கோட்பாட்டியல் நோக்கில் புறநானூறு

1

— முனைவர் துரை. குணசேகரன்.

புறநானூறு

1.0 அறிமுகம்:-
குறிக்கோள்கள் கொண்டது இலக்கியம். குறிக்கோளில்லா வாழ்வு சிறக்காது, சமயவாழ்வில் சாதனை படைத்த நாயன்மார் ஒருவர் ‘குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்பதிலிருந்து இதன் இன்றியமையாமை புலனாகும். சங்கத்தமிழர் வாழ்வியல் பெட்டகமாக விளங்கும் படைப்புகளுள் புறநானூறு குறிப்பிடத்தக்கது. இதனை ஆய்வதன் வழி அக்காலமக்களின் கொள்கைகள் விளங்கும். ஒருமித்த கொள்கைகளின் வழி புறநானூறு புலப்படுத்தும் கோட்பாடுகளை ஆய்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

1.1 புறநானூற்றுப் பொருண்மை:-
சங்ககால எட்டுத்தொகை நூல்களில் புறநூல்கள் இரண்டில் ஒன்று புறநானூறு. இந்நூலை ஆய்வதன் வழி மன்னர்கள், புலவர்கள், பொதுமக்கள் என்னும் முத்திறத்தார் வாழ்வியலை நன்குணரலாம். நாணயத்தின் இருபக்கங்கள் போன்று சங்க இலக்கியங்கள் அகம், புறம் என்னும் இரு கூறுகளைக்கொண்டவை. இவற்றுள் புறநானூறு சங்ககாலமக்களின் புறவாழ்வு குறித்தது. அகமல்லாத அனைத்தும் புறம் என்று பொதுவாகக்குறிப்பிட்டாலும் அக்காலமக்களின் வீரம், கொடை, விருந்தோம்பல், உயிரிறக்கம், உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கியது இத்துறை.

1.2 அரசியலின் மேன்மை:-
மன்னராட்சிக்காலமாயினும் மக்களாட்சிக்காலமாயினும் அதிகாரம் படைத்ததாக விளங்குவது அரசியலாகும். அன்று மன்னர்கள் சார்ந்ததாக விளங்கியது; இன்று அமைச்சர்கள் சார்ந்ததாக விளங்குகிறது. புறநானூறு காலத்து அரசியலில் பெருவேந்தர்கள் தொடங்கி, குறுநிலமன்னர்கள்வரை ஆட்சி செய்துள்ளமை புலனாகும்.

2.1 மன்னரியல்:-
முடியாட்சி மன்னர்களேயாயினும் குடிமக்களை உடலாகக்கொண்டவர்களாகத் தான் பெரும்பாலான மன்னர்கள் விளங்கியுள்ளனர். ‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே’ என்று அவர்களை உயிராகக்கருதிய மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் உயர்வையே தம்முடைய உயர்வாகக்கருதி ஆட்சிபுரிந்தனர் அக்கால மன்னர்கள்.

2.1.1 வாரிவழங்கிய வள்ளல்கள்:-
தொழிற்கூடங்கள் இல்லாத காலம். வறுமையுற்ற மக்களின் வாழ்வில் ஒளியூட்ட மன்னர்கள் வள்ளல்களாக விளங்கியிருக்கின்றனர். மூவேழு வள்ளல்களில் கடையேழு வள்ளல்களின் பட்டியலை, புறம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

பரம்பின் கோமான் பாரியும்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்
காரிவளர்ந்து பேரமர்க் கடந்த
மாரிஈகை மறப்போர் மலையனும்
கூவிளங் கண்ணி கொடும்பூண் எழினியும்
பெருங்கடல் நாடன் பேகனும்
மோசி பாடிய ஆயும்
தள்ளாது ஈயும் தகைசால் வன்மை
கொள்ளாத ஓட்டிய நள்ளியும்(புறம்.158)

2.1.2 ஆன்மநேயம்:-
கடையேழு வள்ளல்களில் பாரி, பேகன் இவர்களின் கொடைத்திறம் குறித்து ஐயுறுவோரும் உண்டு. முல்லைக்கொடிக்கு தேரைஈந்தது, மகிழ்வில்ஆடிய மயில் வருந்துவதாக எண்ணிப்போர்வை ஈந்தது அறிவின்பாற்பட்டவை அல்ல என்பது அவர்களின் வாதம்.

உடுக்கை இழந்தவரின் கைபோல உறுதுயருற்றது என்று கருதியவுடனே அத்துன்பத்தில் பங்குகொண்டு செயல்படுவது: அத்துன்பத்தைத் தாம் ஏற்றுக் கொண்டு அதனை அதனின்று விடுவிப்பது கொடை மடத்தின்பாற்படும். அவ்வகையில் தாம் ஊர்ந்துவந்த மாணிக்கத்தேரினை முல்லைக்கொடி படர ஈந்துவிட்டு வந்த பாரியும், தாம் போர்த்தியிருந்த போர்வையை மயிலுக்கு ஈந்த பேகனும் இன்றுவரை பேசப்படுகின்றனர். இவற்றில் அவர்களின் ஈரப்பண்பு புலனாகும். இவை மனிதநேயம் தாண்டி ஆன்மநேயத்தின் பாற்பட்டவை.

2.1.3 அதியனும் குமணனும்:-
நெடுநாள் வாழ்வைத்தரவல்ல, அரிதின் முயன்று பெற்ற நெல்லிக்கணிணியைத் தாம் உண்ணாமலும் அதன் தன்மையை வெளிப்படுத்தாமலும் ஔவைக்கு,

ஆதல் நின்னகத்து அடக்கிச்சாதல்
நீங்க எமக்கு ஈத்தனையே(புறம்.19)

என்று அதியன் அளித்த நிலையின்வழி தம்மைக்காட்டிலும் தமக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் புலவர்கள் நீண்டநாள் வாழவேண்டும் என்னும் உயரிய தன்மை புலனாகும். அவனை அவர்பாடியது என்று புறத்தால் பெருமைப்பட்டவர்கள் புலவர்கள் அன்றோ.

உயிரைக்கொடுத்தேனும் கொடைத்தன்மையைக் காத்தவன் கண்ணன் என்று பாரதம் பெருமிதப்படுத்தும். அவ்வகையில் கொடைக்காகத் தம்முயிரைத்துச்சமெனக் கருதிய குமணவள்ளலைப்புறம் காட்டும் (165). தம்பிக்கு அஞ்சி, காட்டில்வாழும் குமணவள்ளலை நாடிச்சென்று பாடிய பெருஞ்சித்தினாருக்குத் தன் தலையைக் கொண்டு போய்க்கொடுத்து, பரிசில்பெற்றுச்செல்க என்று உரைத்தான் என்பதை அறிகின்றபொழுது, அக்காலத்து மன்னர்களின் கொடைக்குணம் புலனாகும்.

2.1.4 பயன்கருதாக்கொடை:-
எதையும் பயன்கருதிச்செய்தல் என்பது இன்று சராசரி மனிதர்களின் பண்பு. ஆனால் சங்கத்தமிழ் மன்னர்கள் கொடுத்த கொடை அவ்வாறு பயன்கருதியதன்று. இம்மை, மறுமை குறித்த நம்பிக்கையுள்ள காலத்தில் வாழும் கடையேழு வள்ளல்களில் ஒருவனான ‘ஆய்’ எப்படிப்பட்டவன் என்பதை,

இம்மைச் செய்ததை மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆயலன்.(புறம்.134)

என்று உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடுவது இவண் கருதத்தக்கது.

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனான பிட்டங்கொற்றனின் கொடை குறித்து,

“இன்று செலவினுந் தருமே; சிறுவரை
நின்று செலினுந் தருமே; பின்னும்
முன்னே தந்தனன் என்னாது துன்னி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்
தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப”(புறம்.171)

என்று குறிப்பதன் வழி ஒளவையார் சொன்ன “கொடையும் தயையும் பிறவிக்குணம்” என்பது உறுதியாகின்றது.

2.1.5 வீரத்தின் விளைநிலம்:-
ஆடவர்களை வீரத்தின் அடிப்படையில் ‘மைந்தர்கள்’ என்று அழைப்பது வழக்கம். ஆடவர்கள் மட்டுமன்றிப் பெண்டிரும் செம்மாந்த வீரப்பண்பு மிக்கவர்களாக விளங்கியிருக்கின்றனர். வீரத்தின் மேம்பட்ட நிலையில் மன்னர்கள் வஞ்சினம் கூறி அதன்படி பகைமுடிக்காவிடில் ‘என் மார்பை பொருட்பெண்டிர் தழுவுவதாக’ என்று குறிப்பதன் வழி நாடாளும் மன்னனாயினும் பொருட்பெண்டிர் தழுவலை, பழியாகக் கொள்ளும் ஒழுக்கமேன்மை புலனாகும்.

