தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்

1

 

தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள், ஜெர்மனியில் அனைத்துப் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளே , தங்க நகையே அணியாத நாடு ஜெர்மன், வாழ்க்கையில் கல்வி தான் நண்பன் என ஜெர்மன் ஆராய்ச்சியாளர் பேச்சு

 

suba3

தேவகோட்டை:
“வாழ்க்கை முழுவதும் கல்விதான் சிறந்த நண்பனாக இருக்கும்,’ என ஜெர்மனி ஆராய்ச்சியாளர் சுபாஷினி ட்ரெம்மல் பேசினார்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ்வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.

விழாவில் தமிழ் மரபு அறக் கட்டளை துணைத்தலைவரும் , கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான ஜெர்மனியில் வசிக்கும் மலேசியத் தமிழர் சுபாஷினி ட்ரெம்மல் மாணவர்களிடையே பேசுகையில், “”தமிழகத்திற்கு ஒரு முறை வந்தபோது, கல்வெட்டுகளில் கிறுக்கல்கள் இருந்தது. அதில் உள்ளதைப் படிக்க முயற்சித்தபோது கல்வெட்டு ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தது. ஜெர்மனியில் இலத்தீன் மொழியில் கல்வெட்டுகள் உள்ளன. அங்குள்ள பாடபுத்தகங்கள் பெரிய அளவிலும், பெரிய படங்களுடன் உள்ளன. ஜெர்மனியில் எல்லா பள்ளிகளும் அரசுப் பள்ளிகள்தான். ஆங்கிலம் வந்ததற்கு ஜெர்மன் மொழிதான் காரணம். பள்ளிகளில் வகுப்புகள் 1ம் வகுப்பு, 2ம் வகுப்பு, 3ம் வகுப்பு, 4ம் வகுப்பு எனவும்,பிறகு விரும்பிய பாடங்களை படிக்கும் வண்ணமும் வகுப்புகள் இருக்கும். 5 வது வகுப்புக்கு இரண்டாவது மொழியாக இத்தாலி, இலத்தீன் என எதையாவது தேர்ந்தெடுத்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

suba2

பிறகு, ஜெர்மனியில் வசந்த காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் என நான்கு பருவ காலங்கள் உள்ளன. ஜெர்மனியில் கோதுமை, கம்பு, சோளம், கடுகு அதிகமாகப் பயிரிடப்படுகிறது. கடுகில் இருந்து எண்ணெய், எரிவாயு தயாரிக்கப்படுகிறது. அங்கு 800 ஆண்டுகள் பழமையான கீல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த ட்ரையர் என்ற பழமையான தேவாலயம் உள்ளது என்றார். மாணவ மாணவிகளுக்கு ஜெர்மனிக்குச் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. தமிழகத்திற்கு இது வரை 16 முறை வந்துள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் மிகவும் பிடித்த இடம் திருவண்ணாமலை அருகே சமண கோவில் உள்ள திருமலை என்கிற இடம் தான் என்று கூறினார். ஜெர்மனியில் பிடித்த இடம் பெர்லின் எனக் கூறினார்.

தாய் மொழியில் பயின்றால் மட்டுமே அனைவரும் நல்ல நிலைமைக்கு வர இயலும் என்று கூறினார். கல்வி கற்பது வாழ்வில் இன்றியமையாதது. கல்வி கற்பது பல வாழ்வியல் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும். சிறந்த கல்வியாளர்களாக வர வேண்டும். வாழ்க்கை முழுவதும் பல வழிகளிலும் கல்வி தான் சிறந்த உற்ற நண்பனாக இருக்க முடியும். வீதிகளில் பல இடங்களிலும் பார்க்கும் போது ஆங்காங்கே குப்பை கிடக்கிறது. குப்பைகளை கொட்டக் கூடாது. அதற்கான இடங்களில் கொட்ட வேண்டும். யாரேனும் குப்பையைக் கொட்டினால் அதை எடுத்து தொட்டியில் போடவேண்டும். குப்பைகளைக் கண்ட இடங்களில் போட்டால் ஏற்படும் கெடுதல்களை பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இளம் வயதிலேயே கீரை போன்ற சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்றார்.

suba1

தனலெட்சுமி, பரமேசுவரி, சௌமியா, சந்தியா, காயத்திரி, முனிஸ்வரன், ஜெகதீஸ்வரன், அய்யப்பன் உட்படப் பல மாணவ, மாணவியரின் கேள்விக்கு பதிலளித்தார். விழாவில் எல்.ஐ.சி., மேனாள் கோட்ட மேலாளர் வினைதீர்த்தான், மணலூர் அழகு மலர் பள்ளி தாளாளர் யோகலட்சுமி, திருச்சி கடல் ஆராய்ச்சி மாணவர் அப்துல் ரகுமான் ஆகியோர் பேசினர். ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் :
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டுத் தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷிணி ட்ரம்மல் மாணவர்களுடன் ஜெர்மன் நாடு தொடர்பாக கலந்துரையாடினார்.

L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
09786113160.
E-Mail : jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள்

  1. இது கல்வியாளர்களுக்குப் புரிகிறது. தமிழக மக்களுக்கும் தமிழக அரசுக்கும் புரியவில்லையே!
    சேர்மன் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகள்,சீனா,சப்பான் போன்ற பல நாடுகள் தாய்மொழிக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த நாடுகளில் படிப்பவர்கள் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் படித்து சிறப்பாக ஆங்கிலேயர்களை விட சிறப்பாக ஆங்கிலத்தைக் கையாளுகிறார்கள்.

    ஆனால் தமிழகத்தில் ஆங்கில மொழி மூலம் பயின்றும் ஆங்கிலத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள். வெளி நாடு வந்து இரகசியமாக மூன்று மாத இன்டென்சிவ் ஆங்கில மொழி கற்கிறார்கள். மக்களும் அரசும் கல்வியாளர்களை கலந்து சிந்தித்து செயல்படுவது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *