிடைக்காத அரியதொரு வாய்ப்பான யேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சியைக் காணும் அருட்பெரும் பேற்றைப் பெற்ற ஒரே உயர் பெண்ணாக விளங்கியதை இப்பத்தி கூறுகிறது. இச்செய்தியை,

”ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்து யிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்;
நேச மாமரி யாமக்த லேநா
நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்.”

என்ற தம் கவிதை வரிகளால் குறிப்பிடுகின்றார். தீய ஒழுக்கத்திலிருந்து மீண்ட ஒருவரை மேன்மைப்படுத்த வேண்டியது அனைவரின் கடமையாகும். அதன் பொருட்டு மரியா மக்த்லேநா என்ற அவர்தம் பெயரை நேசமா என்ற அடைமொழியை இணைத்து நேசமா மரியா மக்தலேநா என்று குறிப்பிட்டு உயர்த்தியுள்ளார் பாரதியார்.

jesus4

உலகத்தார் அனைவரையும் அழைத்து,

”தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமைநித்தங் காப்பார்
நமகந் தையை நாம்கொன்று விட்டால்”

என்ற வரிகளில் மனிதர்கள் தம்மிடம் உள்ள அகந்தைச் செயல்களை அகற்றி அழித்தொழித்தால் தேவர் அதாவது, யேசு கிறிஸ்து மனித்த மனத்துள் நுழைந்து, மனிதர்கள் வாழ்வில் துன்பமின்றிப் பேரின்பம் எய்தலாம் என்ற வழிகாட்டுதலை வழங்குகிறார் மகாகவி.

”அன்பு காண்மரி யாமக்த லேநா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே
போற்று வாள்அந்த நல்லுயிர் தன்னை
அன்பெ னும்மரி யாமக்த லேநா
ஆஹ!சாலப் பெருங்களி யிஃதே.”

என்ற கவிதை வரிகளில் தீய ஒழுக்கத்திலிருந்த மரியா மக்தலேநா மனந்திருந்தி யேசு கிறிஸ்துவை அடைந்து, முன்பு தீய செயல்கள் யாவற்றிற்கும் வருந்தித் தம்முடைய தீய எண்ணங்களை அழித்ததின் பயனாக அவள் விளங்கியதால்தான் அவளுக்கு இவ்வுலகில் யாருக்கும் கிடைக்காததொரு அரும்பெரும் பேறான யேசு உயிர்த்தெழுந்து விண் சென்றதைக் காணும் பாக்கியம் அவளுக்குக் கிட்டியது என்றும், யேசு கிறிஸ்துவின் முகம் பொன்பொலிந்த முகமாக விளங்கியது என்றும் பாரதியார் கூறுகின்றார். மேலும், யேசுவை நல்லுயிர் என்று சிறப்புற இவ்வுலகத்திற்கு எடுத்தியம்புகின்றார். மரியா மக்தலேநா அன்புக்கு நிகரானவள் என்று கவிஞர் வாழ்த்துகின்றார். அவளுக்குத் தேவன் யேசு வழங்கிய பேரருள் அவர் அப்போது மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்கு ஏகியதைக் காணும் பேரின்பமே அதுவாகும்.

”உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்
வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும்.”

என்ற வரிகளில் உண்மை என்ற சிலுவையில் உணர்வினை ஆணி என்னுந் தவங் கொண்டு அடித்தால் மனிதர்கள் அனைவரும் பயன் பெறும் வித்ததில் வாழ்க்கை அமையும். அதனை ஈகைக் குணப் பேருயிராக விளங்கும் யேசு கிறிஸ்து வழங்குவார். இதனை முதன்முதலில் மரியா மக்தலேநா என்ற பெண்ணுக்கு வழங்கிப் பெண்மையைப் போற்றியுள்ளார். இதிலிருந்து, இப்புவியுலகில் இறைத்தூதராக விளங்கிய யேசு பெண்களுக்கும் அவர்களின் செயல்களான நல்லறத்தையும் முன்மொழிகின்றார். இதைப் போன்று தம்முடைய பல்வேறு செயல்களாலும் உலக உயிர்கள் யாவற்றிற்கும் பேரின்பத்தைப் பயக்கும் நுண்மைப் பொருளாக யேசு கிறிஸ்து உள்ளார் என்று பாரதியார் குறிப்பிடுகின்றார்.

(டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சமர்ப்பணம்: யேசு கிறிஸ்துவுக்கு)

முனைவர் சீ.இளையராஜா
உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
அ.வ.அ. கல்லூரி (தன்.)
மன்னன்பந்தல் – 609 305.
மின்னஞ்சல்: ilayaraja20@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *