இன்னம்பூரான்
ஜனவரி 1, 2016

innam

தற்காலம் பொற்காலமில்லை என்று நாம் யாவரும் அறிவோம். பொற்காலம் என்ற சொல்லே ஒரு மயக்கம். மிடாஸ் என்ற ஐதிக அரசன் தொட்டதெல்லாம் பொன் ஆனதால், பட்டினியில் வாடினானாம். நமக்கு வேண்டியதெல்லாம் நல்ல காலம். உழைப்புக்கேற்ற ஊதியம். மகவுகளுக்கு தரமான கல்வி. பொறுப்பும், காருண்யமும், திறனும் கூடிய மருத்துவம். ஒளிமயமான வருங்காலத்தை அளிக்கக்கூடிய தனிமனிதனின் ஆற்றலும், சமூகத்தின் பரந்த மனப்பான்மையும், சமுதாயத்தின் முற்போக்கு சிந்தனைகளும், தடம் மாறாத அரசும்.

நாம் நிதர்சனமாக அன்றாடம் கண்டும் காணாது விடுபவை: சுண்ணாம்பு காளவாயிலும், செங்கள் சூளையிலும் கொத்தடிமைகள். முறுக்கு பிழிவது சிறார்கள். தேநீர் ஆற்றுவது சிறார்கள். ஆரம்பக்கல்வி அரசின் பொறுப்பு. இலவசம். அதைத் தட்டிப்பறித்தது அரசியல் சாஸனத்தின் உள்ளுறை குறைபாடு. தற்குறியாக ( எழுதப்படிக்கத்தெரியாதவர்களாக) இறந்தது பல ஏழை தலைமுறைகள். அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் தரமான கல்வி அளிக்கப்பட்டது. அதை பிற்காலம் கல்வி தந்தைகள் சூறையாடியதற்கு யார் காரணம்? அக்காலம் பிரபலங்கள் கூட அரசு ஆஸ்பத்திரிகளுக்குத்தான் செல்வார்கள். தற்காலம், வீடு, மனை, வயற்காடு எல்லாவற்றையும் விற்றால் தான் ஏழைகள், காசை தட்டிப்பறித்து, அதன் பின்னர் பிரமாதமான சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளில், நிவாரணம் நாட இயலும். இது எல்லாமே நமது சமுதாயம் அழுகிப்போகும் சின்னங்களே.

பொது வாழ்வு என்றொரு துறை இருக்கிறது. பொது நலம் நாடுவோர்களின் தோணி, அது. மக்கள் யாவரும் அந்தத் துறையில் அனுபவம் பெறவேண்டும். தனது நேரம், செல்வம், உழைப்பு எல்லாவற்றிலிருந்தும் கடுகளவாவது பொது நலத்துக்கு உழைக்க வேண்டும். சாதாரணமாக, சராசரி மக்களுக்கும் பொதுநலசேவைக்கும் காத தூரம் என்பதை, சில நாட்களுக்கு முன்னால் தமிழ் நாட்டை அலக்கழித்த மழையும், வெள்ளமும், சகதியும் தகர்த்து விட்டது. சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் ஓடோடி முன்பின் அறியாதவர்களுக்கு உதவினார்கள். சாதிமதபேதம் முதலில் தகர்ந்தது. இளைய சமுதாயத்தின் முதிர்ந்த மனப்பான்மையை கண்கூடாகப்பார்த்தோம். தலை வணங்கினோம். யாவரும் சேவகனானோம். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற சொற்றொடர் தாரகமந்திரமானது.

இனி ஒரு விதி செய்வோம்.
பிறந்த குழந்தைக்கு, நாமே முன்னோடியாகத் திகழ்ந்து, பொதுநல சேவை பாடங்கள் நடத்தத் தொடங்குவோம். வளரும் சிறார்களுக்கு சிறிய சிறிய பொறுப்புகள் கொடுத்துப் பழக்குவோம்.

-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.quickmeme.com/img/30/3000818e21952986f174bf51237dd650fa11b000adf99846bc2699b9a0113dbb.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *