மார்கழி மணாளன் – 25  கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள்  

0

 க. பாலசுப்பிரமணியன்

2df0377e-26f3-47a1-8153-db2f1bdcacc0

சிரஞ்சீவியானாலும் சிரம் தாழ்த்தி வாழ்ந்தான்

சிந்தையிலே நின்றான் அனுமனுக்கு ஸ்ரீராமன்

சிதறாத அறிவுடனே சீதையைக் கண்டவன்

சிலையாகிக் காலடியில் அன்போடு அமர்ந்தான் !

 

வானுயரப் பறந்தாலும் பணிவுக்கு இலக்கணமே

வில்லோனின் உள்ளமதை வென்றிட்ட வித்தகனே

வைதேகி ராமனின் அருள்பெற்றது  கபிஸ்தலமே

வருகின்ற துயர்நீக்கும் வள்ளல்களின் மன்னவனே  !

 

மாமுனியே மனம்நொந்து மதக்களிராகச் சாபமிட

மன்னவன் மண்டியிட மாமுனி செப்பிட்டான்

“மாதவனை மனம்நிறுத்தி மலர்கள் தூவிடுவாய்

மாமன்னா! மாலனால் பெற்றுவிடுவாய் சிறப்பு !”

 

பூபாள நேரத்தில் பூப்பறிக்க  வந்தது யானை

புலனறியா வலியினிலே நோக்கியது மண்ணை

காலிழுத்து உயிர்பறிக்க முனைந்தது முதலை

காத்திடக்  கண்ணனை அழைத்தது நல்வினை !

 

அடியவர் குரலுக்கு அடியவன் ஆண்டவன்

அன்பினில் அடங்கிய ஆதவன் மாதவன்

கருடனில் ஏறினான் கருணையைப் பகிர்ந்திட

கால்களுக்கு கருணை கஜேந்திரனுக்கு மோட்சம் !

 

ஆனைக்கும் கபிக்கும் கிடைத்தது ஆண்டவன் காட்சி

அருந்தவ முனிவர்க்கும் கிடைக்காத அருளின் மாட்சி

அன்பினால் இணைந்திடும் உறவுகளுக்கு அவன் சாட்சி

அன்னையாய் தந்தையாய் நண்பனாய் நாரணன் ஆட்சி !

 

சூதில்லா மனமும் சுவை ஞானப்பொருளும்

மாசில்லாக் காற்றும் மங்களமும் வாழ்மரபும்

மந்தாரப் புன்னகையும் மடியாத ஈகையும்

மங்காமல் தந்தருள்வாய் மார்கழி மணாளனே !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *