இலக்கியத்தில் கூந்தல்

சிங்கை கிருஷ்ணன்

 

*************************
  கூந்தல், மகளிரின் மங்கலப் பொருள்களான தாலி, வளையல், மஞ்சள்,குங்குமம்,பூ, தாலி சிலம்பு, மெட்டி முதலியவற்றைப் போன்று புனிதமானது.

பெண்கள் அணியும் புறப் பொருள்கள். கற்புடைய பெண்கள் இவற்றை அணிவதால் சிறப்பு உண்டாகிறது.
 
    ஆனால்…. கூந்தலோ, அவள் பிறக்கும்போதே அவளுடன் சேர்ந்தே பிறந்து, அவள் வளரும் போது தழைத்து நீண்டு அவளுடனே சேர்ந்து வளர்ந்து…. அவள் முதுமை அடையும் காலத்து தானும் நரைத்து அவளுடனே சேர்ந்து  மறையும் தனிச் சிறப்பு உடையது.
 
   பொதுவாக, இரு பாலார்க்கும் உரிய தலை மயிருள், குதிரைவாற் சாமை போன்றும், கமுகோலை போன்றும்.  மயில் தோகை போன்றும் அடர்ந்தும் தழைத்தும் நீண்டும் இருப்பதால் பெண்கள் தலை மயிரை ஓதி, குழல்,கூந்தல், கூழை, என்றும் கூறினர்.
 
 ஐம்பாற் கூந்தல் என்றும் அலங்கரித்தனர்.                 மயிலின் உச்சி போன்று சிறிதாகவும் சிறுமையானதாகவும் இருந்ததினால், ஆண்களின் தலைமயிர் குடுமி என்றும் குஞ்சி என்றும் கூறப் பெற்றது. கோவலன் தலை மயிரைக் ‘குஞ்சி’ என்றும், கண்ணகியின் தலைமயிரை ‘ வார்குழல் ‘ என்றும் குறிப்பிடும் வரிகளை              [சிலப்பதிகாரம்- மதுரை காண்டம்] காணலாம்.
‘கதுப்பு’ என்னும் சொல் ஆண் பெண் இரு பாலரின் தலை முடியை குறிக்கிறது. கூந்தலையும் மகளிரையும் நம் முன்னோர்கள் ஒன்றாக கருதினர்.அதனால்தான், மகளிரைத் தழுவுதலைக் கூந்தல் கொள்ளுதல் என்றனர். பிற ஆடவர் கை தம்கூந்தல் மீது படுவதைக்கூட கற்புள்ள மகளிர் ஒப்புவதில்லை.

 மாந்தர், கூந்தலை கோதி கிளர்ச்சி கொள்ளுதல் போல புறா, கோழி போன்ற பறவை  இனங்களும் அலகால் துணைகளின் சிறகை கோதி உணர்வு கொள்கின்றன.
 கணவன் உடன்  இருக்கும்போது மட்டும், கூந்தலுக்கு நறுமணம் தடவி, வகிர்ந்து வாரி மலர்ச் சூடி கூந்தலை அழகுபடுத்திக் கொள்கிறார்கள்.

 தலைவன் பிரிவின்போதும் மறைந்த பின்னும் உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்கும் மலர் சூடுதலை தவிர்க்கிறார்கள்.

 பெண்களை முதன்மைப் படுத்திக் கொள்ளும் காவியங்களே அதிகம். காரணம் காவியங்களுக்கு அழகு சேர்ப்பவர்கள் பெண்கள். அவர்களுக்கு அழகு தருவதோ,
அவர்தம் கூந்தல்.

 எல்லாக் காவியங்களும் காரிருங் கூந்தலைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. குறிப்பாக மகாபாரதத்தில் பாஞ்சாலியின் சபதம் காவியத்தின் மிக முக்கியப் பகுதி.பாஞ்சாலியின் சபதமாக கூந்தலே முதன்மை வகித்தது. கூந்தல், பெண்களின் மகிழ்ச்சி, அயர்ச்சி,  இன்பம், துன்பம்,சினம், வேட்கை முதலான மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாக கையாளப்படுகிறது.
 
 பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா ? இல்லையா என்ற சந்தேகத்திற்கு நக்கீரனும்,சிவபெருமானும் சங்க காலத்தில் மாபெரும் பட்டிமன்றம் அந்நாளில்நடந்தது, ” கொங்கு தேர் வாழ்க்கை ” எனத் தொடங்கும் பாடல் மூலம்.
   ” காரிருங் கூந்தல்…. ”
   ” குழல்போற் கமழும் மதுமலரே…”
   ” கருங்குழல் போலுளவோ விரைநாறுங் கடிமலரே…”
   ” மங்கை வார்குழல்போல் நாற்றமுடைய வுளவோ வறிவு நறுமலரே…”
 என்றெல்லாம், மழைக்கண் மாதராரின் நறுங்கூந்தலைப் புகழும் பாண்டிக்கோவை,
மலரை விட கருங்கூந்தல் மணம் மேம்பட்டது என்று கூறுகிறது.

 

 கோவலன், கண்ணகியை மறந்து மாதவி  இல்லம் சென்றமையால் கண்ணகி தன் கூந்தலுக்கு நெய் இடுவதில்லை; அதனால் கூந்தல் மணத்தை  இழந்தது. இதனை  இளங்கோவடிகள் ‘ மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப ‘ என்று கூறுகிறார்.

 அதே சிலம்பில், கண்ணகியின் கூந்தல் ஒப்பனையை  ‘ ’புரிகுழல் அளகத்து ‘என்றும், ‘ பல்லிருங் கூந்தல் சில்மலர் அன்றியும் ‘ என்றும், ‘ தாழிருங் கூந்தல்தையால் ‘ என்று நீண்டு தாழ்ந்த கரிய அவளுடைய கூந்தலை புகழ்கிறார்.

கம்பரின் காவியத்தில் கூட , மண்டோதரி புலம்பல் மூலம் ஒரு பாடல் பாடுகிறார். இராவணன் மரணத்தின் போது:  

 

” வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த    திருமேனி மேலும் கீழும்   

 எள்  இருக்கும் இடன்  இன்றி உயிர் இருக்கும்    இடன் நாடி இழைத்த வாறே?
   ‘கள்  இருக்கும் மலர்க்கூந்தல்’ சானகியை    மனச்சிறையில் கரந்த காதல்   

உள்  இருக்கும் எனக்கருதி உடல் புகுந்து    தடவிதோ ஒருவன் வாளி!”
 
 சிவனுடைய சடை முடியில் வெள்ளெருக்கம் பூ  இருந்தது.அது மயக்கத்தக்க பூவோ, மயங்கத் தக்க சடை முடியோ அல்ல;

ஆதலால்,  இராவணன் மயங்காது அங்கே வீரம் காட்டினான்.சானகியின் கூந்தலோ மலர்க் கூந்தல்; அதிலே கள் இருந்தது.அதனால்  இராவணன் மயங்கினான்; மடிந்தான்.

சங்க கால  இளங்கீரனார் என்னும் புலவர் குறுந்தொகையில் கூந்தலைப் பற்றிய ஒரு பாடல் :

 
ஊழின் வலிமையால் தலைவியைக் கண்டு காதல் கொண்டான், தலைவன். அவள் அருகில் நின்று பேசும்போது அவளுடைய கூந்தலின் தன்மையை உணர்ந்து கூறுகிறான்.”

 

யாநயந் துறைவோன் தேம்பாய் கூந்தல்                 

வளங்கெழு சோழர் உறந்தைப் பொருந்துறை                 

 நுண்மணல் அறல் வார்ந்தன்ன                 

நன்னெறி யவ்வே நறுந்தண்ணியவே. ”
 
” யான் விரும்பும் தலைவியுடைய கூந்தல் நாள் மலரின் தேன் பாயும் கூந்தல்; வளமிக்க சோழனுடைய பெரிய துறையில், நுண்மையான கரு மணல் நீண்டு   படிந்துள்ளதைப் போல் அடர்ந்த நெறிப்பை உடையது;  நறுமணமுள்ளது; மிக்க குளிர்ச்சியுமுடையது ”
 
” மென்சீர்க்கலி மயிற்கலாவத் தன்ன   இவள் ஒலிமென் கூந்தல் உரியவா , நினக்கு…
நல்ல நீண்ட கூந்தல் , மயிலின் தோகைப் போலிருக்கும் என்கிறார், கபிலர்.

 

நற்றிணைப் பாடல் :
                                              

 ” அணிகிளர் கலாவ மைதுவிரித் தியலும்                                             

  மணி புரை யெருத்தின் மஞ்ஞை போல நின்                                                              

வீபெய் கூந்தல் வீசுவளி யுளர ”
     என்று விரிகிறது.

சாத்தனார் , நரைத்த பின்னுருங்கூடப் பெண்டிர் கூந்தல் நீளம் குறைவதில்லை; அது நன்கு நீண்டு விளங்குவதாகவே இருக்கும் என்பதை ,
                ” நன்னெடுங் கூந்தல் நரை மூதாட்டி …’ என்று விளக்குகிறார்.

அறுபது வயது ஆகிறது. அவள் தலை முழுவதும் நரையாகியது. இளமையும், காமமும் இருந்த  இடம் தெரியாமல் மறைந்தது.

அதனை, 
        ” ஆறைந் திரட்டி யாண்டுனக் காயதென் ,
                  நாறைங் கூந்தலு நரைவிராவுற்றன,
                      இளமையும் காமமும்  

                        யாங்கொளித் தானவோ ? ”
                                                                                                                — என்கிறது மணிமேகலை. 
 இன்னொரு நரை மூதாட்டியின் தலை,

      ‘ தண்ணறல் வண்ணந் திரிந்து வேறாகி                         

        வெண்மணலாகிய கூந்தல்

 

 மணிமேகலை. மேற்கூறிய பாடல் வரிகளிலிருந்து, கரிய அடர்ந்த நீண்ட கூந்தலிருக்கும்  இளம்பருவத்தும் அரிவை தெரிவையாகிய நடு நிலை பருவத்தும் மட்டுமே, மகளிர் காதல் வயப்படுகிறார்கள் என்பதையும், இளமை மறைந்து முதுமை உற்ற போது காமமும் மறைந்து நரை முடியினர் ஆகின்றனர் என்பதையும் உணரலாம்.
 
 ‘பரட்டை தலையா’ என்று கவுண்டமணி செந்திலைப் பார்த்து கூறுவது சங்க காலத்திலும்உண்டு. வாராத தலைமுடியை  இப்போது போன்று , வாராத தலைகளும் அந்நாளில்இருந்தது போலும்.

படிய வாராமல் சிதறிக் கிடக்கும் தலை முடியைப்  ‘ பாறு மயிர் ‘ என்றுபுறநானூற்றுப் பாடல் (374) கூறுகிறது.
 ‘மயிர்’ என்ற சொல்லை  இன்றும் கீழான ,  இழிவு சொல்லாக பயன்படுத்துகிறார்கள்.தலையிலிருந்து பிறர் எடுக்காமல் தானாகவும் விழும் தன்மை படைத்தது.மயிர், உயர்ந்த  இடத்திலிருந்து விழும். மேலே போவதில்லை. கீழே வீழ்ந்து கீழ்மை அடைகிறது. அதனால்,  இழிந்த தன்மை பெறுகிறது.
 ‘எண் சான் உடம்புக்கு தலையே பிரதானம்’ .மனித உறுப்புகளுள் தலையானது, தலை!அவ்வளவு உயர்ந்த இடத்திலிருந்த மயிர் ஒரு முறை விழ்ந்தால், மீண்டும் அது உரிய  இடத்தில் பொருத்த  இயலாது.

 நற்குடியில் பிறந்தோர், பெருமை உயர்மைக்குரிய தங்கள் நிலையிலிருந்து எக்காரணம் கொண்டு தாழ்ந்தாலும் , உயிர் வாழாமையை ‘மானம்’ எனப்படும்.அத்தகைய சிறப்புக்குரியவர்கள் மானம் ஒருமுறை  இழக்கப்பட்டால், எக்காரணம் கொண்டும் அக்குடி மீண்டும் சிறப்பு ஏற்படாது.  இழந்தது  இழிந்தது.
மாந்தர் மட்டுமல்ல, மிருகங்களில் கவரிமான் தன் மயிர்  இழப்பின் உயிர் நீக்கும் தன்மைப் பெற்றது.
எனவேதான்… மானத்தையும் மயிரையும் ஒப்பிட்டார்கள், தெய்வப் புலவர்கள்.
 
கூந்தல், மாந்தர் உடலுடன் மட்டும் அல்லாமல், பல்வேறு வகையில் மனித வாழ்க்கையுடன்இணைந்து, இன்ப துன்பங்களில் இரண்டறக் கலந்து அழகிய காட்சி பொருளாக அமைந்துள்ளது.

கள்ளிருக்கும் மடவார் மலர் கூந்தல்.

………………………………….
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

 

 

படத்திற்கு நன்றி

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.