2.1.6 உயிரா? மானமா?
புறப்பாடல் காலத்து மன்னர்களின் வாழ்வியல் குறித்து ஆராய்கையில், அவர்கள் வீரம் செறிந்தவர்களாக வாழ்ந்தது மட்டுமன்றி, தோல்வி ஏற்படும் பொழுதோ மானத்திற்கு இழுக்கு நேரும்பொழுதோ ‘மயிர் நீப்பின் வாழாக்கவரி மாவாக’ உயிரைப்பரிசாக அளித்து மானம் காத்தனர் என்பது கண்கூடு. சோழன் செங்கணானுக்கும் சேரன் கணைக்காலிரும் பொறைக்கும் கழுமலம் எனுமிடத்தில் நடந்த போரில் சேரன் தோல்வியுற்றான். சோழனால் சிறைபிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான். சிறைப்பட்ட சேரன் தாகம் தணிக்கத்தண்ணீர் காலத்தில் கிடைக்காமையால்,

மதுகையின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் மளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே.(புறம்.74)

என்று கூறி உயிர் துறந்தான். குடிபழிதூற்ற ஆட்சிசெய்தல், புலவர் பாடாமை, இரவலர்க்கு ஈயாமை போன்றவை வேந்தனைக் கீழ்மைப்படுத்தும் செயல் என்று புலவனாகவும் விளங்கிய தலையாலங்கானத்து செருவென்றை பாண்டிய நெடுஞ்செழியன் எண்ணியவை (புறம்.72) இவண் எண்ணத்தக்கது.

2.1.7 போர்நெறி:-
போர் செய்தலைக்கடமையாகக் கொண்ட புறநானூற்று மன்னர்கள் அதனைப் பெரிதும் அறநெறியின்பாற்பட்டே நிகழ்த்தியுள்ளனர். போரினின்றும்

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க் கருங்கட னிருக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை (புறம் 9:1-6)

என்று பாதுகாக்கப்பட வேண்டியவர் குறித்த பட்டியல் இடம் பெறுகிறது. இது குறித்து ஆய்வுரை நல்கும் கு.வெ.பாலசுப்பிரமணியன், “வீரநிலைக்காலப்போர்கள் ஆனிரை, பார்ப்பனர், பெண்டிர், பிணியாளர், மகப்பெறாதவர் என விலக்கி, போர்மறவரோடு மட்டும் போரிடும் நிலை இல்லை. சங்ககாலத் தமிழ்ச்சமூகத்தில் வைதிகசமயம் தம் கோட்பாடுகளைப் படரவிட்டதன் விளைவே ஆனிரை, பார்ப்பனர், உயிர்கட்குத்தீங்கு விளைக்கக்கூடாது என்ற எண்ணமாகும். சமண, பௌத்த நெறிகள் உயிர்க்கொலையை, கடுமையாகக்கண்டித்த சமயங்கள் ஆகும். இவற்றிடமிருந்து இவ்வருளற நெறியைப்பின்பற்றிய வைதிகசமயம் பசுவைத்தெய்வமாகக் கொல்லுதல் கொடிய, தீயவினையாகக் கருதப்பட்டது” என்று குறிப்பிடுகின்றார். மேலும், ஆகோன் மறவர் பசுவை வெட்டி உண்ணும் வழக்க முடையவர்கள் என்பதற்கு அக நானூற்றிலிருந்தும் (309:1-6) சான்று காட்டி நிறுவுகின்றார். (சங்க இலக்கியத்தில் புறப்பொருள், ப.91) இவ்வகையில் சமண சமயத்தின் அறக்கோட்பாடு தமிழர்களின் போர்த்துறையில் ஓர் கோட்பாடாக இடம் பிடித்ததை எடுத்துக்காட்டுகின்றார்.

புறமுதுகிட்டு ஓடுதல் நாணமிருந்த செயல்களில் ஒன்றாகவும் அவ்வாறு ஓடுவோரைத்துரத்திச் சென்று போரிடுதலும் விரும்பத்தகாத தொன்றாகக் கருதப்பட்டது. ஒரு மன்னன் தொண்ணூற்றாறு விழுப்புண்கள் பெற்றதைப் பெருமையாகக் கருதும் நிலையை, புறம் எடுத்துக்காட்டும். கரிகாலனின்வேல் தன்மார்பைப்பதம் பார்த்துவிட்டுப்புறம் போனதற்கு வருந்தி பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததாகப்புறம் குறிப்பிடுவது (65,66) இவண் கருதத்தக்கது.

2.1.8 விருந்தோம்பல்:-
அல்லிலாயினும் விருந்துவரின் உவந்தவர்கள் தமிழர்கள். விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்னும் மொழியைப்பொய்யாக்கும் வகையில் மன்னர்கள் விருந்து போற்றிய தன்மையைப்புறம் எடுத்துரைக்கும்.

ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரோடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் (புறம் 101)

என்று விருந்தளித்த தன்மை போற்றப்படுகிறது.

3.1 புலவரியல்:-
மக்களுக்கும் மன்னர்களுக்கும் பாலமாக விளங்கியவர்கள் புறநானூற்றுக்காலத்து வாழ்ந்த புலவர்கள் என்றால் மிகையன்று. செம்மாந்த வாழ்வு வாழ்ந்த மன்னர்களால் புரக்கப்பெற்ற புலவர்களும் சீரும் சிறப்புமாக வாழ்ந்தனர் என்பதைப் புறப்பாடல்கள் வழி அறிந்துகொள்ளலாம். வறுமையுற்ற காலத்தும் வளமைபெற்ற காலத்தும் செம்மை மாறாத் தன்மையுடன் வாழ்ந்தனர்.

3.2 எல்லாருக்கும் எல்லாம்:-
நீண்டநாள் வறுமையுற்ற நிலையில் குமணனைப் பாடிப்பெற்ற பரிசிலைக் கொண்டுவந்த பெருஞ்சித்திரனார் தம் மனைவியிடம் கொடுத்து,

“நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி”(புறம் 163)

என்று எந்தக்கட்டுப்பாடுமின்றி எல்லாருக்கும் கொடுக்குமாறு கூறும் பண்பு, எண்ணி வியக்கத்தக்கது. இதன்வழி எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்னும் சமத்துவப்பண்பு வெளிப்படும். வள்ளுவர் கூட,

நன்றாற்ற ளுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை(குறள் 469)

என்று கட்டுப்பாடு விதித்திருக்க, புறநானூற்றுப் புலவர் பெருஞ்சித்திரனாரின் பண்பு ‘வறுமையுற்ற காலத்து எவரும் உதவமுன்வராத நிலையிலும் வாராதுவந்த பொருளை வைத்துக்கொண்டு நீண்டநாள் வாழ்வோம் என்று எண்ணாமல் எல்லாருக்கும் கொடுக்கச்சொல்லும் பண்பு போற்றத்தகுந்தது.

3.3 பொய்கூறாமை:-
‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே’ என்று கற்பனை கலந்து பாடும் புலவர்கள் குறித்த கருத்து இக்காலத்தில் நிலைத்திருக்க, புறநானூற்றுக் காலப்புலவர்கள் வறுமையைக்காரணம் காட்டி பொய்கூறாதவர்கள் என்பதனை ஆய் அண்டிரனைப்பாடும் மருதனிளநாகனாரின்,

வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்: மெய் கூறுவல்:(புறம் 139)

என்னும் புறப்பாடல் உறுதி செய்யும்.

3.4 அஞ்சாமை:-

அஞ்சிவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவது
அஞ்ச லறிவார் தொழில்(குறள்: 428)

என்பது குறள். இதன்வழி அஞ்சுதல் ஆகாதவற்றிற்கு அச்சம்கூடாது என்பதும் பெறப்படும்.

முடிமன்னர்களிடையே போர் நடக்கும் பொழுதும் அஞ்சாது புலவர்கள் சென்று சந்து செய்வித்தனர் (புறம்.45). பகை காரணமாக அவர்களின் பிள்ளைகளைக் கொல்ல எண்ணியபொழுது அவர்களின் உண்மைப்பண்பினை அஞ்சாது எடுத்துரைத்துக்காத்தனர். (புறம்.46). கொடுவினைகளைப் பட்டியலிடும் ஆலத்தூர் கிழார் இவற்றிற்குக்கூடக் கழுவாய் உண்டு ஆனால்,

“நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென”(புறம் 34)

என்று செய்நன்றி மறந்தோருக்குக்கழுவாயில்லை என்பார். சோழன் கிள்ளி வளவனை ‘மாமழை சொரியும் துளியினும் பலகாலம்; வாழ்க’ என்று வாழ்த்தியவர், கரூர்வேந்தனின் காவல் மரத்தைக்கிள்ளிவளவன் வெட்டியபோது ‘நாணுத்தகவுடைத்து’ என்று அஞ்சாது இடித்தும் உரைக்கிறார் (புறம்.36).

3.5 மாறுபட்ட சிந்தனை:-
போரும் அதன்வழி விளைந்த வீரமும் குறித்துப் பெருமிதமாகப்பேசும் புறநானூற்றில், கணியன் பூங்குன்றனின் பாடல் மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்தும். இந்திய நாட்டின் முன்னாள் முதன்மை அமைச்சர் இந்திராகாந்தி ஐ.நா.அவையில் பேசும் பொழுது எந்நாட்டுப்புலவர்,

“யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”

என்னும் பாடலை எடுத்துக்காட்டி அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின்வழி அனைவரையும் வியக்கச்செய்தார் என்பது வரலாறு. பூங்குன்றனின் இப்பாடலின் நிறைவில்,

“நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉம்”(புறம் 190)

என்னும் விதி குறித்த நிலையாமைச் சிந்தனையின் வெளிப்பாடாகும். இது குறித்து, “போரிலும் வீரப்புகழிலும் ஏற்பட்ட ஒரு சலிப்பும் அதன் காரணமாகத்தோன்றிய ஒரு நிலையாமை உணர்வும் இத்தகைய பனுவல்கள் தோன்றக்காரணமாகும். வீரநிலைக்காலச் சமூகத்தைத் திருப்பியவையாக இத்தகு கருத்துகள் பெற்ற வெற்றி, தொடர்ந்து தோன்றிய நீதிநூல்கள் பலவற்றிற்கு அடித்தளமாக அமைந்திருக்க வேண்டும்” என்று சங்க இலக்கியத்தில் புறப்பொருள் என்னும் நூலின் வழி (ப.319) தந்துள்ள கு.வெ.பாவின் கருத்து இவண் பொருந்தத்தக்கது.

4.1 மக்களியல்:-
மன்னராயினும் புலவராயினும் அவர்களின் முயற்சியாகவும் மக்களுக்காகவே. மக்களை நல்வழிப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சி மட்டுமன்றி, மக்களும் அவர்களைப்பெரிதும் மதித்து வந்துள்ளனர்.

4.2 நோயற்ற வாழ்வே:-
நாடு நலம்பெற நோயின்றி அனைவரும் வாழ மக்களும் மன்னரும் அவரவர் கடன்களை ஆற்றவேண்டும் என்னும் உயரிய கருத்தை உள்ளடக்கி, பிசிராந்தையார் தமது செய்யுளை அமைத்துள்ளார். நரையிலாமைக்குக் காரணம் பற்றிக் குறிப்பிடுகையில் மன்னன், பிள்ளை, பணியாளர், மனைவி என்று அனைவரும் அவரவர்களுக்குரிய கடன்களையாற்றுகின்றனர். அதனால் மனத்தில் எவ்விதச் சலனமுமின்றி நிறைவுவாழ்வு வாழ்ந்துவருவதால் கவலையில்லா மனிதனாய் முதுமையில்கூட முடியும் நரைத்தலின்றி வாழ்வதாக, அப்பாடலை யாத்துள்ளார் (புறம்.191)

4.3 நாடுநலம்பெற:-
சங்ககாலச் சமுதாயம் பரத்தமையைக்கண்டிக்காத சமூகமாக விளங்கியது. பரத்தமை ஒழுக்கத்திற்குப்பெரிதும் காரணம் ஆடவர்களே. ஆணாதிக்கச் சமூகம் என்பதால் அதனைக் கண்டிக்கத்தயங்கினார். வள்ளுவர் மட்டும் வெளிப்படக்கண்டிக்கிறார். ஆனால் அதனை மறைமுகமாக ஒளவையார் பின்வரும் புறநானூற்றுப்பாடல் வழி வெளிப்படுத்துகின்றார் என்று கருதலாம்.

நாடா கொன்றோ: காடா கொன்றோ:
அவலா கொன்றோ: மிசையா கொன்றோ:
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை: வாழிய நிலனே!(புறம்.187)

இதன்வழி ஒரு நாடு நல்ல நாடாக இருப்பது அச்சமூகத்தில் வாழும் ஆடவர்களைப் பொருத்தது என்று வெளிப்படுத்துவதன்வழி அக்கால ஆடவர் சமுதாயத்தின் ஒழுக்கக் கேட்டினைச்சாடுகிறார் எனலாம். இப்பாடலில் இக்கால நிலவமைப்பு வெளிப்படுவதை அறிந்து கொள்ளலாம்.

5.0 முடிவுகள்:-
புறநானூற்றை ஆய்ந்ததன்வழி பின்வரும் முடிவுகளைப்பெறலாம்.

⚫ சமூக மேம்பாட்டுக்கு அரசியலின் பங்கு அளப்பரியது.
⚫ மக்களைக்காப்பதை உயிராகவும் மானத்தை அதனினும் மேலானதாகவும் கருதியமை.
⚫ புலவர்களைக் குருவாக – அமைச்சராக – நண்பராகப் போற்றல்
⚫ பொருட்பெண்டிர் முயக்கம், புலவர் பாடாமை, மக்கள் பழிதூற்றல், இரவலர்க்கு ஈயாமை இழிவு என அஞ்சல்.
⚫ புகழுக்காக உயிரைவிடவும், துணிந்தமை; பழிக்காக உலகமே கிடைத்தாலும் பெறவும் மறுத்தமை.
⚫ எந்நிலையிலும் எதிர்ப்பில்லா, தவறா, விளம்பரமில்லா குறையாத விருந்தோம்பலைப் போற்றியமை.
⚫ பகை முடிக்கப்போர் நிகழ்ந்தாலும் அறவழியிலேயே நிகழ்த்தியமை.
⚫ என்பன போன்ற பலவற்றைப் புறநானூற்று மன்னர்கள் வழியும்.
⚫ மன்னர்களிடையே பகை தீர்க்கவும் மக்களின் குறைபோக்கவும் அஞ்சாது சென்று இடித்துரைத்தும், இணங்கிடவுரைத்தும்.
⚫ வறுமையிலும் செம்மை, பிறருக்கு வாரி வழங்கும் தன்மை
⚫ பொருளுக்காகப்பொய் கூறாமலும் மன்னனை நல்வழிப்படுத்தியமை
⚫ மக்களுக்கும் மன்னருக்கும் பாலமாக விளங்கியமை
⚫ என்பன போன்றவற்றை புலவர்கள் வழியும்…..
⚫ மன்னனே உயிர் அறமே வாழ்வுக்கு அடிப்படை, நல்ல சமூகத்திற்கு ஆடவர்களே பெரிதும் காரணம்.
⚫ அமிழ்தமாயினும் தனித்து உண்ணாமை
⚫ உயிர் கொடுத்தோர் என்பவர் உண்டிகொடுத்தோரே.

மேற்சுட்டியன உள்ளிட்ட பல, மக்கள் வழியும் பெறப்படும். இம்முடிவுகள் புறநானூற்றின் வழிப்பெறப்படும் கோட்பாடுகளாகக் கொள்ளக்கிடக்கின்றன. நாடாளும் மன்னரை கவிபாடும் புலவன், வாழும் மக்கள் அனைவரும் அறத்தைப் பின்பற்றுவதைக் கடமையாகக்கொண்டவர்கள் என்பது பொது நிலையில் அறிந்து கொள்ளலாம். இவையும் இவையோன்றை எண்ணற்ற பிறவும் புறநானூறு உணர்த்தும் கோட்பாடுகளாகும். இவற்றில் காலத்திற்கேற்ப கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளி வாழ்ந்தால் தனிமனிதன் குடும்பம் சமூகம் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

முனைவர் துரை.குணசேகரன்
தலைவர், இணைப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி. கல்லூரி,
மயிலாடுதுறை – 609 305.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கோட்பாட்டியல் நோக்கில் புறநானூறு

  1. அய்யா அவர்களின் புறநானூற்று ஆய்வு தொல் தமிழர் கோட்பாட்டியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளது. நல்ல பண்பட்ட வாழ்க்கையின் நெறியான கோட்பாடுகளுக்கு ஒத்த நிலையில் இருந்த தமிழர் வாழ்க்கையின் புறப்பதிவுகளை புற நானூறு எத்தகைய நிலையில் பதிவுசெய்திருக்கிறது என்பதை வேர் வரை சென்ற ஆழப்பதிவாய் எடுத்து அளித்துள்ளார்கள்.
    நன்றி.
    சு.விமல்ராஜ்,(சுவி)
    உதவிப்பேராசிரியர்,
    அ.வ.அ.கல்லூரி,
    மன்னன்பந்தல்-609305
    அலை:8220470590
    மின்:thamizhvimal@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *